தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் சினிமா உலகினர் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டுவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.தமிழ் சினிமாத் துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கி இருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவை காண்பதற்காக மதியத்திலிருந்தே மக்கள் அங்கு கூடத் தொடங்கினார்கள். அந்த பகுதி முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளித்தது.
விழாவின் தொடக்கமாக, நடிகர் - நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, முதல்வர் கருணாநிதி மாலை 5 மணிக்கு விழா அரங்கிற்கு நடிகர்கள் அமிதாப்பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன் வந்தார்.
முதல்வர் கருணாநிதியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், அஜீத்குமார், விக்ரம், விஜய், சூர்யா, விஷால், ஆர்யா, பார்த்திபன், ராதாரவி, விஜயகுமார், கவிஞர் வைரமுத்து, டைரக்டர் பாரதிராஜா உள்பட திரையுலகத்தினர் அனைவரும் திரண்டு வந்து விழாவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை காண முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தியம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி எம்.பி., துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் ஆவுடையப்பன் உள்பட அமைச்சர்கள் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில், கருணாநிதி எழுதிய திரைப்பட பாடல்கள் சிலவற்றை தொகுத்து சபேஷ்-முரளி, எஸ்.ஏ.ராஜ்குமார் `ரீமிக்ஸ்' செய்து வழங்கினார்கள். கவிஞர் பா.விஜய் எழுதிய ஓரங்க நாடகத்தில் சத்யராஜ், வாகை சந்திரசேகர், கோவை தம்பி, பா.விஜய் ஆகியோர் பங்கேற்று நடித்தனர். நடிகர் அலெக்சின் மேஜிக் ஷோவும் இடம் பெற்றது.
கங்கை அமரன் எழுதிய பாடலை யுவன்சங்கராஜா, கார்த்திக்ராஜா, பவதாரணி, வெங்கட்பிரபு ஆகியோர் மேடையில் பாடினார்கள். எஸ்.வி.சேகர், வடிவேல், விவேக், கஞ்சா கருப்பு, சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி ஆகியோர் பங்குபெற்ற நகைச்சுவை நாடகங்களும் இடம்பெற்றன.
நடிகைகள் தமன்னா, நயன்தாரா, சினேகா, ரம்பா, விஜயலட்சுமி, ரீமாசென், சந்தியா, தேஜாஸ்ரீ, பூனம்பவ்ஜா, கீர்த்திசாவ்லா, சுனைனா, பூர்ணா, மீனாட்சி, ஷம்மு, மோனிகா, நடிகர்கள் கார்த்தி, ஸ்ரீகாந்த், பரத், ஜெயம் ரவி, கிருஷ்ணா, லாரன்ஸ், ஜீவா, ரமேஷ், ஹரிகுமார், பிரசன்னா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சென்னை மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கூட்டமைப்பு, தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனை சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



