பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் - வெட்கக்கேடும்! Featured

Friday, 01 September 2017 08:14 Written by  இந்நேரம்

`ஏழை மக்களையும் தேசத்தையும் ஏமாற்றிக் கொள்ளையடித்துப் பணம் சேர்த்தவர்கள், இப்போது நிம்மதியாகத் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கணக்கில் காட்டப்படாமல் இருந்த மூன்று லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துவிட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த 18 லட்சம் பேர், அரசின் கண்காணிப்பின்கீழ் வந்துவிட்டனர். 1.25 லட்சம் கோடி அளவிலான கறுப்புப் பணம் பிடிபட்டுள்ளது. கறுப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை தொடரும்" என, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி முழக்கமிட்டார். வழக்கமாக, பிரதமர் ஆற்றும் சுதந்திர தின உரையைவிட இந்த முறை சுருக்கமான உரையாக அமைந்துவிட்டது. சுருக்கமான உரையிலேயே பொய்கள் என்றால், விரிவாக உரையாற்றியிருந்தால்..?

கறுப்புப் பணம் எங்கே?

`பணமதிப்பு நீக்க நடவடிக்கையில், ரிசர்வ் வங்கிக்குத் திரும்பிய பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் கறுப்புப் பணம் எவ்வளவு என்ற விவரத்தை ஏன் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்கள்?' என்ற கேள்வி, எல்லோர் மனதிலும் எழுந்தது. ஆனால், இதுகுறித்து அரசோ, ரிசர்வ் வங்கியோ எந்த ஒரு முறையான பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் `பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 99 சதவிகிதம் திரும்ப வந்துவிட்டன. நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது, புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15,44,000 கோடி ரூபாய். இப்போது 15,28,000 கோடி ரூபாய் திரும்ப வந்துள்ளது' என ரிசர்வ் வங்கி தன் ஆண்டறிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், `கறுப்புப் பணம் எங்கே?' என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

`பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்த ரிசர்வ் வங்கியின் செயல்பாடு, வெட்கக்கேடானது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ரிசர்வ் வங்கிக்குக் கிடைத்த லாபம் 16,000 கோடி ரூபாய். ஆனால், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காகச் செலவிடப்பட்ட தொகையோ 21,000 கோடி ரூபாய். இதைப் பரிந்துரை செய்த பொருளாதார நிபுணருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். 99 சதவிகித ரூபாய் நோட்டுகள் சட்டரீதியாகவே மாற்றப்பட்டுவிட்டன. எனில், `கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா?’ என அடுக்கடுக்கான கேள்விகளை ப.சிதம்பரம் எழுப்பியுள்ளது நியாயமாகத்தானே தெரிகிறது?

உண்மையில் என்ன ஒழிந்தது?

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் குறித்து தொலைக்காட்சியில் பிரதமர் மோடி பேசியபோது, `பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம், கறுப்புப் பணம் பிடிபடும்; போலி பணம் பிடிபடும்; ஹவாலா ஒழியும்; லஞ்சம் ஒழியும்' என்றார். ஆனால், இப்போது அருண் ஜெட்லி `ரொக்கப் பணப் பரிமாற்றத்தை ஒழித்து, டிஜிட்டல் மயமாக மாற்றுவதற்காகத்தான் பணமதிப்பு நீக்கம் கொண்டுவந்தோம்' என அண்டப்புளுகு புளுகிறார்கள். `அது ஒழியும்... இது ஒழியும்' என மக்கள் நேரத்தையும், உயிர்களையும், பொருளாதாரத்தையும், வேலைகளையும், நிம்மதியையும் உண்மையில் ஒழித்துவிட்டனர். மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டனர் என்பதுதான் உண்மை.

`50 நாள்கள் அவகாசம் கொடுங்கள். டிசம்பர் (2016) கறுப்புப் பணத்தை வெளிப்படுத்திக்காட்டுகிறேன். நான் சொல்வதில் ஏதேனும் தவறு இருந்தால், பிரச்னை தீராவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள்' என பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு 2016, நவம்பர் 13-ம் தேதி கோவாவில் மக்கள் முன் முழக்கமிட்டார் மோடி. இப்போது 50 நாள்கள் அல்ல, 300 நாள்கள் முடிவடையப்போகின்றன. நீங்கள் சாக வேண்டாம். நல்லபடியாக, நீண்டநாள் வாழுங்கள். ஆனால், இன்னும் ஒவ்வொரு தேர்தலுக்கு முன் நடைபெறும் அரசியல் கட்சிகளின் பிரசாரத்தைப்போல பேசுவது சரிதானா பிரதமரே?

புதிய இந்தியா!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். இதற்கு 125 கோடி மக்களின் பங்களிப்பு வேண்டும். கூட்டு முயற்சியினால் மட்டுமே நம் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்’ என ஒருமுறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை `புதிய இந்தியா... புதிய இந்தியா' என இன்னும் எத்தனை முறை `புதிய இந்தியா' வசனத்தைச் சொல்லப்போகிறீர்கள் பிரதமரே? நம் இந்தியா, ஏற்கெனவே பிறந்துவிட்டது. தாய் நாடு நன்றாக வளர பல தலைவர்கள் ஏற்கெனவே அஸ்திவாரம் போட்டுவிட்டனர். இனி நம் இந்தியாவை சாதி, மதம், மொழி, இனம் என எந்த ஒரு வேற்றுமையின்றி நன்றாக வளர்த்தாலே போதும். வழக்கமாக மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்த்தால் அரசியல் செய்கிறார்கள்; சாமானியர்கள் கேள்வி கேட்டால் `தேச விரோதிகள்', `Anti Indian' என முத்திரை குத்துகிறார்கள். இப்போது ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கைக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? பணமதிப்பு நீக்கம் தோல்வியடைந்துவிட்டது என உண்மையை ஒப்புக்கொள்வீர்களா? இனியாவது மௌனம் கலைப்பீர்களா பிரதமரே?

நன்றி: விகடன்

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.