மத ஒற்றுமையுடன் ஒன்று கூடி முடிவெடுத்து வெற்றி பெற்ற லால்பேட்டை மக்கள்!

ஜூன் 03, 2018 962

தண்ணீருக்காக பல ஆண்டுகள் போராடிக் கொண்டு இருக்கும் இச்சூழலில் மதம், இனம், ஜாதி பார்க்காமல் கூடி முடிவெடுத்து வெற்றி பெற்றிருக்கின்றனர் லால்பேட்டை மக்கள்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி லால்பேட்டை. அதிக அளவு இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என சிறப்பு பெற்ற இந்த ஊரில் முக்கிய தொழிலே வெற்றிலை சாகுபடி செய்வதுதான். ஆனால் ஒரு காலத்தில் குடிநீர்பஞ்சம், தட்டுப்பாடு, வறட்சியின் பிடியில் சிக்கி தவித்த லால்பேட்டை பகுதி மக்கள் தெரு தெருவாக குடங்களுடன் அலைந்து திரிந்ததுதான் மிச்சம்.

கடைசியில் தங்களுக்கான தீர்வை தாங்களே தேடி கொண்டார்கள். கூடி நின்று தீர சிந்தித்தார்கள். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வாசிகம்பிள்ளை, 1957 ஆம் ஆண்டு தென்ஆற்காடு மாவட்ட ஆட்சியாளர் குன் அஹமத் மற்றும் ஊராட்சி தலைவர் எஸ்.கே.காதிர்ஷா சாஹிப் ஆகியோர்களின் கவனத்திற்கு இந்த பிரச்சனை கொண்டு போகப்பட்டது. ஊராட்சி சார்பில் ஊருக்கு பொதுவான பகுதிகள் இரண்டு தேர்வு செய்து, அதில் நீர்த்தேக்க தொட்டியினை அமைத்து கொண்டனர். இது தற்காலிக தீர்வாகவே இருந்தாலும் அவர்களின் முதல் வெற்றி இதுவே.

24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும், தண்ணீரை தேடி எங்குமே அலைய கூடாது என்றும் மாற்று வழியையும் யோசித்தனர். அதன்படி ஊரில் குளங்கள் ஒட்டியுள்ள 17 பள்ளிவாசல்களில் மின்மோட்டாரைக் கொண்டு தண்ணீர் நிரப்ப நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து, அந்தந்த பகுதி குடியிருப்புவாசிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிவாசிகளின் பிரச்சினைக்கு விடிவு ஏற்பட்டது. இது அவர்களின் இரண்டாவது வெற்றி.

ஆனால் அத்துடன் இவர்கள் நிற்கவில்லை. மொத்த பள்ளிவாசல்களில் உள்ள நீர்தேக்க தொட்டிகளில் உள்ள நீர் அனைத்து தரப்பினருக்கும் பயன்பட வேண்டும் என்ற அடுத்தக்கட்ட யோசனையில் நகர்ந்தனர். அதன்படி, பள்ளிகள், அலுவலகங்கள், வணிக நிலையங்கள், மருத்துவமனைகள் என அனைவருக்குமே தண்ணீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பள்ளிவாசல் நீரானது இனம், மதம், மொழிகளை கடந்து அனைத்து தரப்பினராலும் புழங்கப்பட்டு வருகிறது. இதற்காக குறைந்த கட்டணமாக மாதம் 100 முதல் 200 ரூபாய் வரை பெறப்படுகிறது. இது லால்பேட்டை மக்களின் மூன்றாவது வெற்றி.

இப்படி மக்களின் முக்கிய வாழ்வாதார பிரச்சனையான தண்ணீர் பிரச்சனைக்கு யாரையும் எதிர் பார்க்காமல் இன, மத, ஜாதி எதுவும் பார்க்காமல் மனித நேயத்துடன் செயல் பட்டால் லால்பேட்டைபோல் அனைத்துப் பகுதிகளிலும் ஜெயிக்கலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...