ராமேஸ்வரம் கோவிலில் பயன்பாட்டிற்கு வரும் 6 புதிய தீர்த்தங்கள்!

அக்டோபர் 28, 2018 824

ராமேஸ்வரம் (28 அக் 2018): ராமேஸ்வரம் கோவிலில் 6 புதிய தீர்த்தங்கள் இன்று (28 ஆம் தேதி ) பயன்பாட்டிற்கு வருகின்றது.

இந்துக்களின் புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு, பிறகு ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிய பிறகு ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசை மற்றும் பக்தர்கள் அதிகம் வரும் நாட்களில் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் 1 முதல் 6 வரையிலான தீர்த்தங்களை கோயில் நிர்வாகம் பூட்டி விடுகிறது. இதனால் பக்தர்கள் முதல் 6 தீர்த்தங்களில் நீராட முடியாமல் வேதனையுடன் திரும்புகின்றனர்.

இது குறித்து விசாரணை செய்த ஐகோர்ட் மதுரை கிளை, முதல் 6 தீர்த்தங்களையும் பக்தர்கள் நீராடும் வகையில் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து கோயில் நிர்வாகம் ரூ.30 லட்சம் செலவில் மகாலட்சுமி, சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி, சங்குதீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய முதல் 6 தீர்த்தங்களை கோயிலின் 2ம் பிரகார வடக்கு பகுதியில் புதிதாக அமைத்தது. இந்த புதிய தீர்த்தங்களுக்கு நாளை பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை குருக்கள் தலைமையில் கணபதி ஹோமம் நடைபெற்றது.

மாலை முதல் யாகசாலை பூஜை, நாளை 2ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. புதிதாக தோண்டிய 6 தீர்த்த கிணறுகளில், பழைய தீர்த்த கிணறுகளில் இருந்து எடுத்த வரப்பட்ட தீர்த்தங்கள் மற்றும் புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பின்னர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரின்ராஜ், பேஷ்கார் கண்ணன் செய்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...