இது பெற்றோர்களுக்கானது!

October 24, 2017

ஒரு ஓவியனாக, சமீபத்தில் நெருடிய விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இது பெற்றோர்களுக்கானது!

தற்போதெல்லாம் KG வகுப்பின் தொடக்கத்திலேயே குழந்தைகளுக்கு தேவையான பயிற்சிகள் (assignments) வகுப்பாசிரியர்களால், ஆன்லைனில் அப்லோடு செய்யப் படுகின்றன. அவற்றை பெற்றோர்கள் வீட்டில் பிரிண்ட் செய்து வீட்டுப் பயிற்சியை மேற்கொள்ளும்படி கட்டாயப் படுத்தப் படுகிறார்கள். டிஜிட்டல் உலகம், தவிர்க்க இயலாது, சரி!

இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம், நேரத்தை மிச்சப்படுத்தி, வேலையைச் சுலபம் ஆக்குகிறோம் பேர்வழி என்று பயிற்சிக்குத் தேவைப்படும் படங்களை பெற்றோர்களே நிமிடத்தில் கூகுளிட்டு தேடி பிரிண்ட் செய்து தருவது தான்.

 இது மிக ஆபத்தானது. குழந்தைகளின் சிந்தனை, கற்பனைத்திறன் ஆகியவற்றை முற்றிலுமாக மழுங்கடிக்கக் கூடியது.

 வகுப்பாசிரியரே கட்டாயப் படுத்தினால் கூட, பயிற்சிக்குத் தேவைப்படும் படங்களை பிரிண்ட் செய்து தராதீர்கள்!

நேரம் சற்றுக் கூடுதலாக ஆனாலும், பிரிண்ட் போன்ற தரம் இல்லை என்றாலும் பரவாயில்லை, பிள்ளைகளின் கையாலேயே படத்தை வரைந்து பயிற்சியை முடிக்க ஒத்துழைப்பைத் தாருங்கள். தேவை எனில், மாதிரி படத்தைக் காண்பித்து வரைய பழக்குங்கள்!

பயன்? ஏராளம்!

பிள்ளைகளின் கற்பனைகள் விரிவடையும்; சிந்தனைகள் சிறப்பாகும்; தன் கையால் வரைந்து உருவாக்கியது எனும் மகிழ்ச்சியும், மன திருப்தியும் மிக வலியவை; இதன் மூலம் உருவாகும் தன்னம்பிக்கை, மனோ திடம் போன்ற பல்வேறு உளவியல் பயன்கள் கிடைக்கும். பெற்றோருக்கு இதில் சற்று சிரமங்கள் இருப்பினும் ஒரு மாதம் முயற்சி செய்து பாருங்கள்; பயனுள்ள தகவல் எனில் தயங்காமல் இதனைப் பகிருங்கள்.

நன்றி! - www.facebook.com/SardhaART

-Mohamed Sardhar

தற்போது வாசிக்கப்படுபவை!