வசதி இருந்தும் அரசுப் பள்ளியில் படித்து சாதித்த இரட்டையர்கள்! Featured

Wednesday, 17 May 2017 14:08 Written by  இந்நேரம்

ரசுப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் கவிஞர் வெண்ணிலா, வசதியிருந்தும் எவ்வித தயக்கமும் இன்றி தன் மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்திருக்கிறார். மதிப்பெண் சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறார்கள் அவரின் மகள்கள்.

கவிஞர்கள் முருகேஷ் - வெண்ணிலா தம்பதியின் இரட்டை மகள்கள் நிலாபாரதியும் (1169 மதிப்பெண்) அன்புபாரதியும் (1165 மதிப்பெண்) வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து, ப்ளஸ் டூ தேர்வில் கணிசமான மதிப்பெண் பெற்று சாதித்திருக்கிறார்கள். நிலாபாரதி, மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் முதல் மாணவியாகத் தேர்வாகியிருக்கிறார். ‘அரசுப் பள்ளியில் சேர்க்கும் எண்ணம் ஏன் வந்தது?’ என வெண்ணிலாவிடம் கேட்டோம்.

“நானும் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். என் மூன்று பெண்களும் தொடக்கத்தில் தனியார் பள்ளியில்தான் படித்தார்கள். அரசுப் பள்ளியில் பணியாற்றி சம்பளம் வாங்குகிற நான், என் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் படிக்கவைப்பது அறமில்லை என்ற குற்ற உணர்வு தொடக்கத்தில் இருந்தே இருக்கிறது. ‘ப்ளஸ் டூ’வே உயர்கல்வியைத் தீர்மானிக்கும் தேர்வாக இருக்கிறது. 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை, ப்ளஸ் ஒன்னில் தனியார் பள்ளிக்கு மாற்றுவதே வழக்கம். நாங்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றினோம்.

முதலில் மூத்த மகள் கவின்மொழியை அரசுப் பள்ளியில் சேர்த்தோம். ப்ளஸ் டூவில் அவள் 1,141 மதிப்பெண்கள் பெற்றாள். அதன்பிறகு நிலாவையும் அன்புவையும் சேர்க்க எந்தத் தயக்கமும் எழவில்லை. அரசுப் பள்ளிகளில்தான் முறையான பயிற்சி பெற்ற, தகுதியான, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சுதந்திரமான, பிள்ளைகளின் ஆளுமையைத் தடை செய்யாத, இறுக்கமில்லாத கல்வி அங்குதான் கிடைக்கிறது. நாங்கள் செய்ததைப் பார்த்து, இன்னும் மூன்று ஆசிரியைகள் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்தார்கள். அதன்பிறகு நிறைய பெற்றோர் இப்படிச் சேர்த்தார்கள். இப்படி இந்த மூன்று வருடங்களில் 200 பிள்ளைகள் சேர்ந்திருக்கிறார்கள்’’ என்கிறார் வெண்ணிலா.

“நாங்கள் படித்த தனியார் பள்ளியில் 20 பேர்தான் இருப்பார்கள். எப்போதும் படிப்பு, படிப்புதான். சந்தேகம் கேட்கக்கூட தயக்கமாக இருக்கும். இந்தப் பள்ளியில் எங்கள் வகுப்பில் மட்டும் 80 பேர். பலரும் நன்றாகப் படிக்கும் மாணவர்கள். போட்டி போட்டுப் படிப்போம். தனியார் பள்ளியைவிட அரசுப் பள்ளியில் படித்தது மிகவும் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.’’ - நிலாபாரதியும் அன்புபாரதியும் உற்சாகமாகச் சொல்கிறார்கள்.

நன்றி: விகடன்

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.