பாபர் மசூதி விவகாரம் குறித்து டெல்லி பத்திரிகையாளரின் அலசல்! Featured

By இந்நேரம் December 05, 2017

பாபர் மசுதி விவகாரம் குறித்து டெல்லி பத்திரிகையாளர் அஜாஸ் அஷ்ரஃப். தி ஹவர் பிஃபோர் டான் என்ற அவரது நூலின் தமிழ் வடிவம்.

அயோத்தியில் மசூதியையும் சேர்த்து கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கான எண்ணம் மத்திய அரசிடம் இருந்தாலும், அங்கே ராமர் கோவில் மட்டுமே கட்டப்பட வேண்டும் என்றும் மோகன் பகவத் அண்மையில் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். 1988இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்று, பின்னர் 1994 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 1997 மார்ச் வரை 26ஆவது இந்திய தலைமை நீதிபதியாக ஏ.எம்.அகமதி இருந்தார். ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி சர்ச்சை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் அவரும் ஒருவர். 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அரசாங்கம் எடுத்த இரண்டு முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியதாக அந்த வழக்கு இருந்தது.

மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் உட்பட 67.7 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றுவதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. அந்த அவசரச் சட்டம் பின்னர் அயோத்தியில் உள்ள சில பகுதிகளைக் கையகப்படுத்தும் சட்டமான போது, இஸ்மாயில் ஃபரூகி வழக்கு என்றழைக்கப்படுகின்ற வழக்கைச் சந்திக்க நேர்ந்தது. மேலும், குடியரசுத் தலைவர் இந்த விவகாரம் தொடர்பாக, ஹிந்து கோவில் அல்லது ஹிந்து மதம் தொடர்பான கட்டிடம் ஏதாவது மசூதி கட்டப்பட்டு இருந்த இடத்தில் இருந்ததா என்று கேட்டு குறிப்பு ஒன்றை அனுப்பி உச்சநீதிமன்றத்தின் கருத்தை வழங்குமாறு கேட்டிருந்தார். இந்த இரண்டு விவகாரமும் அகமதியை உள்ளடக்கிய ஐந்து உறுப்பினர்கள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தன. குடியரசுத் தலைவரின் அந்தக் குறிப்பு ஏகமனதாக அனைவராலும் நிராகரிக்கப்பட்டது. ஆனால் சட்டத்தில் இருந்த ஒரு பிரிவு தவிர, அந்த கையகப்படுத்தும் சட்டம் உச்சநீதிமன்ற அமர்வால் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் அது அனைவரும் ஒருமித்து அளித்த தீர்ப்பாக இல்லாமல், அகமதி மற்றும் நீதிபதி எஸ்.பி.பரூச்சா ஆகிய இருவரின் மாறுபட்ட தீர்ப்புடன் பெரும்பான்மையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக இருந்தது. அவர்கள் இருவரும் குடியரசுத் தலைவரின் குறிப்பு, கையகப்படுத்தும் சட்டம் ஆகிய இரண்டும் அரசியலமைப்புச் சட்டத்திற்கெதிராக இருப்பதாகக் கூறியிருந்தனர்.

வருகின்ற டிசம்பர் 5 அன்று உச்சநீதிமன்றத்தில் இறுதி வாதங்களுக்காக ராமஜென்ம பூமி – பாபர் மசூதி .வழக்கு வரவிருக்கும் சூழலில், தனது படிப்பறையில் அமர்ந்து கொண்டு அவர் வழங்கிய அந்த சிறுபான்மைத் தீர்ப்பை கையில் வைத்துக் கொண்டு அகமதி நேர்காணலுக்குத் தயாரானார். அந்த நேர்காணலின் சில பகுதிகள்:

ஜனாதிபதியின் அனுப்பி வைத்த அந்தக் குறிப்புகளை ஐந்து நீதிபதிகளும் ஒருமனதாக ஏன் நிராகரித்தனர்?

பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக ஹிந்து கோவில் ஒன்று இருந்ததா என்பதைப் பற்றி கண்டு பிடிப்பது எங்களால் முடியாத காரியம் என்று நாங்கள் அனைவருமே கருதினோம். அந்தக் குறிப்பு, சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டதாக இருக்கவில்லை. அது உண்மைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக்கூடிய ஒன்றாகவே இருந்தது. அவ்வாறு இல்லையெனில், பாபர் மசூதிக்கு முன்னர் அங்கே கோவில் இருந்ததா என்பதைத் தீர்மானிப்பதற்காக அந்த இடத்தை யார் தோண்டி எடுப்பது?

