கஜா புயல் வல்லரசு நாடுகளின் சதியா? - உறைய வைக்கும் பின்னணி!

நவம்பர் 25, 2018 924

அதி தீவிர புயல்கள் உருவாக புவி வெப்பமயமாதல், வளிமண்டலத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான கார்பன்தான் காரணம். கடந்த ஒரு நூற்றாண்டில் மனித இனம் கண்ட அசுர வளர்ச்சியும், வல்லரசு நாடுகளின் சதியுமே இதற்கு முக்கியக் காரணமாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கஜா, டிட்லி போன்ற ராட்சதப் புயல்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு இந்தியாவில் கோர தாண்டவமாடியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் கஜா புயல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீள சில மாதங்கள் ஆகும், அப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக மீண்டுவர் சில ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு பேரிடர்களால் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக் கணக்கான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்துள்ளனர். விவசாய நிலங்களில் தென்னை மரங்களும், வாழை மரங்களும் சாய்க்கப்பட்டுள்ளன. பெயருக்கு ஏற்றார்போல தமிழகத்தின் கடலோர தென் மாவட்டங்களில் மரங்கள் இருந்த சுவடே இல்லாமல் செய்துவிட்டான் கஜா. இதுபோன்ற மோசமான புயல்கள் உருவாக என்ன காரணம் என்பதைக் கண்டறிந்தால், எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையாக செயல்படலாம்.

செல்லுமிடமெல்லாம் மரண ஓலம் கேட்க வைக்கும் அதி தீவிர புயல்கள் உருவாக புவி வெப்பமயமாதல், வளிமண்டலத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான கார்பன்தான் காரணம். இவை கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்டவை. கடந்த ஒரு நூற்றாண்டில் மனித இனம் கண்ட அசுர வளர்ச்சியும், வல்லரசு நாடுகளின் நடவடிக்கைகளுமே இதற்கு முக்கியக் காரணமாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஒரு மாநாடு நடந்தது. அதில் 200 நாடுகள் பங்கேற்றன. இந்த மாநாட்டில், புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமான ‘கிரீன்ஹவுஸ் வாயுக்கள்’ வெளியேற்றத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நாடுகள் தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் 200 நாடுகளும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தை ‘பாரிஸ் ஒப்பந்தம்’ என்று அழைக்கிறார்கள். கிரீன் ஹவுஸ் வாயுக்களைக் குறைக்க, கையெழுத்திட்ட நாடுகள் கடைபிடிக்க வேண்டுமென்ற விதிமுறைகள் அடங்கிய ‘ரூல் புக்’, 2018 டிசம்பர் மாதம் போலந்து நாட்டின் கட்டோவைஸ் நகரில் நடக்கவிருக்கும் அடுத்த ‘காலநிலை மாநாட்டில்’ (Climate Summit) வெளியிட இருப்பதாக பாரிஸ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

‘ரூல் புக்’-ல் சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளை 2020-ம் ஆண்டு அனைத்து நாடுகளும் அமல்படுத்த வேண்டும் என்று பாரிஸ் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அதில் கூறப்படும் விதிமுறைகளை அந்தந்த நாடுகள் சட்டத்தின் உதவியுடன் அமல்படுத்த வேண்டும். விதிமுறைகளைத் தயாரிக்க ஆய்வாளர்கள் அடங்கிய உலக நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழுவின் விதிமுறைகளை, அனைத்து நாடுகளும் அமல்படுத்தும் பட்சத்தில், புவி வெப்பமயமாதலைத் தடுத்து உலகைக் காப்பாற்றலாம்.

ஆனால், ஒப்பந்தத்துக்கு முரணாக வல்லரசு மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள், பாரிஸ் ஒப்பந்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. மேலும், பாரிஸ் மாநாட்டின் முடிவுகளையும், விதிமுறைகள் தயாரிக்கும் குழுவின் வேலையையும் மந்தப்படுத்தும் நோக்கில் வல்லரசு நாடுகள் இணைந்து செயல்பட்டு வருவதாக நமது சிஎன்என் நியூஸ்18 ஊடகத்துக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட வளர்ந்த வல்லரசு நாடுகள், பாரிஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த ஏழை, நடுத்தர மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்தன. தற்போது அந்த வாக்குறுதியை காற்றில் பறவிடும் விதமாக பல்வேறு நிபந்தனைகளையும் கூறிவருகின்றன. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, 2017-ம் ஆண்டு, பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனாலும், ஒப்பந்தந்தத்தில் அமெரிக்க அடிக்கடி மூக்கை நுழைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நிதியுதவி போலவே, காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் வல்லரசு நாடுகள் மெத்தனம் காட்டிவருகின்றன. இந்த நடவடிக்கைகளில் ஏழை, நடுத்தர, வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையே தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் வற்புறுத்துகின்றன. காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து தரவுகள் தயார் செய்வதற்கு பணம் அதிகமாக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை நாடுகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளை கேட்கும் வல்லரசு நாடுகள், ஏழை நாடுகளுக்கு நிதியுதவி செய்வதிலும் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க முடியாது என்று கூறுவது, புவி வெப்பமயமாவதை தடுக்கும் முயற்சியில் விழுந்துள்ள பேரிடி. வல்லரசு நாடுகள் இப்படி அடம்பிடிப்பதால், ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள தீவு நாடுகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாக நேரலாம். வல்லரசு நாடுகளின் இந்தச் செயல் தொடர்ந்தால், பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியாமலே போய்விடும்.

