மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு –3 Featured

Thursday, 01 December 2016 09:29 Written by  இந்நேரம்

கீழ்மட்டச் சந்தை திவால்…

உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு மோடி மேற்கொண்டிருக்கும் அணு ஆற்றல் ஒப்பந்தங்கள் 50லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

நீண்டகால அடிப்படையில் நிகழும் இந்தப் பணிக்களுக்கான பணம் இந்தியர்களின் தலையில் சுமத்தப்படும். மேலும் அதன் மூலம் இந்திய அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும் கமிஷன் தொகையினை முடிந்தால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இதுதான் ஊழலை ஒழிப்பவரின் லட்சணம். இவற்றில் வரும் தொகைகள் எங்கே போய் முடங்கும் என்பது பொருளாதாரப் புலிகளுக்கு வெளிச்சம்.

சரி, மோடி நாட்டிலிருந்து 500, 1000ம் ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு புரட்சித் தலைவராக தோற்றம் எடுத்துவிட்டார். அதனால் என்ன விளைந்தது. சின்ன சின்ன சிரமங்களை தேச நலனுக்காக பொருத்துக் கொள்ள வேண்டும் என்று தேசபக்தர்கள் அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் இரண்டு நாளில் மக்கள் கையில் பணம் இருக்கும் என்று மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சொன்னதை நம்பி தேச பக்தர்கள் அப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது 3 வாரங்களுக்கு மேல் ஆகும் என்று பொருளாதாரச் சிறுவர் அருண் ஜெட்லி சொல்லிவிட்டார். மோடியும் அகங்காரத்தினால் செய்யவில்லை. நாட்டின் நலனுக்காக செய்தேன் என்று கலங்குகிறாராம். எதிர்கால பொருளாதாரப் பேரழிவுகளை கணக்கிடும் வல்லமை இல்லாத நபர்களை நமது நாட்டில் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பெற்றிருக்கிறோம் என்பது நமது சாபக்கேடு.

இந்த கட்டுரையில் இரண்டு செய்திகளை மட்டும் விளங்கிக் கொள்ளலாம்.முதலாவது. பணப்பற்றாக்குறை எப்படி உருவாக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
• இந்தியாவில் காகிதப்பணம் 17லட்சம் கோடிக்கு அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ளது. இதில் 86 சதவிகிதம் நோட்டுகள் 500 மற்றும் 1000 மதிப்பில் உள்ளன. மீதமுள்ள 14 சதவிகிதம் நோட்டுகள் முறையே ரூபாய்கள் 1,2,5,10,20,50,100 ஆகிய மதிப்பில் உள்ளன என்று ரிசர்வ் வங்கி அறிக்கையிட்டுள்ளது. எனவே மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் 500, 1000ம் என்பது தெளிவு. பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதால் இவை சாதாரண மதிப்புள்ள நோட்டுகள்தான். உயர் மதிப்பு நோட்டுகள் என்பது உருவாக்கப்பட்டுள்ள மாயை.

• செல்லா நோட்டு அறிவிப்பை மோடி வெளியிட்டபோது நாட்டில் புழக்கத்தில் எஞ்சிய குறைந்த மதிப்புள்ள நோட்டுகளின் அளவு வெறும் 14%ம் மட்டுமே. கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் இந்தியாவில் 80 சதவிகித மக்கள் சில்லறை வணிகத்தோடு பிணைக்கப்பட்டவர்கள், இவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு வெறும் 14 சதவிகித நோட்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு பரிவர்த்தனையை நடத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னது உலகத்தில் இதுதான் முதன்முறை. அந்த முட்டாள்தனமான சாதனையை செய்தது உலகத்தில் மோடி மட்டுமே என்று சொன்னால் அது மிகையில்லை.

• எனவே அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் 100க்கும் 50க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரிய அளவில் 100 வைத்திருந்தவர்கள் அவற்றைப் பதுக்கினார்கள். அது மறுநாள் கள்ள சந்தையில் கடும் விலைக்குப் போய் ஊக வாணிகத்தைப் போல பணத்தைக் கொடுத்தது. 1000க்கு 100 கமிஷன் வீதம் கள்ளச் சந்தையில் பணம் இறங்கியது. எந்த கருப்பு பணத்தை ஒழிக்க மோடி நினைத்ததாரோ அதுவே கருப்புப் பணத்தை உருவாக்கியது.

• ஆனால் சாமான்யர்கள் நிலை வேறு. அவர்கள் அத்யாவசியத் தேவைக்காக 100 50 நோட்டுகளை நிறுத்திக் கொண்டார்கள். என்ன நிகழும் என்று அவர்களுக்கு தெரியாது. நிச்சயமற்றத் தன்மை.

• இந்த நிச்சயமற்றத் தன்மையை சிறு வணிகர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டு வியாபாரத்தில் லாபத்தை அள்ள 500, 1000ம் ரூபாய் தாள்களை வாங்கிக் கொண்டு உணவுப் பொருள்களை விற்றுவிட்டு தங்களிடமிருந்த சில்லறையை மக்களுக்கு கொடுத்தார்கள். ஆனால் மறுநாள் அவர்களால் சரக்கை மறு கொள்முதல் செய்ய முடியாமல் போய்விட்டது.

