2009ஆம் ஆண்டிற்கான வேதியியல் துறை கண்டுபிடிப்புக்கான நோபல் விருது தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டீட்ஜ் மற்றும் அடா யோனத் ஆகியோருக்கு அவர்களின், டி.என்.ஏ. கட்டளைகள் எவ்வாறு உயிர் பெறுகின்றன என்பது குறித்த ஆய்வுக்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இவர்களின் ஆய்வு தொற்று நோய் பரவலைத் தடுக்க உதவும்.
இவர்கள் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரிபோசோம்களி்ன் அணு கட்டமைப்பை முதன்முதலாக உலகுக்குத் தெரியப்படுத்தியவர்கள் ஆவர்.
இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் எம்.ஆர்.சி. ஆய்வகத்தில் வேதி உயிரியல் துறைத் தலைவராக இருக்கும் அமெரிக்க குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (57 வயது) தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1952ஆம் ஆண்டு சிதம்பரத்தில் பிறந்த இவர், 1971ஆம் ஆண்டு பரோடா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் இளையர் பட்டப்படிப்பு படித்தார். பின்னர் 1976ஆம் ஆண்டு ஓஹியோ பல்கலைக் கழத்தில் இயற்பியல் ஆராய்ச்சியில் டாக்டரேட் பட்டம் பெற்றார்.1999ஆம் ஆண்டு முதல் எம்.ஆர்.சி. ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டீட்ஜ் யேல் பலைக்கலைக் கழகத்திலும், இஸ்ரேலைச் சேர்ந்த அடா யோனத் இஸ்ரேலிலும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் மூவருக்கும் பரிசுத் தொகையான 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்று நோபல் பரிசுக் குழு இன்று அறிவித்துள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|







