சசிகலா தலைமைக்கு வந்தால் அதிமுக சிதறுவது உறுதி! Featured

By இந்நேரம் December 08, 2016

ன்று எம்ஜிஆரின் மறைவின் போது இடைக்கால முதல்வராக பதவியேற்ற நாவலர் நெடுஞ்செழியன் முதல்வராக தொடர்ந்திருந்தால் தமிழக அரசியல் சினிமா மாயையிலிருந்து விடுபட்டிருக்கும்.

எம்ஜியார் காலத்தில் ஆர் எம் வீரப்பனும் ஜெயலலிதாவும் பரம எதிரிகளாக இருந்தனர். (வீ மற்றும் ஜெ மாநகரப் பேருந்துகள் நினைவிருக்கிறதா.?)

ஆர்எம் வீரப்பனின் நப்பாசையால் நெடுஞ்செழியனை ஓரம்கட்ட அரசியலுக்கு சற்றும் தொடர்பற்ற ஜானகியை அரசியலுக்கு இழுத்தார். அதனாலேயே ஜெயலலிதா நெடுஞ்செழியனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து முன்னனிக்கு வந்தார்.

அதன்பிறகு நடந்த அணைத்தும் தமிழக அரசியலை மற்ற மாநிலத்தவர் காறி உமிழும் வகையில் இருந்தது. அதிமுக ஜெ அணி ஜா அணி நால்வர் அணி என் சிதறுண்டு போக காத்திருந்த திமுக ஆட்சியை கைப்பற்றியது.

ஜா அணியும் நால்வர் அணியும் காணாமல் போக, ராஜீவ் படுகொலை ஒரு திருப்பு முனையாக அமைந்து ஜெ தலைமையிலிருந்த அதிமுக எதிர்பாராத வெற்றியை அடைந்தது.

இன்று ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதே காட்சிகள் மீண்டும் மேடையேறும் போல் தெரிகிறது. நாவலர் அளவுக்கு ஓபிஎஸ் தகுதியானவரில்லை என்றாலும் அடுத்த தேர்தல்வரை அதிமுக ஓபிஎஸ்ஸை முதல்வராக கொண்டு தொடராத பட்சத்தில் மீண்டும் சிதறுண்டு பலவீனப்படும்.

மக்களின் அபிமானத்தைப் பெறாமல் எம்ஜியாரின் மனைவி என்ற தகுதியை மட்டும் கொண்டு அரசியலில் கால்பதித்த ஜானகி செல்வாக்கிழந்து புறக்கணிக்கப்பட்டது போல..

ஜெயலலிதாவின் தோழி என்பதை தகுதியாகக் கொண்டு சசிகலா தமிழகத்தை ஆளலாம் என்று கனவுகண்டால் அது ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. அவரை முன்னிறுத்துபவர்களும் வீரப்பனை போல நப்பாசை கொண்டவர்களே!

இன்று ஓபிஎஸ் முதல்வரானது யதார்த்தமானது என்றாலும் ஜெவால் ஏற்கெனவே அவர் இரண்டுமுறை முதல்வராக அமர்த்தப்பட்டதால் ஜெயலலிதாவின் ஆசி பெற்றவராகவே கடைநிலை தொண்டர்களால் கருதப்படுவார். இன்று எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் மறு தேர்தலில் வாய்ப்புக் கொடுக்கப்படவோ வெல்லவோ சாத்தியங்கள் மிகக்குறைவு. அதனால் ஓபிஎஸ் தலைமையில் மீதமுள்ள ஆட்சிக்காலத்தை தக்கவைத்துக் கொள்வதே அவர்களுக்கும் அதிமுகவின் எதிர்காலத்துக்கும் உகந்தது.

 

Last modified on Wednesday, 14 December 2016 18:46