அதைச் செய்ய முடியுமா என்ற பிரச்சனையும் எழுந்திருக்கும் என்று நம்புகிறேன்

அதற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும் பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் (சிரிக்கிறார்) போன்ற வரலாற்றாசிரியர்களையும் நாங்கள் ஈடுபடுத்த வேண்டும். வரலாற்றாசிரியர்களும் கூட ஒருவருக்கொருவர் மாற்றுக் கருத்தைக் கொண்டவர்களாகத்தானே இருக்கிறார்கள். இல்லையா?

ஜனாதிபதியின் அந்தக் குறிப்பு ஒருசார்புடையதாக இருந்ததாக அப்போது சிலர் கருத்து சொன்னதாக எனக்கு நினைவிருக்கிறது. ஹிந்து ஆலயம் அல்லது ஹிந்து மதம் சார்ந்த கட்டிடம் என்பதற்குப் பதிலாக வெறுமனே கட்டிடம் இருந்ததா என்று கேட்டிருக்கலாம் என்று அவர்கள் அப்போது சொன்னார்கள்.

ஹிந்து கட்டிடம் என்று சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பரூச்சாவும், நானும் வழங்கிய அந்த சிறுபான்மைத் தீர்ப்பு இந்த விவரங்களுக்குள் சென்றிருந்தது. பத்தி 133ஐப் பாருங்கள். அதில் நாங்கள் இவ்வாறு கூறியிருந்தோம். சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்து அது இடிக்கப்பட்டு, சர்ச்சைக்குரிய (பாபர் மசூதி) கட்டிடம் கட்டப்பட்டதா என்பது தான் இங்கே உள்ள சர்ச்சை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இங்கே எழுப்பப்படும் கேள்வி, சர்ச்சைக்குரிய இடத்தில் ஹிந்து ஆலயம் அல்லது ஹிந்து மதம் தொடர்பான கட்டிடம் இருந்ததா? என்றிருக்கிறது. இரண்டாவதாக, சர்ச்சைக்குரிய கட்டிடம் அமைவதற்கான இடம் அளிக்கப்படுவதற்காக கோவில் ஏதேனும் அங்கே இருந்து தகர்க்கப்பட்டதா என்ற உண்மை அறியப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததல்ல.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கோவில் அல்லது ஹிந்து மதம் சார்ந்த கட்டிடம் இருந்ததா இல்லையா என்ற கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றே நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோமே தவிர, அங்கே ராமர் கோவில் இருந்ததா என்பதைப் பற்றி அல்ல. கி.பி.1528இல் பாபர் மசூதி கட்டப்படுவதற்காக ராமர் கோவில் இடிக்கப்பட்டதா என்பதுதான் அந்த சர்ச்சைக்கான உண்மையான காரணமாக இருந்தது. சொல்லப் போனால், அது சர்ச்சையின் முக்கிய இலக்கை மாற்றி வைப்பதாகவே இருந்தது.

அயோத்தி நிலம் கையகப்படுத்துதல் சட்டம் என்று பொதுவாக அறியப்படும் அயோத்தியில் சில பகுதிகளைக் கையகப்படுத்தும் சட்டம் குறித்து, மதச்சார்பின்மையின் அடிப்படையில்தான் நீங்களும், நீதிபதி பரூச்சாவும் மற்றவர்களுடன் உடன்படாமல் இருந்தீர்கள் என்று நாங்கள் கூறலாமா?

பெரும்பான்மையானவர்களின் கருத்துக்களுடன் நாங்கள் வேறுபட்டதற்கு மதச்சார்பின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அயோத்தியில் நிலத்தைக் கையகப்படுத்துவதன் மூலம், பாபர் மசூதி பல வருடங்களாக எதிரிடை அனுபவ உரிமையுடன் தங்களுக்குச் சொந்தமானதாக இருந்து வருகிறது என்ற முஸ்லீம்களின் சட்டபூர்வமான வாதங்களைப் புறக்கணிப்பதாகவும் இருந்தது. முஸ்லீம் சிறுபான்மையினர் அப்போது அவ்வாறான வாதத்தையே முன்வைத்து வந்தனர். வரவிருக்கும் சட்டத்தின் கீழ் நிலத்தைக் கையகப்படுத்தி 67.7 ஏக்கர் நிலத்திற்கு மத்திய அரசு உரிமையாளராக மாறுவதன் மூலம் அவர்களின் இந்த வாதம் மறுக்கப்படுகிறது. பாபர் மசூதி சர்ச்சை என்பதொரு சொத்துப் பிரச்சனை – அந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்ற பிரச்சனை என்றே சொல்ல வேண்டும்.

