தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி!

பிப்ரவரி 11, 2019 829

தஞ்சாவூர் (11 பிப் 2019): சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு, கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது.

இந்த கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

மாமன்னன் ராஜராஜன் காலத்தில் பெரியகோவிலில் நடந்த திருவிழாக்கள் பற்றி கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. காலப்போக்கில் நின்றுபோயிருந்த இந்த விழாக்களை தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்கள் பெரியகோவிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடத்தினர். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் இந்த திருவிழாவில் 15-ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றுள்ளது.

காலப்போக்கில் தேர் சிதிலமடைந்த நிலையில் 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

புதிதாக தேர் செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றப்படுகிறது.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மேற்பார்வையாளர் ரெங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...