பணமதிப்பிழப்பு : மக்களும் பொறுமையும்!

January 09, 2017

ந்திய உளவியலில் பொறுமை என்பது குறிப்பாக ஆண்களிடம் மிக அரிதான ஒரு குணமாகவே காணப்படுகிறது. சாலையோரத்தில் நடைபெறும் சிறு ஆத்திரமூட்டும் சச்சரவுகள் கூட மரணத்தை ஏற்படுத்தக் கூடியவையாக மாறி விடுவதுண்டு.

வரிசையாக நிற்பதை விட மந்தையாக நிற்பது என்பதே அதிகம் காணப்படுவது. அப்படியே ஒரு வரிசையானது ஏற்பட்டாலும், மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு வரிசையில் நிற்பவர்களை, முதியோர்களை அலட்சியப்படுத்தி வரிசையில் முந்துவதற்கு அதனை மீறுபவர்கள் பித்துப்பிடித்த நிலையில் நடந்து கொள்வதுண்டு. பொறுமையிழப்பதன் அடையாளமாக நகர்ப்புறங்களில் பிளிறிடும் ஹாரன் சப்தங்கள் காதைப் பிளக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் விதிவிலக்காக ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமானது பொதுவான மனப்பான்மையாக பணமதிப்பிழப்பு அறிவிற்குப் பின்னான இந்தியாவில் அண்மையில் எழும்பியுள்ளது. பணமதிப்பிழப்பு என்பது நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற போதிலும், இடைக்காலத்தில் எதிர்பார்த்த அளவிற்கும் மேலாக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியினைக் குறைக்கும் என்பதான ஒருமித்த கருத்து என்பது ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தங்களது கருத்தாக்கங்களில் இரு வெவ்வேறு நிலைகளில் இருக்கும் பொருளீயல் ஆய்வாளர்களிடமிருந்தும் கூட வெளிப்படுகிறது. பணமதிப்பிழப்பின் விளைவாக ஆண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது எதிர்பார்த்ததை விட ஒன்றிலிருந்து இரண்டு சதவீதம் கூடுதலாகக் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள், நிதி ஆய்வாளர்கள் ஆகியோர் கருதுகின்றனர்.

உளவியல் பாதிப்புகள்

தேசிய கணக்கியல் விதிமுறை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருப்பதாக அனுமானம் கொண்டு பார்த்தோமேயானால், வளர்ச்சி குறித்த இந்த எண்கள் எதுவாக இருந்த போதிலும், குறிப்பாக முறைசாராத் தொழில்களில் வேலை இழப்பு, குறைவான பொருளாதாரச் செயல்பாடுகள் ஏற்பட்டு அது வரும் காலங்களிலும் தொடரப் போவதாகவே தெரிய வருகின்றது. ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் தவிர்த்து, ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாளுக்காக நீண்டு நெளிந்திருக்கும் வரிசையில் நிற்பதால் ஏற்பட்டிருக்கும் உளவியல் ரீதியிலான பாதிப்புகள் அதிக அளவில் இருப்பதாகத் தோன்றுகிறது. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மிஷின்கள் மிக சீக்கிரத்தில் காலியாகி விடுவதன் விளைவாக, அங்கெல்லாம் நீண்ட வரிசைகளில் நிற்பது கூடப் பலனளிப்பதாக இல்லை. முதல் மாதத்தில் இருந்ததை விட இரண்டாவது மாதத்தில் வரிசையின் நீளம் குறைந்து தெரிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரிசையின் நீளம் குறைந்ததற்கு, எவ்வளவு பணம் இருக்கும், நமது முறை வரும் வரையில் பணம் கிடைக்குமா என்பது பற்றி மக்களால் புத்திசாலித்தனமான முடிவுக்கு வர முடிந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அவர்களது சொந்தப்பணத்தை எடுப்பதற்கு உளவியல் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தியதன் மூலம் பணமதிப்பிழப்பு என்பது எரிச்சலூட்டும் செயலாக மாறியிருக்கிறது.

மாறுபட்ட நிலை

இது ஏற்படுத்தியுள்ள வலி குறித்து அசாதாரண கட்டுப்பாடு மற்றும் பொறுமையினை மிகவும் சாதாரண மனிதன் காட்டியுள்ளது தெரிகிறது. கணிசமான துன்பங்களைத் தந்துள்ள போதிலும் பணமதிப்பிழப்பிற்கெதிராக வன்முறை இல்லை எனிலும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் கூட நடக்காமல், பொது ஒழுங்கிற்கு எந்தவொரு பெரும் அச்சுறுத்தலும் ஏற்படாத நிலையே நீடிக்கிறது.

1989இல் பணவீக்கத்தின் விளைவாக அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட கலவரம், இந்தியாவில் 1991இல் செய்யப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக 1990களின் இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த அமைதியின்மை, பரவலாக இருந்த வேலையின்மை, இளைஞர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார துன்பங்களின் விளைவாக மேற்கு ஆசியாவின் அரசியல் சூழலை மாற்றுவதற்காக நடத்தப்பட்ட அரபு வசந்தம் போன்று உலகின் பல நாடுகளில் திடீரென்று எதிர்பாராத வகையில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட போது நடந்த நிகழ்வுகளிலிருந்து இது மாறுபட்டுள்ளது.

