தை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள்!

பிப்ரவரி 05, 2019 543

திருச்சி (04 பிப் 2019): தை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் நீர்நிலை உள்ள பகுதிகளில் திரளும் பொதுமக்கள் புனித நீராடி தங்களது மறைந்த முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இதன் மூலம் முன்னோர் களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் குவிந்தனர். இதற்கான ஏராளமான சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் தயார் நிலையில் இருந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் வைத்து முன்னோர்களின் நினைவாக பல்வேறு பூஜைகள் செய்து வழிபட்ட பொது மக்கள் பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் தேங்கியிருந்த நீரில் கரைந்து பின்னர் புனித நீராடி வழிபட்டனர்.

முன்னதாக புரோகிதர்கள் முன்னோர்களின் பெயர்களை படித்து வேதங்கள் ஓதி இந்த வழிபாட்டை நடத்தினர். காவிரி ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்கிறது. அதில் பக்தர்கள் புனித நீராடினர். சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் நீராடினார்கள்.அம்மா மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பசு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை வழங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த மேடையில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல் குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் தை அமாவாசை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

செய்தியாளர் :ஷாகுல் ஹமீது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...