பிரிந்த தம்பதிகள் 72 வருடங்களுக்குப் பிறகு இணைந்த நெகிழ்ச்சிக் கதை!

டிசம்பர் 29, 2018 505

சுதந்திரப் போராட்டத்தில் பிரிந்த தம்பதிகள் 72 வருடங்களுக்குப் பிறகு இணைந்து பலரையும் நெகிழ வைத்துள்ளனர்.

கேரளாவின் கவும்பாயி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் நம்பியார். இவர் தனது 17 வயதில் சாரதா என்ற 13 வயதுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 1946-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது கேரளாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் நாராயணன் நம்பியாரும், அவரின் தந்தை தலியன் ராமர் நம்பியாரும் கலந்துகொண்டனர்.

நாராயணன் - சாரதா தம்பதிக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆன நேரம் அது. போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நாராயணனும் அவரின் தந்தையும் போலீஸார் தேடி வந்தனர். இருவரும் இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தனர். பின்னர், கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாராயணன் தலைமறைவாக இருந்ததால் சாரதா அவரின் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். சுமார் 11 வருடங்களாக நாராயணன் சிறையில் அடைக்கபட்டிருந்தார். கன்னூர், விய்யூர், சேலம் ஆகிய மூன்று சிறைகளிலும் இருந்துள்ளார். இதற்கிடையில் நாராயணின் தந்தை 1950-ம் ஆண்டு சிறையிலேயே உயிரிழந்துவிட்டார்.

நீண்ட வருடங்களாக சாரதா தனிமையில் இருந்ததால் அவரின் வீட்டார் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். பிறகு 1957-ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியில் வந்த நாராயணனுக்கு சாரதாவை பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை, அடுத்த சிறிது காலத்தில் அவரும் வேறொரு திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் சாரதா தன் பழைய நினைவுகளைத் தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பகிர்ந்துள்ளார். அப்போது சாரதாவின் மகன் பர்கவான் நாராயணனைத் தேடத் தொடங்கியுள்ளார். இதையடுத்து சமீபத்தில் சாரதாவின் மகனும் நாராயணனின் உறவினரும் அறிமுகமாகி நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். நாராயணின் உறவினர் யார் என அறிந்துகொண்ட பர்கவான், தன் தாய் சாரதாவையும் நாராயணனையும் சந்திக்கவைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்.

இதையடுத்து நாராயணன் தன் உறவினருடன் சாரதாவின் வீட்டுக்கு வந்து அவரைச் சந்தித்தார். இருவரும் சந்தித்தபோது பேச முடியாமல் கண்ணீர் வடித்துள்ளனர். பின்னர் இருவரின் குடும்பத்தினரும் ஒன்றாக இணைந்து மகிழ்ந்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது. தற்போது நாராயணன் நம்பியாருக்கு 93 வயது சாரதாவுக்கு 89 வயது. சுமார் 72 வருடங்கள் கழித்து இவர்கள் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

நன்றி - விகடன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...