இந்தியாவின் உற்பத்தி வீழ்ச்சியும் மோடி செய்த மிகப்பெரிய தவறும்! Featured

By இந்நேரம் June 06, 2017

டந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, 'நாட்டின் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளான ஐநூறும் ஆயிரமும் செல்லாது' என்று அறிவித்தது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி அரசு. அடுத்த நான்கு மாதங்களுக்கு வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் மக்கள் வரிசைகளில் காத்துநிற்க வேண்டிய சூழல் நிலவியது.

இதற்கிடையில், நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. தற்போது புதிய 5,00 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள்தான் புழக்கத்தில் இருக்கின்றன. 'மார்ச் மாதத்துக்குள் நாடு, தன் பழைய நிலைக்குத் திரும்பும்' என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஆனால், பண மதிப்பு நீக்கத்தின் தாக்கம் தற்போதுவரை நீடிக்கிறது.

‘கடைசி 3 மாதங்களில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேகம் 6.1 சதவிகிதம் என்ற ஆமை வேகத்துக்கு இறங்கி வந்துவிட்டது' என்று எச்சரிக்கிறது பொருளாதார வல்லுநர்களின் ஆய்வு. விளைவு என்ன தெரியுமா? பொருளாதார அடிப்படையில், உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில், சீனாவுக்குப் பின்னால் தள்ளப்பட்டுள்ளது இந்தியா. 86 சதவிகிதம் புழக்கத்தில் இருந்துவந்த பணத்தை மதிப்பிழக்கச் செய்ததின் விளைவுதான் இது என்று அடித்துச் சொல்ல முடியும். பொருளாதார வல்லுநரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் சொன்னதும் இதுதான். மோடி பதவியேற்ற 3 ஆண்டுகளில், 2014-ல் இருந்த பொருளாதார நிலை சீரான வளர்ச்சி அடைந்துள்ளது என்பது ஒருபக்கம் இருந்தாலும், தற்போதைய பொருளாதார வீழ்ச்சியும் அதே மோடியிடம்தான் இட்டுச் செல்கிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க பல முதலீட்டாளர்களை அவரது அரசு ஈர்த்ததே ஒழிய அதனைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் தோற்றுவிட்டது.

ஜீவா போன்ற நுகர்வோரை எடுத்துக்கொள்வோம்; அவளுக்கு தனது காகிதங்களை வைக்கத் தோல் பை ஒன்று தேவைப்படுகிறது என்றால், சம்பந்தப்பட்ட தொழிலாளியிடம் தமக்கு இந்த வகையான தோலில், இந்த வடிவில், இப்படியான கொள்ளளவில் பை இருக்க வேண்டும் என்கிறாள். அந்தத் தொழிலாளி தோல் விற்கும் தொழிலாளியை நாடிப் போவார். இப்படி இரு தொழிலாளிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், 86 சதவிகிதம் சுழற்சியில் இருக்கும் பணம் முடக்கப்படும்போது, ஜீவா தொடங்கி, தோல் பை தயாரிப்பவர், தோலைப் பதப்படுத்தி விற்பவர் என ஒவ்வொரு அடுக்குகளில் உள்ளவர்களும் பாதிப்படைகிறார்கள். ஜீவா போன்று பல நுகர்வோரும், தோல் பை தயாரிப்பவர் போன்ற பல முதலீட்டாளர்களும், தோலைப் பதப்படுத்தி விற்பவர் போன்ற பல தொழிலாளிகளும் பாதிப்படைந்துள்ள நிலையில்தான் இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவும் ஏற்பட்டுள்ளது என்பது விளங்கும்.

விவசாயிகள் போராட்டம், உற்பத்தி சரிவு, நீர்வரத்துக் குறைபாடு என காரணங்கள் இருந்தாலும் விவசாயம் சார்ந்த மொத்த உற்பத்தி மட்டும் தென்மேற்குப் பருவமழை காரணமாக 5.3 சதவிகிதம் என்றளவில் உயர்ந்துள்ளது. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிகூட, மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு தொடர்பாக அண்மையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''விவசாயம், மீன்வளம் மற்றும் காடுகள் சார்ந்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதே” என்று இதனைத்தான் முதன்மைப்படுத்திக் கூறினார்.

ஜே.சி.குமரப்பாவின், 'நிலைத்த பொருளாதாரம்' என்னும் புத்தகத்தில், இவ்வாறான வரிகள் தென்படுகின்றன... 'பக்குவப்படுத்தப்படாத பஞ்சின் இழைகள் உறுதியற்று இருக்கும். ஆனால், ஆயிரக்கணக்கில் அவை நூற்கப்பட்டு, இழைகளை முறுக்கேற்றியபின் வலுவான கயிறாக உருவாக்கப்பட்டால், அது ஒரு கடற்கப்பலையும் இழுக்கக் கூடிய வலுவைப் பெற்றுவிடுகிறது. அதேபோல், நெருக்கமான பிணைப்பில் உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் கொண்டு வரவேண்டும்.அது மட்டுமே பொருளாதார நிலைத்தன்மையை சாத்தியப்படுத்தும்' என்கிறார் குமரப்பா.

2014-ல், 'சரிந்த பொருளாதாரத்தை நாங்கள்தான் சீர்தூக்கி நிறுத்தினோம்' என்று தற்போதைய அரசு சொன்னாலும் பணமதிப்பு நீக்கம் மீண்டும் அதனை சீர்குலைத்துள்ளது, பக்குவப்படாத பஞ்சு இழைகள் போல. நிலைத் தன்மையுடைய பொருளாதாரத்தை எட்டுவது என்பது பஞ்சின் இழைகளை அப்படியே விட்டுவிடாமல், இணைத்து உறுதிபடுத்துவது. அப்படியே விட்டுவிடாதீர்கள் மோடி அண்ட் கோ!

நன்றி - விகடன்