``போலந்து நாட்டில் நடக்கவுள்ள காலநிலை மாநாட்டில் `ரூல் புக்’ சமர்ப்பிக்கப்பட்டால் தான், அதை 2019-ம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்த முடியும். அப்படி நடைமுறைப்படுத்தப்பட்டால் 2020-ம் ஆண்டுக்குள் தங்குதடையின்றி முழுமையாக செயல்படுத்தப்பட்டு, அதைத் தொடர முடியும். புவி வெப்பமயமாதலைத் தடுத்து, நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும்’’ என்று இந்த விவகாரத்தை உற்றுநோக்கி வரும் ஒருவர் கூறினார்.

``பூமியில் பேரழிவுகள் ஏற்படாமல் தடுக்க, குறுகிய காலத்தில் அடிக்கடி பெரும் புயல்கள் உருவாவதைத் தடுக்க, இந்த ஒப்பந்தம் முக்கியமான ஒன்று. கஜா, டிட்லி போன்ற கடுமையான சேதங்களை ஏற்படுத்தும் புயல்கள் அடிக்கடி உருவாக புவி வெப்பமயமாதல் ஒரு முக்கியமான காரணம். வளிமண்டலத்தில் கார்பன் அளவை குறைக்காவிட்டால், இதுபோன்ற இயற்கை பேரிடர்களை அடிக்கடி சந்திக்க நேரலாம். பூமியின் வெப்பநிலை, தற்போது இருப்பதைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமானாலே, கடுமையான இயற்கை பேரிடர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும்’’ என்று காலநிலை மாற்றத்துக்கான நாடுகளின் கூட்டமைப்பு (IPCC - Intergovernmental Panel on Climate Change) கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

கடல் மட்டம் அதிகரிப்பது, கஜா, டிட்லி போன்ற கொடூரமான பேரிடர்கள் அடிக்கடி உருவாகுவதற்கு புவி வெப்பமயமாவதே முக்கியக் காரணம். இதுபோன்ற பேரிடர்கள் எதிர்காலத்தில் அதிகமாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படலாம். இந்திய கடற்கரையின் நீளம் 7500 கிலோ மீட்டர், கடற்கரை பகுதிகளில் சுமார் 30 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்துக்காகவே கடற்கரை பகுதிகளில் வாழ்கிறார்கள், இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள், மீனவக் கூலிகள். உயரும் வெப்பநிலையால் இமயமலையில் இருக்கும் பனிப்பாறைகளும், பனி ஏரிகளும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. அப்படி நடந்தால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.

2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் கடல் மட்டத்திலிருந்து 11,500 அடி உயரத்தில் இருக்கும் கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 5000 பேர் இறந்தனர், 1000-க்கும் மேற்பட்டவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு சிலநாட்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவே காரணம். கேதார்நாத் கோர சம்பவத்துக்கும் காலநிலை மாற்றத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தியா, புவி வெப்பமயமாதல் பிரச்னையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால், இந்திய விவசாயிகள் பெரும்பாலும் பருவமழையை நம்பியே விவசாயம் செய்கின்றனர். ஏற்கனவே விவசாயம் சரிவர செய்யமுடியாத நிலையில் இருக்கின்றனர்.

தொழில் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட, அதாவது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்பைவிட சராசரியாக பூமியின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. எதிர்பார்த்ததை விட தற்போது அதிவேகமாக மேலும் வெப்பமடைந்து வருகிறது நம் பூமி. மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க நம்மிடம் இருப்பது வெறும் 12 ஆண்டுகளே என்று நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது ஐபிசிசி (IPCC) கூட்டமைப்பு.

2030-ம் ஆண்டுக்குள் 45 சதவிகித கார்பன் உமிழ்வை தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மனித இனம். இதற்கு பாரிஸ் ஒப்பந்தத்தில் பேசப்பட்டவைகளைவிட வல்லரசு நாடுகள் கூடுதலாக செயல்படுத்த தயாராக வேண்டும்.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் போலந்து ‘கடோவைஸ் மாநாட்டில்’ வல்லரசு நாடுகள் உலகின் மிக முக்கியமான பிரச்னையை எதிர்கொள்ள இருக்கின்றன. கஜா, டிட்லி, கேதார்நாத் போன்ற இயற்கையின் கோர தாண்டவத்திலிருந்து காத்துக்கொள்ள, இந்தியா பேச்சுவார்த்தை மூலம் மற்ற நாடுகளை ஒன்றிணைத்து, பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த முயற்சி எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதைச் செய்யத்தவறும் பட்சத்தில், பேரிடர்களால் மனித இனம் அழிந்துபடுவதை தடுக்கவே முடியாது.

ஆங்கிலக் கட்டுரை: ஹ்ரிதயேஷ் ஜோஷி, மூத்த பத்திரிக்கையாளர்.

மொழிபெயர்ப்பு: மு.இளவரசன்.

நன்றி : நியூஸ் 18

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...