பசுவின் பெயரால் காந்தி 28 முறை கொல்லப்பட்டுள்ளார்! Featured

By இந்நேரம் June 30, 2017

`பசு பாதுகாப்பு' என்ற பெயரில் மனிதர்களைப் படுகொலை செய்வதை ஏற்க முடியாது" - சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் மோடி `முழங்கி' ஒருநாள்கூட ஆகவில்லை. ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக அலிமுதீன் என்கிற அஸ்கார் அன்சாரி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோடியின் வார்த்தைகளை இந்துத்துவவாதிகளே பொருட்படுத்தவில்லை. ஏனெனில், அது வெறுமனே உதட்டிலிருந்து வந்த சம்பிரதாயமான வார்த்தைகள்தான் என்று அவர்களுக்குத் தெரியும்.

இப்படி நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தபோது மௌனமாக இருந்த மோடி, அது தேசிய அளவிலான பிரச்னையாக மாறியபோது, ``கொல்பவர்கள் என்னைக் கொல்லட்டும். தலித் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்'' என்று `சென்டிமென்டாக' வேண்டுகோள்விடுத்தார். இப்போதும் பசு பாதுகாப்பாளர்களின் வன்முறை தேசிய அளவிலான பிரச்னையாகியிருக்கும் சூழலில், அதுவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் மற்றுமொரு சென்டிமென்ட் உரை நிகழ்த்தியிருக்கிறார் மோடி.

`மன் கி பாத்' என்று மக்களுக்காக நிகழ்த்தும் உரையில் எமெர்ஜென்சி கொடுமைகளை நினைவுகூரத் தெரிந்த பிரதமரால், பசு பாதுகாப்பு வன்முறை குறித்து இதுவரை ஒரு வார்த்தைகூட உதிர்க்க முடியவில்லை என்பதற்கு என்ன அர்த்தம்? ஒரு நாட்டின் பிரதமர், அதுவும் காங்கிரஸுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிரான சிம்மசொப்பனமாகத் தன்னைக் காட்டிக்கொள்பவர் வெறுமனே சென்டிமென்டல் உரைகளை நிகழ்த்திக்கொண்டிருப்பது எதற்காக?

மோடி, ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை `பசு பாதுகாப்பு' என்ற பெயரில் நாடு முழுவதும் 28 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 2010-ம் ஆண்டிலிருந்து மாட்டின் பெயரால் நடந்த கொலை சம்பவங்களில் 97 சதவிகிதம், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்றவை. பாதிக்கும் மேற்பட்ட வன்முறைகள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நிகழ்ந்தவை. கொல்லப்பட்ட 28 பேரில் 24 பேர் முஸ்லிம்கள். தாக்குதல்களில் 124 பேர் படுகாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இத்தகைய தாக்குதல்களில் 52 சதவிகிதம் வெறுமனே வதந்தியை அடிப்படையாகக்கொண்டவை.

`பசு பாதுகாப்பு' என்ற பெயரில் நாடு முழுவதும் நடக்கும் கொலைகளுக்கும் தாக்குதல்களுக்கும் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? ஏற்கெனவே இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் `சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்களை விற்கத் தடை' என்ற கறுப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தது மோடி அரசு. கொஞ்சமும் சுயவெட்கம் இல்லாமல் காந்தியின் ஆசிரமத்தில் சென்டிமென்டாக உருகியிருக்கிறாரே மோடி, காந்தியின் நிலைப்பாடு இதுதானா?

காந்தியும் இந்து மதத்தின்மீது நம்பிக்கைகொண்டவர்தான்; ராமனையும் பகவத்கீதையையும் தன் ஆதர்சமாகக் கருதியவர்தான். மத மாற்றத்தையும் பசு வதையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அவற்றைத் தடுப்பதற்கான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்ற இந்துத்துவவாதிகளின் கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தவர்.

