சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு!

March 15, 2018

சபரிமலை (15 மார்ச் 2018): பங்குனி உத்திர ஆறாட்டு விழாவுக்காக சபரிமலை ஐய்யப்பன் நடை திறக்கப் பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல-மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றவை. இதுதவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெறும்.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் தினமும் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடைபெறும்.

வருகிற 19-ந் தேதி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகமும் நடைபெறுகிறது. 19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, அன்று இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மறுநாள் (20-ந் தேதி) ஐயப்பன் கோவில் நடையானது, பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவுக்காக மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 21-ந் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியேற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பார். பங்குனி மாத பூஜை மற்றும் கோவில் திருவிழா தொடர்ச்சியாக வருவதால் வருகிற 30-ந் தேதி வரை கோவில் நடை திறந்து பூஜைகள் நடைபெறும்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!