"கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் முடிவை கைவிட கோரி", கல்லூரி ஆசிரியர்கள் வரும் 16-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளது.
"அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக ஆக்கும் முயற்சியில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அரசு தனது முடிவை கைவிட வேண்டும்.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவையும் கலைக்க வேண்டும். சென்னை மாநில கல்லூரி, ராணி மேரி கல்லூரி, கோவை கல்லூரி, கும்பகோணம் ஆடவர் மற்றும் மகளிர் கல்லூரிகள் ஆகியவற்றில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, வேலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, காரைக்குடி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோயில் ஆகிய 15 இடங்களில் வரும் 16-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தவிர, மார்ச் 24-ல் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய இடங்களில் பேரணியும் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டங்களில் கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக" அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



