சென்னை: தலைநகர் சென்னையில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை விருந்து உபசார நிகழ்ச்சியில் அவர் பேசியபோது
இந்த திறப்பு விழா நிகழ்ச்சி கடந்த பல தினங்களாக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியும் இந்த வெற்றிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி சொல்லவும் நடைபெறுகின்ற நிகழ்ச்சியாகும் பிகார், பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு, மகிழ்ச்சியில் எங்களையும் ஆழ்த்தி, அவர்களும் ஆழ்ந்திருக்கிறார்கள். தொழிலாளர்களும், அரசு அலுவலர்களும், ஒப்பந்ததாரர்களும், உங்களோடு சேர்ந்து அமைதியை உருவாக்கப் பாடுபட்ட காவல்துறையினரும் இன்றைக்கு மகிழ்கின்றனர்.
இந்தக் கட்டடம் எழிலோடு அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் நான் இங்கே வருவதுண்டு. அப்படி வரும்போது, இங்குள்ள மேலாளர்களை, செயலாளர்களை நான் தூண்டிவிட்டு, பல திருத்தங்களை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு எல்லாம் தொந்தரவு கொடுத்திருக்கிறேன். இதை நான் புரிந்துகொள்ளாமல் இல்லை. இந்த உயர்ந்த கோபுரம் இமயத்தின் வரையில் உள்ளவர்களும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.
பொதுப்பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம், பொதுப்பணித் துறை முன்னாள் செயலாளர் ஆதிசேஷய்யா, பொதுப் பணித் துறை தலைமைக் கட்டடப் பொறியாளர் கருணாகரன், ஒப்பந்த நிறுவனமான இ.சி.சி.ஐ. நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் முஸ்தபா, கட்டடக் கலை நிபுணர் கிறிஸ்டியன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி நினைவுப் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலிசாருக்கும் மதிய உணவாக "மட்டன்' பிரியாணி வழங்கப்பட்டன. சென்னை சங்கமம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், மெல்லிசைப் பாடல்களும் பாடப்பட்டன. சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, பொதுப்பணித் துறைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