மழையளவு குறைவது என்பது இயற்கை சார்ந்ததாக இருந்த போதிலும் இந்தியாவில் வன்முறை மற்றும் மோதல்களை உருவாக்கும் தன்மை கொண்டதாகவே அது அறியப்படுகிறது. உலகளாவிய அளவில் வருமானம் குறைவதன் மூலம் ஏற்படும் அதிர்ச்சியானது பெரும் மோதலுக்கு வழிவகுக்கும் என்றே பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. வெளிப்படையான உடனடி பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் போதிலும், பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்குப் பின் நிலவி வரும் ஒட்டுமொத்த உணர்வானது நேர்மறையாகவே இருக்கிறது.

தேசியவாதத்தின் டிஜிட்டல் வளர்ச்சி

தியாகம் செய்வதென்பது இந்திய நாகரிகத்தின் உள்ளார்ந்த குணமாக இருப்பதை தற்போதைய நிகழ்வுகள் கவனத்திற்குக் கொண்டு வருவதாக ஒரு சிலர் வாதிடுகின்றனர். பணமதிப்பிழப்பிற்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படை பகுதியாக உள்ள தியாக மனப்பான்மையினை மீறுவதான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், இது ஓரளவுக்குத்தான் உண்மையாக இருக்கிறது. தியாகம் என்பது தன்னை ஒரு அறநெறிக்குரலாக முன்னிறுத்துகிறபடியால், பொதுக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் தியாகம் உலகியல் நலனுக்கான அடித்தளத்தினை வழங்குகிறது. அத்தகைய உலகியல் நலனுக்கான அடித்தளம் முதலில் கறுப்பு பணத்தை அகற்றுவதில் ஆரம்பித்து, இப்போது ஒரு பணமற்ற சமூகத்தை உருவாக்குவதாக மாறியுள்ளது. அது மட்டும் போதாது என்று அரசாங்கமும் மற்றும் அதன் சமூக ஊடக நட்பாளர்களும் சேர்ந்து ஒருபடி மேலே சென்று பணமதிப்பிழப்பு என்பதை தேசியவாதத்துடன் இணைத்திருக்கின்றனர்.

இதுவரையிலும் தேசியவாதத்தின் அடையாளமாக இந்திய ராணுவம் இருந்து வருவதை மாற்றி தற்காலிகமாக வங்கி காசாளர் தன் பொறுப்பில் அதனை ஏற்றுக்கொண்டி ருக்கிறார். தானியங்கி காசாளர்கள் பயனற்றுப் போன பிறகு, கடினமாக உழைக்கும், நெகிழ்திறனுடன் எப்போதும் விழிப்பு டன் செயலாற்றுகின்ற வங்கிக் காசாளர்கள் இப்போது ராணுவ ஜவான்களின் அந்தஸ்தை அடைந்துள்ளனர். துரதிர்ஷ்ட வசமாக நடைபெற்ற வங்கிப் ணியாளரின் மரணம் கூட மிகவும் வசதியாக நாட்டிற்காகச் செய்த தியாகமாக மாற்றப்பட்டுள்ளது.

பொதுக்கருத்துக்களை உருவாக்குகின்ற, ஏற்கனவே பணமில்லாத சமூகமாக உள்ள உயர்நடுத்தர வர்க்க இந்தியாவானது பணமதிப்பிழப்பின் விளைவாக எவ்வித இன்னல்களையும் எதிர்கொள்ளவில்லை என்பதே உண்மை. ஆனாலும் இந்தக் கொள்கையின் விளைவாக நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பிரிவினர் கூட பெரும்பாலும் வேறு சந்தர்ப்பங்களில் தங்களிடம் கொண்டிராத ஒரு வசீகரிக்கும் அமைதியை தங்களிடம் கொண்டவர்களாகக் காட்சியளிக்கின்றனர். மனித நடத்தைகளை எவ்வாறு மாற்றுவது என்பது பாடத்திட்டத்தில் உள்ள ஆர்வமூட்டும் விஷயம்.

அண்மைக் காலங்களில் மிக அதிக அளவிலான முன்னேற்றங்கள் இத்துறையில் செய்யப்பட்டுள்ள போதிலும், மனித நடத்தைகளில் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவதில் தேசியவாதக் கருத்துக்களின் விளைவுகள் வியக்கத்தக்கதாக இருக்கிறது. உண்மையில் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களிடம் அத்தகைய கருத்து சிறிதும் இல்லாத போதிலும்.

கட்டுரையாளர் : உதவிப்பேராசிரியர் – இந்திய மேலாண்மை நிறுவனம் , பெங்களூரு.

நன்றி : தி இந்து

தமிழில் : டாக்டர் தா.சந்திரகுரு – விருதுநகர்

 

தற்போது வாசிக்கப்படுபவை!