1924-ம் ஆண்டில் “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து ராஜ்யம் அல்ல; இந்து ராஜ்யமாக இருந்தபோதும் சகிப்புத்தன்மை அதன் அம்சமாக இருந்தால், அங்கே முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டு. கட்டாயப்படுத்தி பசு வதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம், பிறரும் தாங்களாகவே முன்வந்து பசு வதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்குச் சான்றாக இருக்கும். ஆகவே, இந்து ராஜ்யம் குறித்து கனவு காண்பதுகூட தேசத்துரோகம் என்றே நான் கூறுவேன்” என்றார் காந்தி,

1919-ம் ஆண்டில் முஸ்லிம்களின் கிலாபத் இயக்கத்தை இந்துக்களும் ஆதரிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் காந்தி. பதிலுக்கு காங்கிரஸில் இருந்த இந்துத்துவவாதிகள், `முஸ்லிம்கள் பசு வதையை நிறுத்தவேண்டும் என்பதை நிபந்தனையாக்க வேண்டும்' என்று சொன்னதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த ஒரு கலாசாரத்தையும் நம்பிக்கையையும் சட்டத்தின் மூலம் இன்னொரு பிரிவினரிடம் திணிப்பதை அவர் மறுத்தார்.

`பசு புனிதம்' என்பது ஒரு சாராரின் நம்பிக்கைதானே தவிர, ஒட்டுமொத்த இந்திய மக்களின், இந்து மக்களின் நம்பிக்கை அல்ல. `இந்துக்கள்' எனச் சொல்லப்படுபவர்களில் தலித் மக்களும் சில இடைநிலைச் சாதியினரும் மாட்டிறைச்சி உண்பவர்கள்தான். கேரளாவில் 70 சதவிகித மக்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்பதால்தான் கேரள அரசே மோடியின் `இறைச்சிக்குத் தடை'யை எதிர்த்தது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது தலித் மக்களும் ஒருசில இடைநிலைச் சாதியினரும் மாட்டிறைச்சி உண்கின்றனர். மாட்டிறைச்சி உண்ணாத பெரும்பாலான இந்துக்கள்கூட மாட்டிறைச்சியை அருவருப்பான ஒன்றாகப் பார்க்கிறார்களே தவிர, `பசு புனிதம்' எனக் கருதுவதில்லை.

1857-ம் ஆண்டில் `டன்லப்' எனப்படும் துப்பாக்கித் தோட்டாவில் பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டதாகப் பரவிய செய்தியைத் தொடர்ந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிப்பாய்கள் போராட்டம் நடைபெற்றதை அறிவோம். ஆனால், இந்து சிப்பாய்கள் `தங்கள் வெள்ளை அதிகாரிகள் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது' எனப் போராடவில்லை. தாங்கள் புனிதமென்று கருதும் பசுவின் கொழுப்பைத் தாங்களே கைகளால் தொடவேண்டிய நிலைக்கு எதிராகப் போராடினார்கள். அதேபோல்தான் முஸ்லிம் சிப்பாய்களும் தங்கள் மார்க்கத்தால் `ஹேராம்' என்று விலக்கப்பட்ட பன்றியின் கொழுப்பைத் தாங்கள் தொடவேண்டிய நிலைக்கு எதிராகப் போராடினார்களே தவிர, இந்தியாவில் யாருமே பன்றியிறைச்சி சாப்பிடக் கூடாது எனப் போராடவில்லை. ஒருவர் தன்னுடைய கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையும் மற்றவர்களின் கலாசாரத்தையும் நம்பிக்கையையும் அடுத்தவர்கள் மீது திணிப்பதற்கு எதிரான போராட்டமுமே இதன் அடிப்படை. `பசு வதை' குறித்த காந்தியின் நிலைப்பாடும் இத்தகையதுதான். மோடியின் ஆட்சியில் `பசு பாதுகாப்பு' என்ற பெயரில் 28 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால், 28 முறை காந்தி கொல்லப்பட்டிருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

நன்றி; விகடன்

Last modified on Friday, 30 June 2017 21:38