தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது! Featured

Friday, 07 July 2017 02:00 Written by  இந்நேரம்

களப்போராட்டம், அரசியல் போராட்டம், நீதிமன்றப் போராட்டம் எனக் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல போராட்டங்களை நடத்தியும்கூட நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை.

காவிரியில் தமிழகத்தின் பங்கை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நடுவர்மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு இரண்டையும் இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை. ஏற்கெனவே இத்தகைய அநீதிகளால் சுருண்டுகிடக்கும் தமிழகத்தின் தலையில் அடுத்த அடியை இறக்கியிருக்கிறது கர்நாடக அரசு. தமிழக எல்லையில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ என்ற இடத்தில் சுமார் 6,000 கோடி ரூபாய் செலவில், 2,000 ஏக்கர் நிலப்பரப்பில், 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பிரமாண்டமான அணை ஒன்றை நிர்மாணிக்கும் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கொடுத்திருக்கிறது கர்நாடக அரசு. இந்த அணை அமைக்கப்பட்டால், மைசூரில் இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணையைவிட மிகப்பெரியதாக இருக்கும்.

கர்நாடக மாநிலத்தைத் தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, விரைவில் வரவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளத் துடிக்கிறது. கடந்த முறை காங்கிரஸிடம் ஆட்சியை இழந்த பி.ஜே.பி-யோ, எப்பாடுபட்டாவது மாநிலத்தின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றத் துடிக்கிறது. இதற்காக இரண்டு கட்சிகளுமே சுயநல அரசியல் மோதலை அவிழ்த்துவிட்டுள்ளன. இதில் காவிரியை வைத்தும் லாபம் தேடப் பார்ப்பதுதான் வேதனை.

மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளின் குறுக்கே அணை கட்ட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களின் அனுமதியும் முக்கியம். இது அந்த மாநில அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, தேசிய அரசியல்வாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும்கூட மேக்கேதாட்டூவில் அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார்கள் என்றால், அவர்கள் ஏதோ ஒரு முடிவில் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

ஒரு காலத்தில் மத்தியில் கோலோச்சிய காங்கிரஸ் அரசின் சூழ்ச்சிகளுக்கு ஆட்பட்டு, தமிழகத்தில் அன்றைக்கு இருந்த தி.மு.க அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததால்தான் ஹேமாவதி, கபினி, ஹேரங்கி என்று காவிரியின் குறுக்கே அடுத்தடுத்து அணைகளைக் கட்டிக்கொண்டது கர்நாடகா என்ற பழிச்சொல் இன்றுவரை நீடிக்கிறது. இதுதான் நமக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய தண்ணீர் வெகுவாகக் குறைந்து போனதற்கு முக்கியக் காரணம். இதனால், மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் வெள்ளநீர் ஓடிவரும் ஆறாக மட்டுமே மாறிக்கிடக்கிறது நம் காவிரி. இத்தகைய சூழலில், மேக்கேதாட்டூவில் புதிய அணையைக் கட்டி, இந்த வெள்ளநீரையும் தராமல் வஞ்சிக்கப் பார்க்கிறது கர்நாடக அரசு.

மீண்டும் தமிழகத்துக்கு ஒரு கொடுமை நிகழ்ந்துவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தற்போது மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க அரசுக்கு இருக்கிறது. மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசின் பற்பல நிர்பந்தங்களுக்கும் பணிந்துபோவதுபோல, மேக்கேதாட்டூ விஷயத்திலும் தற்போதைய அ.தி.மு.க அரசு பணிந்துபோனால், இனி தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

இது, உழவர்களின் உரிமைப் பிரச்னை மட்டுமல்ல, தமிழகத்தின் உயிர் ஆதாரப் பிரச்னை!

No one can save Tamil Nadu


நன்றி : விகடன்

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.