ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் லஞ்ச தொகையை அதிகரித்துவிட்டோம்: அரசு ஊழியரின் திமிர்! Featured

By இந்நேரம் August 24, 2017

நெருங்கிய உறவினர் ஒருவர், தனக்குச் சொந்தமான இடத்திற்குப் பட்டா வாங்க தாலுகா அலுவலகத்தை அணுகிய போது அதிர்ந்திருக்கிறார்.

பட்டா வழங்க அரசு நிர்ணயித்த தொகை வெறும் ரூ. 40, ஆனால் பகிரங்கமாக கேட்கப்பட்ட லஞ்சத் தொகை 25 ஆயிரம் ரூபாய் .

"அய்யா... இவ்வளவு பெரிய தொகை லஞ்சமா, முன்னாடி இவ்ளோ இல்லீங்களே??" என்று மயக்கமான உறவினரை தண்ணீர் தெளித்து எழுப்பி, நாட்டின் விலைவாசி, பணவீக்கம், GST வரி போன்றவற்றை விளக்கி அதனால் தான் லஞ்சத் தொகையும் கூடுதல் ஆகிவிட்டது என்ற நியாயமான காரணத்தோடு, "முழு பணமும் நானா எடுத்துக்கப் போறேன்? இங்கே வீ.ஏ.ஓ, ரெவின்யூ இன்ஸ்பெக்டர், நில சர்வேயர், டெபுடி தாசில்தார், தாசில்தார் என லஞ்சம் பிரித்துக் கொள்ளப்படுகிறது" என்று சமாதானப்படுத்தி பணத்தை ரெடி செய்யச் சொல்லி அறிவுறுத்தி அனுப்பிவிட்டார் ஆபிஸர்.

தன் கஷ்டங்களைச் சொல்லி, பட்டா மாற்றத் தேவை வேண்டிய அவசியத்தைச் சொல்லி, கையில் காலில் விழுந்து கெஞ்சியபிறகு பெரிய மனதுடன் ஐந்தாயிரம் ரூபாய் ஆடித் தள்ளுபடி செய்து இருபதாயிரம் ரூபாய்க்கு இறங்கி வந்திருக்கிறார் ஆபிஸர்.

இது #கடலூர் மாவட்டம், #விருத்தாசலம்.

லஞ்ச ஒழிப்புத்துறை? புகார் அளித்தால் மட்டுமே செயல்படும் துறையாக உள்ள இது, கடுமையான கண்டங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.

"இப்படி ஒரு அமைப்பு ஆள்வோருக்கு அவசியம். எங்கெங்கே எவ்வளவு ஊழல் நடக்கிறது; அதற்குரிய பங்கு முறையாகச் சம்பந்தப்பட்டோருக்கு சென்று சேர்கிறதா என்பதைக் கண்காணித்து, தலைமைக்கு புள்ளிவிபரங்களை கொடுக்கும் அமைப்பே DVAC!" எனும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

அதே தாலுகா ஆஃபிஸில் பணி புரியும் அதிகாரி ஒருவரை அணுகி "ஏன் சார்... இது அநியாயமில்லையா?" என்று கேட்டபோது, லஞ்சம் மீதான பாசத்துடன், தனக்கேயுரிய தார்மீக உரிமையுடன் பொரிந்து தள்ளிவிட்டார்.

"லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து என்பதெல்லாம் ஃபேஸ்புக் அளவில் மட்டும்தான். இந்த வாக்கியத்தை சொல்லும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூட, போனவாரம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், பாதுகாப்பு வேணும்னு கேட்டு மனு போட்டிருக்காரு. எங்களை நிர்வகிக்கிற அமைச்சர் மேல போடப்பட்ட குட்கா லஞ்ச வழக்கு மொதல்ல நிக்குதான்னு பாருங்க தம்பி வந்துட்டீங்க பேச ..." சொல்லி முடிக்கும்போது ஊறி, உப்பிப் போன பிணம் மாதிரி கண்ணுக்குத் தெரிந்தார்.

லஞ்ச ஊழல் ஒழிப்பிற்காக Satta Panchayat Iyakkam - சட்ட பஞ்சாயத்து இயக்கம் , Arappor - அறப்போர் இயக்கம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடினாலும், புகார் வந்தால் மட்டுமே நாற்காலியை விட்டு எழுந்திருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையைக் கண்டித்து, #CloseDownDVAC என்ற tag இல் போராட்டம் தொடர்கிறது.

யாருடைய அபிப்ராயங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்! புகாருக்கு கட்டாயம் நடவடிக்கை உண்டு. எனில் ஏன் முயற்சி செய்யக் கூடாது?

நியாயமாக, முறையாகச் சம்பாதித்த பணம், ஊழலற்ற இந்தியாவை நேசிப்பவனாக, நாட்டிற்கு வரி செலுத்தும் குடிமகனாக நான் எவனுக்கும் லஞ்சம் தர மாட்டேன் என்ற உறுதியுடன், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு போன் செய்துவிடுவோமே! தொடர்புடைய இணைய தளமுகவரிகள், தொலைபேசி எண்களை இங்கே தந்துள்ளேன்.

THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION (தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை)

The Director,
Vigilance and Anti-Corruption,
No. 293, MKN ROAD,
ALANDUR, CHENNAI – 600 016.
Telephone : +91-44-22311049 (Direct) +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142
Fax : +91-44-22321005
இமெயில்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
இணைய தள முகவரி: www.dvac.tn.gov.in

நன்றி: Mohamed Sardhar

 

Last modified on Thursday, 24 August 2017 12:21