எதிரிடை அனுபவ உரிமை என்று நீங்கள் எதைக் குறிக்கிறீர்கள்?

பாபர் மசூதிதான் ராமரின் பிறந்த இடம் என்று உரிமை கோரப்படுகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளாக பாபர் மசூதி அங்கே இருந்து வந்தது. மசூதி அங்கே இருந்தது அனைவராலும் அறியப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எதிரிடை அனுபவ உரிமையின் பேரில் பாபர் மசூதி முஸ்லீம்களுக்கே சொந்தமானது.

லாகூரில் இருக்கும் ஷாஹித்கஞ்ச் குருத்வாரா மீது முஸ்லீம்கள் உரிமை கொண்டாடிய போதும் அதை எதிர்த்து வைக்கப்பட்ட வாதம்தானே இந்த எதிரிடை அனுபவ உரிமை என்பது.

நாம் மிகப் பழமையான நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது போன்று நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மனிதன் ஏற்படுத்திய கட்டுமான அடுக்குகளின் மீது வெவ்வேறு அடுக்குகள் பல நூற்றாண்டுகளாக இடம் பெற்றுள்ளன. அதனால்தான் கடந்த காலத்திற்குள்ளாக நீங்கள் எவ்வளவு தூரம் சென்று உங்களுடைய உரிமைகளைக் கோரலாம் என்பதற்கு சில வரம்புகள் இருக்கின்றன. இந்த எதிரிடை அனுபவ உரிமை என்பது வரலாற்று நினைவுச் சின்னங்களுக்குப் பொருந்தாது. உதாரணமாக, உங்கள் சொத்தை வேறு யாரேனும் வைத்திருந்து, நீங்கள் 12 வருடங்களுக்கு அமைதியாக இருப்பீர்கள் என்றால், நீங்கள் உங்கள் சொத்தின் மீதான உரிமையை இழந்து விடுவீர்கள். அந்த மற்றொருவர் எதிரிடை அனுபவ உரிமையின் மூலம் அந்த இடத்தைத் தன்வசம் பெறுவார்.

நீங்களும், நீதிபதி பரூச்சாவும் இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்று ஏன் கருதினீர்கள்?

எங்கள் தீர்ப்பில் உள்ள பத்தி 138 இதை விளக்குகிறது. கையகப்படுத்தப்பட்ட சொத்துகளை நிர்வகிக்கும் போது, சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த அந்தப் பகுதியில் இந்தச் சட்டம் அமலாவதற்கு முன்னராக இருக்கும் நிலையை மத்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று சட்டத்தின் 7(2) பிரிவு கூறுவதை நீங்கள் காணலாம். சட்டம் அமலாவதற்கு முன்னராக சர்ச்சைக்குரிய அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது, சிலைகள் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் வைக்கப்பட்டு விட்டன, பூஜைகள் நடந்து வருகின்றன என்பதாக நாங்கள் கருத்துக்களைத் தெரிவித்தோம். ஆக சட்டப்பிரிவு 7(2) சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் பூஜை நடத்துவதை நிலைநிறுத்துவதாகவே இருந்தது. அதனாலேயே நாங்கள் அவ்வாறு கூறினோம். அங்கே இருந்த கட்டுமானம் மிக மோசமான செயலின் மூலமாக இடிக்கப்பட்டது என்ற உண்மை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று அந்த சிறுபான்மை தீர்ப்பில் இருப்பதை நான் மேற்கோளிட்டுக் காட்டுகிறேன். உண்மையில் அயோத்தி குறித்த மத்திய அரசாங்கத்தின் வெள்ளை அறிக்கையில் இருந்தே மேற்கோளை எடுத்துக் காட்டி, இந்த செயலைச் செய்தவர்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக மட்டுமல்ல, மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீதும் தாக்குதலை நடத்தினார்கள் என்பதை வலியுறுத்தினோம்.

