
சென்னை : பாபர் மசூதி இடிப்பு தினமான (டிசம்பர் 6) இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லீம் அமைப்புகள் பல கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவற்றை மாநிலம் முழுவதும் நடத்தின. தமுமுக, இதஜ, ஜமுமுக, இஜக உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் அமைப்புகளின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மாநிலச் செயலாளர் மவுலானா நாசர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன் பின்னர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரின் தடுப்பை மீறி அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தமுமுகவின் தலைவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தென் சென்னை மாவட்ட செயலாளர் யூனுஸ், வட சென்னை மாவட்ட செயலாளர் ஹனீபா முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நுங்கம் பாக்கம் சாலை கிருஷ்ணம்மாள் தெரு அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். பாபர் மசூதி வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், சம்பவத்துக்கு காரணமான இந்துத்துவ அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிட்டனர்.
பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பனகல் மாளிகை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே இஸ்லாமிய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் அக்ரம்கான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



It will come the law of allahu, there is only one solution is islam way.