கருப்புப் பண முதலைகளின் பெயர்களை வெளியிடாது ஏன்?

December 02, 2016

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கணக்கில்வராத கறுப்புப் பணம் சுமார் 34 லட்சம் கோடி எனக்கூறப்படுகிறது. இது முடக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பான 15.45 லட்சம் கோடியைவிட இரட்டிப்பானது.

அதே சமயம், நாட்டினுள் பணமாக பதுக்கப்பட்ட கணக்கில் வராத கறுப்புப்பணம் சுமார் 3.75 லட்சம் கோடிகள். இதனை அழிப்பதற்கே 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு.

இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து நவம்பர் 27 வரை 8.45 லட்சம் கோடிகள் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது வெறும் 20 நாட்களுக்குள் சுமார் 56 சதவீதம் 500, 1000 நோட்டுகள் வங்கிக்கு வந்துவிட்டன. இன்னமும் டிசம்பர் 30 வரை நேரடியாக வங்கிகளில் செலுத்த கால அவகாசம் உள்ளது. அது கடந்தாலும் மார்ச் 2017 வரை கணக்கு காண்பித்து செலுத்த முடியும். கணக்குப்படி இனிமேல் சுமார் 7 லட்சம் கோடிகளே வங்கிகளுக்குத் திரும்ப வேண்டும். இப்போதைய வேகத்தில் சென்றால் அப்பணமும் வங்கிக்கு வந்துவிடும். எனில், நாட்டில் கணக்கில் வராமல் பதுக்கப்பட்டிருந்த 3.75 லட்சம் கோடி கறுப்புப்பணம் எங்கே?

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள கோடிகளும் அவ்வப்போது பாஜக நிர்வாகிகளிடமிருந்து கைப்பற்றப்படும் கோடிகளும் கறுப்பு வெள்ளையாக்கப்பட்டவைதானே?

3 நாட்கள் எனக்கூறி 50 நாட்கள் என அழுது இப்போது 6 மாதங்கள் எனக்கூறியிருக்கும் நாட்கள், பொதுமக்கள் சகிக்க வேண்டியது யாருக்காக?

தேசப்பற்றுக்காக என மீண்டும் தேய்ஞ்ச ரிக்கார்டையே இசைக்காதீர்கள். அதான், கணக்குப்படி 3.75 லட்சம் கோடிகளும் வங்கிக்கு வந்துவிடுகின்றனவே? கறுப்புப்பண முதலைகள் தம் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கவே இப்போதைய இந்த செல்லாது அறிவிப்பு உதவும் என்பது தெளிவாகிவிட்டது.

இல்லையேல், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பண முதலைகளின் பெயர் பட்டியல் கைவசம் இருந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவோ, அப்பெயர் பட்டியலை வெளியிடக்கூட பிரதமர் மோடி முன்வராதது ஏன்? 

-அப்துல் ரஹ்மான்

தற்போது வாசிக்கப்படுபவை!