சோலை மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!

மார்ச் 17, 2018 818

மதுரை (17 மார்ச் 2018): மதுரை அடுத்த சோலை மலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா வரும் மார்ச் 30 ஆம் தேதி நடை பெறுகிறது.

அழகர்கோவில்மலை பிரசித்தி பெற்ற சோலைமலை முருகன் கோவிலில் வருடத்தின் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஆண்டு தோறும் வரும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வருகிற 30-ந்தேதி நடக்கிறது. முன்னதாக திருவிழாவையொட்டி கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சோலைமலைக்கு வந்து குவிகிறார்கள்.

பங்குனி உத்திரத்தன்று காலை 10 மணிக்கு அழகர்மலை அடிவாரத்தில் உள்ள 18-ம்படி கருப்பணசாமி கோவில் முன்பிருந்து பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சோலைமலை முருகன் கோவிலுக்கு செல்கின்றனர். அன்று பகல் 12 மணிக்கு முருகப்பெருமானுக்கும், வள்ளி தெய்வானைக்கும் குடம், குடமாக பாலாபிஷேகமும், பின்னர் சிறப்பு அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து கோவிலின் அன்னதான மண்டபத்தில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...