அந்தச் சட்டம் பாபர் மசூதியை இடித்த அந்த கண்டிக்கத்தக்க செயலை ஏற்று ஒப்புக் கொண்டது என்று அந்தச் சிறுபான்மை தீர்ப்பு ஏன் முடிவுக்கு வந்தது?

பாபர் மசூதி எவ்வாறு இடிக்கப்பட்டது என்பதை வெள்ளை அறிக்கையிலிருந்து மேற்கோளிட்டு காட்டிய பின், நீதிபதி பாரூச்சாவும், நானும் பத்தி 140இல் இவ்வாறு குறிப்பிட்டோம். பெரும்பான்மை மதத்தின் ஆதரவாளர்களாக இருக்கும் இந்தியக் குடிமக்கள் மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களின் மீது உரிமை கொண்டாடி, தங்களுடைய பெரும் எண்ணிக்கையை வைத்து பொதுஅமைதிக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் அதற்கான உகந்த நிலைமைகளை உருவாக்கும் போது,, அந்த வழிபாட்டுத்தலங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாது, பொது ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான சட்ட, ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரசாங்கத்தின் கடமையாக இருக்கிறது. பொது அமைதியை ஏற்படுத்துவதற்காக அந்த வழிபாட்டுத்தலங்களை அரசே கையகப்படுத்திக் கொள்வதை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காது. இத்தகைய சூழ்நிலைகளில் வழிபாட்டுத்தலங்களைக் கையகப்படுத்துவதை ஏற்றுக் கொள்வதென்பது அரசியலமைப்பிலிருந்து மதச்சார்பின்மைக் கொள்கைகளை நீர்த்துப் போக வைப்பதாகும் என்று நாங்கள் முடித்திருந்தோம்.

நீங்களும், நீதிபதி பரூச்சாவும் குடியரசுத் தலைவரின் குறிப்புகளும்கூட மதச்சார்பின்மைக்கு எதிராக இருந்ததாகவே கருதினீர்கள் இல்லையா?

ஏனென்றால் அந்தச் சட்டம், குடியரசுத் தலைவரின் குறிப்பு என்று இரண்டுமே ஒரு மதத்திற்குச் சாதகமாகவும், மற்றொரு மதத்திற்கு எதிராகவும் இருந்தன. மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகும். எனவே நீங்கள் அதை மீறும் போது, அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நீங்கள் செயல்படுவதாகவே அமைந்து விடும்.

1992 டிசம்பர் 6க்கு முன்னதாக இருந்த சில வாரங்களில் நிலவிய நிலைமையை உச்சநீதிமன்றம் தவறாகப் புரிந்து கொண்டதாக இப்போது நீங்கள் நினைக்கிறீர்களா? எல்லாவற்றிற்கும் மேலாக, கரசேவை நடத்துவதற்காக மக்கள் கூடுவதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என்று முறையீடு செய்யப்பட்டிருந்ததே.

அப்போதைய தலைமை நீதிபதி வெங்கடாச்சலையா அந்த அடையாள கரசேவையை அனுமதித்திருக்கா விட்டால், பாபர் மசூதி இன்று அங்கே இருந்திருக்கும். அது இடிக்கப்பட்டிருக்காது. அந்த முறையீட்டில் கோரியிருந்தவாறு கரசேவைக்கு எதிராக அதைத் தடைசெய்வதற்குப் பதிலாக, மசூஹ்டிக்கு எதிரானவர்களுக்குப் பயன்படும் வகையிலேயே நிவாரணம் வழங்கப்பட்டது. நீதிபதி வெங்கடாச்சலையா அடையாள கரசேவைக்கு அனுமதி வழங்கினார்.

அடையாள கரசேவை என்றால் என்ன?

அடையாளம் என்ற வார்த்தையை அவர் வரையறுக்கவில்லை. அதனால்தான் அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு பெரும் எண்ணிக்கையில் மக்களை கடப்பாறை போன்ற பொருட்களுடன் கூட்டிக் கொண்டு வந்து மசூதியை இடித்துத் தள்ளினார்கள். காவல்துறை உள்ளிட்டு யாரும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த இடத்தில் சிலை நிறுவப்பட்டதுமே, அரசாங்கம் அந்த நிலத்தைக் கையகப்படுத்தி, நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பிருந்த நிலையைத் தொடரச் செய்தது. எனவே பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன.

