தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை!

பிப்ரவரி 24, 2018 932

ங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த்து சர் சையது அகமது கான் நின்றார். அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தில் தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தியவர் தாவூத் ஷா. இவ்வகையில் தாவூத் ஷாவை தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை எனலாம்.

தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலுக்கு அருகில் கீழ்மாந்தூரில் 1885 மார்ச் 29-ல் பப்பு ராவுத்தரின் மகனாக தாவூத் ஷா பிறந்தார். இவரது பள்ளித் தோழர் கணித மேதை ராமானுஜம். ராமானுஜத்துக்குத் தமிழ் வராது. தாவூத் ஷாவுக்குக் கணிதத்தின் மேல் ஒவ்வாமை. இருவரின் நட்பு பரஸ்பரக் குறைகளை நிவர்த்திசெய்தது. சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்தபோது உ.வே.சாமிநாதய்யர் இவரின் ஆசிரியராக இருந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை கிடைத்தது. பதவி உயர்வுக்கான தேர்வு எழுதி சப் கலெக்டரானார். அன்றைய நாளில் இந்தப் பதவிக்கு வந்த முதல் இஸ்லாமியர் தாவூத் ஷாதான். மத அறிஞர்கள் கல்வியை உலகக் கல்வி மற்றும் மார்க்கக் கல்வி என்று இரண்டாகப் பிரித்து மார்க்கக் கல்வியை மட்டுமே முன்னிலைப்படுத்தியதையும் முஸ்லிம் பெண் கல்வி கற்க இருந்த தடையையும் தாவூத் ஷா எதிர்த்தார். அவருக்கு எதிராக பத்வா என்னும் மதத் தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டன.

1921-ல் ‘தத்துவ இஸ்லாம்’ என்ற மாத இதழைத் தொடங்கினார். லண்டனிலிருந்து அதை நடத்தினார். அதற்கும் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. பின்னர் இந்த இதழின் பெயரை ‘தாருல் இஸ்லாம்’ என்று மாற்றினார். இதற்கு ‘இஸ்லாமிய வீடு’ என்று அர்த்தம்.

காங்கிரஸில் இருந்த தாவூத் ஷா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். தஞ்சையின் வீதிகளில் கதர் விற்றார். 1940-ல் அதிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்தார். ஜின்னா தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் அவரின் மேடைப்பேச்சை மொழிபெயர்த்து வழங்கினார். ஆங்கிலம், அரபு மொழி யில் இருந்தும் தமிழுக்குப் பல நூல்களை மொழிபெயர்த்தார். புகழ்பெற்ற அரபு காவியமான ‘ஆயிரத்தோர் இரவுக’ளின் சில தொகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து கற்று அது பற்றி உரையாடும் திறனைப் பெற்றார்.

இதனால் கும்பகோணம் வட்டாரத்தில் இவரை கம்ப ராமாயண சாகிபு என்றழைத்தனர். அவரது முக்கியப் பங்களிப்பு குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்ததாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் குர் ஆனை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அதற்கு விளக்க உரை எழுதியவர் தாவூத் ஷா தான். இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை அரபு அல்லாத மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மத அறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று அவர் கள் கருதியதே அதற்குக் காரணம். அதையும் மீறி கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையி லும் தாவூத் ஷா அதனை வெளிக்கொண்டு வந்தார்.

பெரியாருடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ‘‘தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சார்ந்தவர்கள்” என்றார் பெரியார். “என் பள்ளிப்பருவத்தில் ஒரு கையில் குடியரசுப் பத்திரிகையும், மறுகையில் தாருல் இஸ்லாம் இதழும் இருக்கும்” என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

திரைப்படங்கள் மத விரோதமான ஒன்று (இன்றளவும் அது நீடிக்கிறது) எனக் கருதப்பட்ட காலத் தில் திரைப்படங்களுக்கு ஆதரவாக இருந்தார் தாவூத் ஷா. எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் முஸ்லிம் வாழ்வியல் சார்ந்த காட்சிப் பதிவுகளுக்கு இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்திக் கொண்டனர்.

பெண் கல்வி கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த காலத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பஷீர் அகமது, பெண்களுக்காக எஸ்.ஐ.இ.டி கல்லூரியை ஆரம்பித்தபோது, அவருக்கு உறு துணையாக இருந்தார். தமிழ் இஸ்லாமிய சமூகத் தில் முக்கிய சீர்திருத்த ஆளுமையாக மிளிர்ந்த தாவூத் ஷா, தனது 84-வது வயதில் 1969 பிப்ரவரி 24-ல் மரணமடைந்தார். தாவூத் ஷா பற்றிய நூல்களை மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கும் தேவைப்படும் ஒரு இஸ்லா மிய ஆளுமை தாவூத் ஷா!

- எச். பீர்முஹம்மது,

நன்றி: தமிழ் இந்து

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...