திருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு!

நவம்பர் 13, 2018 1209

திருச்செந்தூர் (13 செப் 2018): திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அங்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும், கந்தசஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாய அபிஷேகம் நடக்கிறது.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் செல்ல வசதியாக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

பக்தர்களின் வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில், சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...