நோய்க்குறியீடுகளைக் கண்டறிய நாம் பொதுவாக மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் சில மில்லிலிட்டர்கள் குருதி வழங்கி இருப்போம். பின்னர் பரிசோதனைக் கூடப் பணியாளர்கள் அக்குருதித் துளிகளை ஆய்வு செய்து நோய்க்குறியீடுகளை மருத்துவருக்கு அளிப்பர். நோய்க்குறியீடுகளை வைத்து மருத்துவர் பொருத்தமான மருத்துவத்தை முடிவு செய்வார்.
இந்த நிலை வெகுவிரைவில் மலையேறப் போகிறது! ஆம் மருத்துவர் நம்மைப் பார்க்கும் அந்த தருணத்திலேயே நோய்க்குறியீடுகளைப் பரிசோதனைக் கூடம் செல்லாமலே அறிந்து மருந்துகளை முடிவு செய்து மருத்துவ முறையைத் தொடங்க இனி இயலும்.
ஆம் ஐபிஎம் நிறுவனத்தின் ஜூரிக் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட நுண்சில்லுகள் உடலில் பொருத்திய சில நொடிகளில் நோய்க்குறியீடுகளை அறிவிக்க வல்லன. இந்த நுண் சில்லுகள் உடலில் பொருத்தப்படும் போது, சில மைக்ரான்கள் தடிமன் உள்ள தந்துகிகளில் ஒரு மைக்ரோலிட்டர் அளவு மட்டுமே குருதி எடுக்கப்பட்டு அது பல்வேறு நிலைகளைக் கடக்கிறது.
குருதி கசிந்து வழியில் வைக்கப்பட்டுள்ள எதிர்ப்பொருள்களுடன் வினைபுரிந்து பல்வேறு நிற மாற்றங்கள் மூலம் ஒளிர்வதைப் பொறுத்து நோய்க்குறியீடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் மருத்துவர் சில நொடிகளில் சோதனை முடிவை அறிந்து மருத்துவத்தை உடன் தொடங்க இயலும். மருத்துவ ஆராய்ச்சியில் இது மிகப்பெரும் சாதனை என்றால் மிகையில்லை.

| < முந்தையது | அடுத்தது > |
|---|







