போலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு ஆபத்தா?

அக்டோபர் 18, 2018 550

போலியோ மருந்து கலப்படம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதேனும் உண்டா? தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

போலியோ சொட்டு மருந்து கலப்பட விவகாரம் நடந்தது என்ன ?

இந்த விவகாரத்தில் தமிழர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஏன்? விரிவாகப் பார்ப்போம் :

இந்த பிரச்சனையை பற்றி முழு விபரமும் அறிய முதலில் போலியோ தடுப்பு மருந்து குறித்து அறிய வேண்டும். இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்துகள் இரண்டு விதங்களாக குழந்தைகளுக்கு கிடைக்கின்றது.

ஒன்று – வாய் வழி அளிக்கப்படும் சொட்டு மருந்து (Oral polio vaccine) .
மற்றொன்று – ஊசி மூலம் செலுத்தப்படும் போலியோ தடுப்பூசி (injectable polio vaccine )
முதல் டைப் போலியோ தடுப்பு மருந்து – வாய் வழியாக கொடுக்கப்படுவதால் அது குழந்தையின் குடலில் சென்று அந்த குழந்தைக்கு போலியோ நோய்க்கு உண்டான எதிர்ப்பு சக்தியை அளித்து மலத்தின் வழியே அந்த வைரஸ் வெளியேறும்.

அதுவே இரண்டாவது வழியான ஊசி ஊசி மூலம் போடப்படும் போலியோ தடுப்பூசியானது அந்த குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆனால் ஊசி மூலம் செலுத்தப்படுவதால் மலத்தின் வழி வெளியேறாது.

சொட்டு மருந்தாக போடப்படும் போலியோ மருந்தின் மூலம் அந்த குழந்தைக்கு மற்றுமின்றி அந்த சமூகத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
ஆம். அந்த இறந்த கிருமிகள்(killed vaccine derived virus) மலத்தின் மூலம் வெளியேறுவதால், அந்த சமூகத்தில் wild virus -ன் இருப்பு குறைந்து ஒட்டுமொத்தமாக அந்த வைரஸ் ஒழிக்கப்பட்டும்.

இப்படித்தான் நாம் 1995 -இல் இருந்து போலியோ சொட்டு மருந்து நாள் என்ற பெயரில் வருடம் இருமுறை ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்த தடுப்பு சொட்டு மருந்து வாய் வழியாக ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போடப்பட்டு வருவதை அனைவரும் அறிவோம்.

இதற்கு Pulse Polio Immunisation என்று பெயர். தேசம் தழுவிய அளவில் ஒரே நேரத்தில் வைரஸ் கிருமிக்கான தடுப்பு மருந்து தரப்படுவது என்பது அந்த வைரஸ் முற்றிலும் நமது சமுதாயத்தை விட்டு துரத்தப்பட ஏதுவாக அமையும்.

அவ்வாறு நாம் தொடர்ந்து போலியோ தடுப்பு மருந்துகளை கொடுத்து வந்ததால் 2011 -ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் புதிதாக போலியோ பாதிக்கப்பட்டவர்கள் இல்லை எனும் நிலையை அடைந்தோம். அதற்கடுத்த மூன்று வருடங்களும் போலியோ இல்லாத நாடாக திகழ்ந்த நம்மை உலக சுகாதார நிறுவனம்”போலியோ இல்லாத நாடாக ” அறிவித்தது.

ஆனாலும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போலியோ நோய் இன்னும் உயிர்ப்புடன் இருந்ததால், நாடு விட்டு நாடு விமானங்கள் மூலம் பயணம் செய்பவர்களால் அந்த கிருமிகள் நமக்கு கடத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும், நாம் இன்னும் வருடம் ஒருமுறை தரும் Pulse Polio Immunisation சொட்டு மருந்து தரும் நாட்களை கடைபிடித்து வருகிறோம். போலியோ நோயை மூன்று வைரஸ்கள் உருவாக்கும். அவை டைப் 1 , டைப் 2, டைப் 3. இவற்றில் உலகம் முழுவதும் இந்த டைப் 2 வைரஸை ஒழித்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு செய்ததை அடுத்து, இந்திய தேசமும் 25 ஏப்ரல் 2016-ம் ஆண்டு முதல் “national switch over day” என்று அறிவித்து அதுவரை போலியோ தடுப்பு சொட்டு மருந்தாக போட்டு வந்த முத்தடுப்பு ( மூன்று வைரஸ்களுக்கு எதிரான தடுப்பு மருந்து) சொட்டு மருந்தை இருதடுப்பு சொட்டு மருந்தாக மாற்றியது. (switch over from trivalent to bivalent vaccine) ஆகவே.. இப்போது தடுப்பு சொட்டு மருந்து உருவாக்கும் அனைத்து உற்பத்தியாளர்களையும் தங்களிடம் வைத்திருக்கும் டைப் இரண்டு வகை போலியோ வைரஸ் கிருமிகளை உடனே அழித்துவிடுமாறு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, 25 ஏப்ரல் 2016 -க்கு பிறகு கொடுக்கப்பட்டு வரும் அனைத்து சொட்டு மருந்துகளிலும் டைப் ஒன்று மற்றும் டைப் மூன்று போலியோவுக்கு எதிரான தடுப்பு மருந்து மட்டுமே இருக்கும். இருப்பினும் , சமூகத்தில் டைப் இரண்டு வைரஸ் எங்கேனும் காணப்பட்டு அதனால் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டால் பாதுகாக்க என்ன செய்வது?

