அமெரிக்க விழாவில் அசத்திய ஆரூர் புதியவன் பாடல்!

ஜூலை 02, 2018 862

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ‘தமிழர் கலை விழா’ நிகழ்ச்சியைக் கலக்கிக்கொண்டிருக்கிறது சென்னையைச் சேர்ந்த கவிஞர்.ஆரூர் புதியவனின் பாடல். `இதுவரையில் நான் அமெரிக்கா சென்றதில்லை. ஆனால், என்னுடைய பாடல்கள் தமிழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன' என நெகிழ்கிறார் புதியவன்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஃபெட்னாவின் (FeTNA) `தமிழர் கலைவிழா’ நடைபெற்றுவருகிறது. ஜூன் 29-ம் தேதி முதல் விழா நடந்துகொண்டிருக்கிறது. இந்த விழாவில், உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள், பேச்சாளர்கள், கலைஞர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச் சங்கமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்த விழாவுக்காக, `பேரவை 2018’ எனும் பெயரில் சிறப்பு ஆல்பம் ஒன்றைத் தயாரித்துள்ளனர். விழாவின் தொடக்க நாளில் இந்த ஆல்பம் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தில் இடம்பிடித்துள்ள ஐந்து பாடல்களில் நான்கை கவிஞர் நீலகண்டனும் ஒரு பாடலை கவிஞர் ஆரூர் புதியவனும் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து முனைவர். ஹாஜா கனி (எ) ஆரூர் புதியவனிடம் பேசினோம், “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக கவிஞர் வைரமுத்து நிதி வழங்கும் விழாவில் நான் கலந்துகொண்டேன். தமிழ் இருக்கைக்கு எதிராகப் பல கண்டனக் குரல்கள் எழுந்தன. அப்போது இருக்கைக்கான நியாயங்களைத் தமிழ் தொலைக்காட்சிகள் வழியாக நான் எடுத்துரைத்தேன். இதைத் தொடர்ந்து என்னுடைய நீண்ட நாள் நண்பரும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியுமான ரைஹானா, 'ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கபட்டதற்கான வெற்றி விழா அமெரிக்காவில் நடைபெற உள்ளது, அதில் மழலையர்கள் என்ற பாடலை நீங்கள் எழுத வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். அந்தப் பாடல் தமிழின் பெருமையை, சிறப்பை குழந்தைகள் பாடுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு தற்போது எனக்கு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பாடலுக்கு விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரைஹானாவின் மெட்டுகள் என்னுள் இருந்த சொற்களை எளிமையாக வெளியில் கொண்டுவர மிகவும் உதவியது. இந்தப் பாடல் எழுதும்போது எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதனால்தான் என்னால் இந்தப் பாடலைச் சிறப்பாக எழுத முடிந்தது. அமெரிக்காவுக்கு இதுவரை நான் சென்றதில்லை. ஆனால், என்னுடைய தமிழ் சென்றுள்ளது. இது என் தமிழுக்குக் கிடைத்த பெரிய சிறப்பாக நான் நினைக்கிறேன். திரையுலக பின்புலம் எதுவும் இல்லாத நிலையில் தமிழ் என்ற ஒற்றை வார்த்தைக்காக இந்த அடையாளம் கிடைத்திருப்பதாக நான் கருதுகிறேன். இதற்காகத் தமிழ் சங்கங்களுக்கும் என் பாடலை வரவேற்ற தமிழ் உள்ளங்களுக்கும் எனக்கு வாய்ப்பளித்த ஏ.ஆர் ரைஹானாவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

சின்னப் பூக்களே சேர்ந்து நில்லுங்கள்' எனத் தொடங்கும் புதியவனின் வரிகளில், 'அகரம் சொல்லுவோம் சிகரம் செல்லுவோம் அகர முதலத் தமிழ் படித்து அகிலம் வெல்லுவோம்' என்ற வாக்கியங்கள், தமிழர் கலைவிழாவை அசத்தியிருக்கிறது.

நன்றி: விகடன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...