இப்போதைய நிலைமைக்கு வருவோம். அயோத்தியில் ராமர் கோவில் மட்டுமே கட்டப்படும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது போன்ற அறிக்கையொன்றை பகவத் வெளியிடுவதற்கு இது சரியான நேரம் அல்ல. இந்த விவகாரம் ஏற்கனவே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கும் போது, விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பாக அந்த நீதிமன்ற அமர்விற்கு ஒரு செய்தியை அனுப்புவது போன்ற தவறான அபிப்ராயத்தையே இவ்வாறான அறிக்கை தருகிறது. அயோத்தியில் கோவில் மட்டுமே கட்டப்படும் என்று கூறியிருப்பதை பகவத் தவிர்த்திருக்கலாம். ஏற்கனவே கோவில், மசூதி இரண்டையும் அயோத்தியில் கட்டுவதற்கான உறுதிமொழியை மத்திய அரசு அளித்திருப்பதை பகவத் மறந்து விட்டார். அயோத்தி நிலம் கையகப்படுத்துதல் சட்டம், குடியரசுத்தலைவரின் குறிப்பு ஆகியவை பற்றி நாங்கள் விசாரித்த போது, ​​அரசுத் தலைமை வழக்கறிஞரிடமிருந்து ஒரு விளக்கத்தைக் குறிப்பாகக் கேட்டோம். ராமர் கோவில், மசூதி இரண்டையுமே நிர்மாணிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. ஆனாலும் அவை கட்டப்படுவதற்கான இடம் உச்சநீதிமன்றம் குடியாசுத் தலைவர் குறிப்பு பற்றிய தனது கருத்துக்களை வழங்கிய பின்னரே தீர்மானிக்கப்படும் என்று அவர் அப்போது விளக்கமளித்தார். எனவே அயோத்தியில் கோவில், மசூதி இரண்டையும் கட்டுவதற்கான கட்டாயம் அரசாங்கத்திற்கு இருக்கிறது.

உச்சநீதிமன்ற அமர்வை மிரட்டுவது என்பதாக பகவத்தின் இந்தக் கருத்தை நாம் பார்க்கலாமா?

அயோத்தி விவகார விசாரணையின் முடிவைப் பாதிக்கும் வகையில் இருப்பதாக பகவத்தின் அறிக்கையை எடுத்துக் கொள்ளலாம் என்றே நான் சொல்லுவேன். விசாரணை வரும் வரையில் காத்திருந்து, விசாரணையின் போது அதில் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துகளை ஒருவர் சொல்வதுதான் நாகரிகமாகும்.

அவருடைய அந்தக் கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பதாகாதா?

அந்த அறிக்கையை அவர் தவிர்த்திருக்க வேண்டும். அயோத்தி குறித்த பகவத்தின் கருத்து, அந்த விவகாரத்தை விசாரிக்கும் அமர்வின் மீது கொடுக்கப்படும் அழுத்தம் என்பதாகவே சிலர் பார்க்கலாம். ஆனால் அவரது அந்தக் கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணத்தைக் கொண்டிருப்பதாகக் கூற முடியாது. இருப்பினும் பகவத்தின் கருத்து நீதிமன்ற அவமதிப்புக்கு உரியதா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்.

அயோத்தி நிலம் கையகப்படுத்தல் சட்டம், குடியரசுத் தலைவரின் குறிப்பு ஆகியவற்றை விசாரித்த போது உங்களுக்கு அழுத்தம் தரப்படுவதாக உணர்ந்தீர்களா?

நாங்கள் ஐவருமே அந்த விசாரணையின் போது மிகவும் சுதந்திரமாகவே இருந்தோம். எங்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை. என்னுடன் பணிபுரிந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், நீதிபதி பரூச்சாவுடன் சேர்ந்து கருத்து வேறுபாடு கொண்ட தீர்ப்பை வழங்குவதற்கு நான் எந்த தயக்கமும் காட்டவில்லை.

இது பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிந்திருக்கும் நேரம். உச்சநீதிமன்றத்தில் இருந்து நீங்கள் ஓய்வு பெற்று நீண்ட காலமாகி விட்டது. அந்த இடிபாடு உங்களைப் பொறுத்த வரை எதற்கான அடையாளமாக இருக்கிறது?

பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவங்களால் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை பாதிக்கப்பட்டிருப்பதை அது குறிப்பதாக இருக்கிறது. உலகின் அனைத்து முக்கிய மதங்களைப் பின்பற்றுபவர்களையும் கொண்ட ஒரு நாடாக இந்தியா இருக்கிறது.

ஹிந்துக்கள், முஸ்லீம்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் யூதர்களும் இருக்கிறார்கள். நீங்கள் எந்த மதத்தைக் குறிப்பிட்டாலும், அது இந்தியாவில் இருக்கும். இருந்தும் அனைவரும் இந்திய அரசியலமைப்பின் குடையின் கீழ் ஒன்றாக வாழ்கின்றனர். அந்தக் கருத்தாக்கம் இப்போது உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இரு பெரும் நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கிடையே நீண்ட நெடும் காலமாக நிரந்தர மோதல்கள் இருப்பதென்பது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நீதித்துறை தன்னுடைய பங்கை ஆற்ற முடியுமா?

நீதித்துறை அவ்வாறான முயற்சிகளைச் செய்ய முடியும்.

எவ்வாறான முயற்சி?

இந்த ஆண்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஒருவர் ஒருகட்டத்தில் தான் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினாரே …

நீங்கள் தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ்.கேஹரைச் சொல்கிறீர்கள். ஆனால் அயோத்தி சர்ச்சையில் இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அவர் சொன்ன போது அதனை எதிர்த்து கூக்குரல் எழுந்ததே.

அவ்வாறு அவர் முன்வந்தது குறித்து ஒரு நாள் நான் நீதிபதி கேஹரிடமே கேட்டேன். தான் அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று அவர் கூறினார். அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு யாரேனும் அவருடைய உதவியை எதிர்பார்த்தால், அவ்வாறு செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியதாகவும், பேச்சுவார்த்தைகள் மூலமாக ஒரு முடிவு சாத்தியமென்றால், அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறியதாகவும் அவர் கூறினார்.

நீதிபதியாக இருக்கும் ஒருவரால் சமநிலையான பார்வையைக் கொண்டு பாரபட்சமில்லாமல் விஷயங்களைக் கையாள முடியும் என்று பலரும் நினைப்பதால்தானே?

அது சரிதான்.

நீதிபதி கேஹர் ஹிந்துவோ அல்லது முஸ்லீமோ இல்லை என்ற உண்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா?

அது தேவையில்லை. ஒரு சர்ச்சை நீதிபதி ஒருவரின் முன்பாக விசாரணைக்கு வைக்கப்படும் போது, அவர் தனக்கு முன்பாக வைக்கப்படுவதை வைத்தே முடிவு செய்வார்.

இரண்டு மதங்களோடு சம்பந்தப்பட்டிருக்கும் சர்ச்சைகளில் வழங்கப்படும் தீர்ப்பு அந்தப் பிரச்சனையை முற்றிலும் தீர்க்கும் வகையில் இருக்குமா அல்லது அவர்களுக்கிடையே இருந்த இடைவெளியை இன்னும் அதிகரிக்குமா?

இந்த அயோத்தி சர்ச்சை எந்த வழியில் சென்றிருக்கிறது என்பதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். ஒரு வகையில் அது பிளவை அதிகரித்திருக்கிறது. நாம் பார்த்ததில் இருந்து சொல்வதனால், அயோத்தி பிரச்சினையில் இரு சமூகங்களுக்கு இடையில் இருந்த பிளவு மிகவும் அதிகரித்தே இருக்கிறது.

அயோத்தி சர்ச்சை பற்றிய அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு இந்த இடைவெளியை அதிகரித்திருக்கிறதா? அந்தத் தீர்ப்பில் வழக்கைத் தொடுத்தவர்கள் ஒருபோதும் கேட்டிராத வகையில் சர்ச்சைக்குரிய நிலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது,

ஆமாம், அந்தத் தீர்ப்பின் மூலம் பிளவு அதிகரித்திருக்கிறது.

இரண்டு நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்போது, ​​அந்த வழக்கில் தோற்பவர் ஏமாற்றம் மற்றும் மனதளவில் காயம் அடைந்தவராகி விடுகிறார் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவரது இந்தக் கருத்து அயோத்தி போன்ற சர்ச்சைகளுக்கும் பொருந்துமா?

