குரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உத்தரவு!

அக்டோபர் 22, 2019 373

தஞ்சாவூர் (22 அக் 2019): தஞ்சை அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா வரும் 29ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசும்போது, திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் வரும் 29ம் தேதி காலை 3.49 மணிக்கு குரு பெயர்ச்சி

விழா நடக்கிறது. விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தகர பந்தல், குடிநீர் தொட்டி, கழிப்பறை வசதி, குப்பை தொட்டி அமைக்க வேண்டும்.

கோயில் வளாகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், விழா நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் வசதி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பக்தர்கள் எளிதாக சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கட்டைகள், தரிசன பாதையில் மழை நீர் தேங்காதவாறு மணல் பரப்புகள், பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டு பலகை, கோயில் குளத்தில் தடுப்பு கட்டை, வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்காக கூடுதல் பேருந்து வசதி, ஆம்புலன்ஸ் உடன் கூடிய மருத்துவர்கள், செவிலியர் குழுக்கள், கூடுதல் காவலர்கள், தீயணைப்பு வாகனம் ஆகியவை அமைக்க வேண்டும்.

விழா நடைபெறும் நாட்களில் கோயில் வளாகத்தில் குப்பைகள் சேராத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியை திறம்பட முடிக்க வேண்டும் என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி, திட்டை கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...