புதுதில்லி: நெசவாளர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். நேற்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது தயாநிதி மாறன் இந்தத் தகவலை தெரிவித்தார்.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ததைப் போல நெசவாளர்களின் கடன்களையும் ரத்து செய்து அவர்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. இப்போது இந்த யோசனை நிதி அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள நெசவாளர்கள் எண்ணிக்கையையும் அவர்கள் அரசு வங்கிகளில் வாங்கியுள்ள கடன் தொகை போன்ற விவரங்கள் திரட்டப்படுகின்றன. உரிய நேரத்தில் இது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றார் மாறன்.
நெசவாளர்களுக்காக அரசு தொடங்கிய இன்சூரன்ஸ் திட்டத்தை கடந்த ஆண்டு 17 லட்சம் நெசவாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த ஆண்டு இன்சூரன்ஸ் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட நெசவாளர்களின் எண்ணிக்கை 18 லட்சம் என்ற மாறன் இந்தியா முழுவதும் 25.24 லட்சம் கைத்தறி உற்பத்திப் பிரிவுகள் உள்ளன என்றும் கேரளம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள சிலவற்றைத் தவிர பிற மாநிலங்களில் இவை செயல்படுகின்றன என்றும் கூறினார்.
கேரளத்தில் 68 கைத்தறி கூட்டுறவுச் சங்கங்களும் ஒரிசாவில் 733 கைத்தறி கூட்டுறவுச் சங்கங்களும் செயல்படவில்லை என்றார்.உலகம் முழுவதும் காணப்படும் பொருளாதாரத் தேக்க நிலையால் 2008-09 ஆம் ஆண்டில் கைத்தறி உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதி அளவு 5.45 சதவீதமாக குறைந்தது என்று அவர் தெரிவித்தார். கடந்த காலாண்டு முதல் ஜவுளி ஏற்றுமதி மீண்டும் அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்

| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