பொருந்தும். இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டதொரு வழக்கில், ஒருவர் மட்டுமே ஏமாற்றமடைகிறார். ஆனால் இங்கே இந்த சர்ச்சையில் இரண்டு பெரிய சமூகங்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

அப்படியானால் நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டிலும் பேச்சுவார்த்தைகளே அயோத்தி பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் என்று நீதிபதி கேஹர் முன்வந்தது பிரச்சனைகளைச் சரிசெய்வதற்குச் சரியான வழிதானே?

அவர் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு தீர்வு சாத்தியம் என்று நினைத்திருக்கலாம். அவர் மனதில் ஏதோவொன்று இருந்திருக்க வேண்டும் என்றே நான் நம்புகிறேன். இல்லையென்றால் அவர் அந்த வார்த்தைகளை சொல்லியிருக்க மாட்டார். ஆனால் மூன்றாவது நபர் ஒருவர் உள்ளே நுழைந்த போது …

யார்?

சுப்பிரமணிய சுவாமி இங்கே நுழைந்ததன் மூலம் நிலவிவந்த சமநிலை சீர்கெட்டது. அது கேஹரின் பின்வாங்கலுக்கு வழிவகுத்தது என்றே நான் நினைக்கிறேன். (ராம் லல்லாவை வணங்குவதற்கான தனது உரிமையை நிலைநாட்டுவதற்காக ராமர் கோவிலை திரும்பக் கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார்). வழிபடும் உரிமை பாதிக்கப்பட்டதாக யார் வேண்டுமானாலும் சொல்லலாம். திடீரென்று சில முஸ்லிம்கள் தொழுகை நடத்துகின்ற தங்கள் உரிமை பாதிக்கப்பட்டதாகக் கூறலாம். இந்த சர்ச்சையில் இருந்து அரசியல்வாதிகள் விலகி இருந்தால் நன்றாக இருக்கும். .

நீதிமன்றத்திற்கு வெளியே அயோத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண ஒரு பேச்சுவார்த்தைக்கு உதவுமாறு உங்களை எப்போதாவது அணுகியிருக்கிறார்களா?

இல்லை, நான் உச்ச நீதிமன்றத்தில் இருந்தபோது அல்ல. ஆனால் என் பணி ஓய்வுக்குப் பிறகு, அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதம மந்திரியாக இருந்தபோது, ​​அவர் என்னை ஒருமுறை அழைத்தார். முஸ்லீம் சமூகம் எனக்குச் செவிசாய்க்கும் என்று தான் உறுதியாக நம்புவதாக அவர் கூறினார். அது எனக்குத் தெரியாது என்று நான் சொன்னேன், ஆனாலும் அவர் அவ்வாறு சொன்னதை வைத்து அவ்வாறு இருக்கக்கூடும் என்று ஏற்றுக்கொண்டேன். அயோத்தி பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றைக் கூறுமாறு வாஜ்பாயி என்னிடம் கேட்டார்.

உங்கள் மனதில் என்ன திட்டங்கள் இருக்கின்றன என்று நான் அவரிடம் கேட்டேன், என்னிடம் ஒரு திட்டமும் இல்லை, ஆனாலும் அவர்களிடம் சென்று நீங்கள் பேசுங்கள் என்றார். முஸ்லீம்களிடம் போய் எந்தவொரு முன்மொழிவும் இல்லாமல் பேசினால் என் மீது உள்ள நம்பகத்தன்மையை முற்றிலுமாக நான் இழந்து விடுவேன். நான் காற்றில் முழம் போடுவதாக அவர்கள் சொல்வார்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். வாஜ்பாய் ஒரு தாராளவாதியாக இருந்தார். நிலைமைகளைச் சமாளிப்பதற்கான தகுதி அவரதி பிறவிக் குணமாக இருந்தது. ஏதாவது இரண்டு மூன்று திட்டங்களை யோசித்து, அவருடைய கட்சியின் ஒப்புதல் கிடைத்த பிறகு எனக்குத் தெரியப்படுத்துமாறு நான் அவரிடம் சொன்னேன். அதன் பிறகு யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. அந்த முயற்சி முழுமையாக முடிவுக்கு வந்தது.


- தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

Last modified on Tuesday, 05 December 2017 14:22