அதற்காகவே பிரத்யேகமாக ஊசி மூலம் செலுத்தப்படும் போலியோ தடுப்பூசிகளை அரசாங்கம் உற்பத்தி செய்து 26 ஏப்ரல் 2016 -க்கு பிறகு குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது .இந்த தடுப்பூசியில் டைப் 1, டைப் 2 , டைப் 3 ஆகிய மூன்று வைரஸ்களுக்கும் தடுப்பு மருந்து இருக்கும். இதில் உள்ள தடுப்பு மருந்துகள் அதை எடுப்பவருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை தரும். மலத்தின் மூலம் கிருமிகள் வெளியே வராது. ஆகவே.. இந்த முறையை இந்திய அரசு கையாண்டது.

இப்போது என்ன தவறு நேர்ந்தது?

உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத் எனும் இடத்தில் இயங்கும் பையோ மெட் எனும் தனியார் தடுப்பு மருந்து உற்பத்தி சாலையில் இருதடுப்பு( டைப் ஒன்று மற்றும் மூன்றை தடுக்கும்) போலியோ சொட்டு மருந்துகள் உற்பத்தி செய்கையில் தலா ஐம்பதாயிரம் எண்ணிக்கை கொண்ட மூன்று பேட்ச் தடுப்பு மருந்து வயல்களில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட டைப் இரண்டு வைரஸ்களும் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மூன்று பேட்ச் மருந்துகளும் மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளன. இதனால் தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆகவே தமிழர்கள் கவலை கொள்ள தேவையில்லை.

இப்போது இந்த டைப் இரண்டு வைரஸ் கலப்படமான தடுப்பு சொட்டு மருந்தில் என்ன பிரச்சனை?

இந்த மருந்தை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு மூன்று வைரஸ்களுக்கு எதிராகவும் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும். ஆனால் வாய் வழி உட்கொள்வதால் அந்த வைரஸ்கள் குடல் வழி சென்று மலம் வழி வெளியேறி சமூகத்தில் கலந்திருக்கும்.

இப்போது 26 ஏப்ரல் 2016-க்கு பிறகு பிறந்த குழந்தைகளில் யாருக்கேனும் சரியாக போலியோ தடுப்பூசி மற்றும் தடுப்பு சொட்டு மருந்து கொடுக்காமல் விட்டிருந்தால் அவர்களுக்கு அந்த டைப் இரண்டு கிருமியால் போலியோ வரும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ஆகவே யாரும் பெரிய அளவில் கவலை கொள்ளவோ அச்சப்படவோ தேவையில்லை. இந்த கலப்படம் நடந்ததற்கு காரணமான அந்த பையோமெட் உற்பத்தி சாலைக்கு சீல் வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

முடிவுரை :

போலியோவை இந்தியாவை விட்டு நாம் துரத்தி ஏழு ஆண்டுகள் கடந்தோடி விட்டன. இனியும் போலியோ வராமல் தடுக்க நமது அரசாங்கம் பரிந்துரைக்கும் வரை தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்தை கொடுப்பது நமது கடமை.

இந்த சிறிய பிரச்சனை என்பது ஒன்றரை லட்சம் வயல்கள் சென்ற தெலுங்கானா, மஹாராஷ்ட்ரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மட்டுமே. தமிழகத்திற்கு யாதொரு சிக்கலும் இல்லை.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த மாநிலங்களிலும் 25 ஏப்ரல் 2016 -க்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக போலியோ தடுப்பூசி போடப்படும். இதன் மூலம் போலியோ மீண்டும் வராமல் தடுக்கப்படும்.

போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்.

நன்றி : Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...