வணங்காமுடி பதில்கள் (25-11-2009)

E-mail அச்செடுக்க

 

 

 

குரங்குகள் ஏன் வாழைப்பழத்தை உரித்துச் சாப்பிடுகின்றன? - அபு

கோமாளிகளை பந்துவைத்த மூக்குடனே பார்த்துப் பழகியதால் குரங்குகளையும் வாழைப்பழத்துடன் சேர்த்தே பார்க்கிறோம்.


கிழங்குகளையோ காய் மற்றும் கொட்டைகளையோ உண்பதைவிட எளிதாக உண்பதற்கு வசதியாகவும் சுவையாகவும் இருப்பதால் குரங்குகள் வாழைப்பழத்தை விரும்புகின்றன.விலங்கியல் பூங்காவிலோ வீடுகளிலோ வளர்க்கப்படும் குரங்குகளுக்கு வாழைப்பழத்தையே அதிகம் நாம் கொடுக்கிறோம். மனிதர்கள் செய்வதைப் பார்த்தே அவை செய்கின்றன.


நாம் வாழைப்பழத்தை உரிப்பதைப்போல் காம்பிலிருந்து குரங்குகள் உரிப்பதில்லை. மாறாகப் பழத்தின் கீழ்ப்புறமிருந்தே உரிக்கும் என்பதைக் கவனித்துள்ளீர்களா?




எல்லைதாண்டிய பாகிஸ்தானுக்கு இருந்த எதிர்ப்பு, எல்லைமீறும் சீனாவுக்கு இல்லையே? - ஜமால்

இந்தி சீனி பாய்பாய் எனும் முழக்கம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லையா நீங்கள்?


பாகிஸ்தான் பங்காளி!


சீனா அண்டை வீட்டான்!


அதுதான் டிப்ளொமஸி!




ஒபாமாவின் செல்வாக்கு தேய்கிறதாமே? - அதிரை ஷாகுல்

ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்!




காங்கிரஸ் வெற்றி பெறுமிடங்களில்லாம் ராகுல் காந்தி இளம் எம்.எல்.ஏ / எம்.பிக்களைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே. 'இளம்' என்பதற்கு காங்கிரஸின் வரம்பு/அளவுகோள் என்ன? - சாருமதி

ராகுலின் வயது!





ஸ்டாலின் முதல்வராகும் பட்சத்தில் துணைமுதல்வர் பதவிக்குப் யார் பொருத்தமானவர்? - நடேசன்


முதலில் ஸ்டாலின் முதல்வராகட்டும் பார்ப்போம்!





விருதுமேல் விருதுகளை அள்ளிக் குவிக்கும் முதல்வர் கலைஞருக்கு வணங்காமுடியின் அறிவுரை என்ன? - நடராசன்

"குறியெதிர்ப்பை நீரதுடைத்து" எனும் குறள் வரிகளை நினைவு கூர்க!


வணங்காமுடி அறிவுரை சொல்லும் அளவுக்குக் கருணாநிதி இல்லை. அவருக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் "கலைஞர்" எனும் விருதுக்கு நிகர் இல்லை!





மத்திய அமைச்சராவதற்கு முக அழகிரிக்குக் கருணாநிதியின் மகன் என்பதைத் தவிர வேறு என்ன தகுதி உள்ளது? - வித்யா

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியையே இந்திய அரசியல் சட்டம் வரையறுத்துள்ளது.


இப்போது இந்தியாவில் இப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த எத்தனை பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர்?


அப்படியிருக்கையில்,


கருணாநிதியின் மகன் என்பது தகுதிக்குறைவன்று!


அவரின் மகன் என்பதால் அமைச்சராகக் கூடாது என்பது முறையில்லை.




துணைமுதல்வர் என்ற பதவி தமிழகத்திற்குத் தேவையா? - கர்ணன்

அரசியல் சட்டம் அனுமதிக்கிறது; அமைச்சரவை ஒப்புக் கொள்கிறது; உங்களுக்கென்ன?


துணைமுதல்வர் பதவியால் முதல்வரின் வேலைப்பளு குறைவதோடு ஸ்டாலினின் அணுகுமுறையால் பணிகள் வேகம் பிடித்தால் தமிழ்நாட்டுக்கு நன்மைதானே?




அதிமுக கூட்டணியிலிருந்து பெரும்பாலான கட்சிகள் கழன்று கொண்டபோதிலும் வைகோ விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டு இருப்பது எதைக் காட்டுகிறது? - மணிமாறன்

வேறு எங்கும் இடம் கிடைக்காது என்பதாலும் ஜெயலலிதாவுக்கு இலவசமாக ஒரு பி.ஆர்.வோ தேவைப்படுவதாலும் இப்போது வைகோ அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார்.


ஜெயலலிதாவின் "மூட் அவுட்" ஆகும்போது வைகோவும் கூட்டணியில் இருந்து "அவுட்"ஆவார்!




ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் முல்லைப் பெரியாறு பிரச்சினையை எப்படி அணுகி இருப்பார்? - சீதாராமன்

இதைவிட மோசமாக!


வல்லுநர்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் அரசியல் ஆதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, மாநில உணர்வுகளைத் தூண்டிவிட்டு பிரச்சினையைத் திசைதிருப்புவார்.



தாத்தாவும் பேரர்களும்தான் ராசியாகி விட்டார்களே, கலைஞர் டிவி இனியும் தேவையா? - காதர்

புது டீவீ சானல் தொடங்குவதற்காகத்தான் அந்தச் சண்டையே திட்டமிடப்பட்டது என்றால் நம்பவா போகிறீர்கள்?



தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றபின் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைகள் யாது? - தமிழன்பன், திருச்சி

ஒன்றுமில்லை!


இதைச் சொன்னால் தேர்தலில் வாக்குகள் கூட விழா!


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுக்க எனக்கு வக்களியுங்கள் என விருதுநகர்த் தொகுதி மக்களிடம் கேட்ட வை.கோவை அத்தொகுதி மக்கள் புறக்கணித்து விட்டனர்.


Preach religion to the starwing million is a sin எனச் சொன்னார் விவேகானந்தர்.


மக்களைப் பாதிக்கும் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லாமல், செம்மொழி, வெம்மொழி என்று பேசினால் மக்களிடம் எடுபடாது.



கடாரம் கொண்டான் என்ற பெருமை கொண்ட தமிழன் ஏன் இப்போது சென்ற இடங்களில் எல்லாம் அடி வாங்குகிறான்? - கயல்

சாவு வீரனுக்கு; சரித்திரம் மன்னனுக்கு!


கங்கை கொண்டான், கடாரம் வென்றான்,கனக,விசயனின்களைக் கல் சுமக்க வைத்தான், இமயத்தில் விற்கொடி பறக்க விட்டான் என்றெல்லாம் பழம்பெருமை பேசிக் கொண்டு யதார்த்தம் அறியாமல் வாழ்ந்தால் அடி வாங்குவான்தான்.


ஆனால் நீங்கள் சொல்வதுபோல் அத்தனை மோசமில்லை நிலை.




இலக்கியங்களில் பாரதி பாடினான், கண்ணகி எரித்தாள் என்றிருக்க கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் அவன் அவள் என்று குறிப்பிடாமல் இருப்பது ஏன்? - சூரியபிரகாசம்

ஒருமை விகுதி "அன்/அள்." பன்மை விகுதி "அர்."


கம்பன் ஏமாந்தான் என்று பாடலெழுதிய கவிஞனையும் எழுதியவர் என்று குறிப்பிடுவது இன்றைய மரபு.


மதிப்புப் பன்மை அல்லது இரட்டைப் பன்மை என்று இதைக் குறிப்பிடுவர்.


கம்பன் "ராமன்" என்று குறிப்பிட்டிருக்க , இன்று "ராமர்" என்று மாற்றியது யார்?


பாண்டியப் பேரரசனைத் "தேரா மன்னா" என்று கண்ணகி அழைத்தாள்.


இன்று ஒரு "லட்டர்பேட்" கட்சியின் கிளைச் செயலாளன் என்பவனைக் கூட, மரியாதைக்குரிய வட்டச் செயலாளர் அவர்களே எனஅழைத்திட வில்லையேல் அக்கட்சி பிளவுறும் :-))




காதல் என்பது தொழிற்பெயரா ஐயா? - ஜோதி


ஒரு தொழிற்பெயர்ச் சொல்லின் ஈற்றிரு எழுத்துகள் 'தல்' என அமைந்தால் அது தல் விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.


ஆடல் > ஆடு+தல்


பாடல் > பாடு+தல்


காதல் எனும் சொல்லில் "தல்" இருப்பதால் அதைத் தொழிற்பெயர் என்று தவறாக நினைத்து விட்டீர்கள் போலும்.


வேண்டுமானால், உங்களுக்காகக் காதலுக்குள் ஓர் ஆ சேர்த்து "காஆதல்" எனச் சொல்லலாம்.


"கா" எனும் ஒருசொல் ஒருமொழிக்கு, "சோலை" எனப் பொருள்.


வரண்ட வாழ்க்கை, காதல் புகுந்து சோலை ஆனது என்பதை, காஆதல் எனச் சொல்வதற்கு(ம்) தமிழில் இப்படி ஒரு குறுக்கு வழி இருக்கிறது.


"கா... ஆ... என ஏன் ஓவரா நீளுது?" என யாராவது கேட்டால், அஃது, "அளபெடை" என்று கூறிச் சமாளித்து விடலாம்.



 

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

உற்சாகத்தொடர்

தலையங்கம்

காலண்டர்

< நவம்பர் 2009 >
M T W T F S S
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 26 27 28 29
30            

NEWS Search!