• எனவே 14 சதவிகிதப் பணம் இந்தியாவின் சிறு வணிகத்திற்கு பல ஆயிரம் கோடிகள் ரூபாய்வரையிலான இழப்பை அடுத்த நாளே உருவாக்கிவிட்டது. 2000ம் ரூபாய் கொஞ்சம் சந்தையில் வந்தாலும் அதனால் எந்த பயனும் விளையாமல், சில்லறைத் தட்டுப்பாட்டினால் நாட்டின் வர்த்தகம் முற்றிலும் முடங்கிப்போனது. அதனுடைய விளைவுகளை நாடு இனி எதிர்கொள்ளும் சந்தை எப்படி சீர்குலைந்து சாமான்ய மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உடனடியாக பாதிக்கப்படக்கூடிய அழுகும் பொருள்களான காய்கறிகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

காய்கறி வியாபாரச் சங்கிலி பின்வருமாறு இருக்கிறது.

விவசாயி – தரகு கொள்முதல் வியாபாரி – மொத்த வியாபாரி – சில்லறை வியாபாரி – நுகர்வோர்.. இந்த தொடரில் காய்கறி ஒரு நுகர்வோரை சேர்கிறது.

இந்த சங்கிலித் தொடரில் இணை வணிக சங்கிலித் தொடர் உள்ளது அது பின்வருமாறு இருக்கும்.

விவசாயக் கூலித் தொழிலாளி – தரகுக் கொள்முதல் வியாபாரியிடம் உள்ள தொழிலாளி – சரக்கு கொண்டுபோகும் வண்டி உரிமையாளர் மற்றும் தொழிலாளி – மொத்த வியாபாரியிடம் பணியாற்றும் சுமைத் தூக்கும் தொழிலாளி – கடையில் வேலை செய்யும் சிப்பந்தி – சில்லறை வியாபாரிக்கு சுமையேற்றிச் செல்லும் சிறு வண்டி தொழிலாளி – சில்லறைக் கடைத் தொழிலாளி என இவர்களுக்கு வழங்கப்படும் கூலி மற்றும் வண்டி வாடகை, கடை வாடகை உள்ளிட்டத் தொகைகள்.

இதைத்தவிர மறைமுக வணிகச் சங்கிலித் தொடர் இதனுள் உள்ளது. அது பின்வருமாறு இருக்கும்.

விவசாய இடுபொருள் வணிகம் – வண்டிகளின் வாடகை, பாராமரிப்பு மற்றும் எரிபொருள் வணிகம் – இவர்களுக்கு சிறு கடன் வழங்கும் வட்டி வியாபாரிகள் மற்றும் அவர்களது தொழிலாளர்கள் – வங்கி நடவடிக்கைகள் – என நீண்ட தொடர் வரிசை உள்ளது.
இந்த மறைமுக தொடரின் பின்னே பல சங்கிலித் தொடர்கள் உள்ளன. அது வாசகர்களுக்கு் சலிப்பை தரும் என்பதால் தவிர்க்கிறேன். இதைப் படிக்கும் வாசகர் அந்த சங்கிலித் தொடரில் ஒருவராக இருக்கலாம்.

எனவே, நீங்கள் ஒரு கிலோ உருளைக் கிழங்கு வாங்கினால் அது இந்தத் தொடரின் மூலம்தான் உங்களை வந்தடைகிறது. இதில் பிரதான இரண்டு முனைகள் விவசாயியும் நுகர்வோரும்தான். நுகர்வோர் தான் வாங்குவதை நிறுத்தினால் இந்த சங்கிலித்தொடர் முற்றிலும் ஸ்தம்பித்து குலைந்துவிடும், அதன் விளைவாய் இந்தத் தொடரில் பிணைக்கப்பட்டுள்ள அத்தனை பேரும் தமது வருமான ஆதாரத்தை இழந்து விடுவார்கள். ஏனென்றால் இந்த தொடர்கள் அத்தனையும் நேரடியாக பணத்தைக் கையாளும் முறையான பணத்தை வாங்கி பொருளை கொடுக்கும் எளிய சந்தை விதியில் செயல்படுவது. காரணம் வங்கியில் போய் தமது நடவடிக்கைகளை கையாளும் வகையில் எந்த ஏற்பாடும், சமூக அமைப்பும் இதற்கு இல்லை. அதனால் ஒருவாரம் நுகர்வோர் தமது வாங்கும் நடவடிக்கையை நிறுத்தினால் இந்த அமைப்பு முற்றாக சிதைந்து முழுமையும் நட்டத்தில் முடங்கிவிடும். அதுதான் தற்போது நடந்துக் கொண்டுள்ளது.

ஓர் உதாரணத்திற்கு இந்த துறையை எடுத்தாண்டேன். இந்த அணுகல் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். அதனால்தான் மோடி மேற்கொண்டது பேரழிவு என்கிறேன். மோடிக்கோ அவரது ஆதரவாளர்களுக்கு இந்த பின்னடைவு புரியும் என்று நம்புவதற்கு இல்லை. பொருளாதார அறிவு துளியும் அற்ற ஒரு பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம் என்கிற வெட்கம் நம்மைத் தின்கிறது. இந்த சிறு வர்த்தகச் சங்கிலி தொடர் நாட்டை எப்படி நிலைகுலைய வைக்கும் என்பதை அடுத்து பார்ப்போம்..

நன்றி: கௌதம_சன்னா

Last modified on Wednesday, 30 November 2016 01:34
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.