மோடியை எதிர்த்து இரண்டு புள்ளி விவர நிபுணர்கள் ராஜினாமா!

ஜனவரி 30, 2019 452

மோடி அரசு தேசிய புள்ளிவிவர ஆணையத்தை மதிக்காமல் புறக்கணிப்பதாகக் கூறி அந்த ஆணையத்திலிருந்து இரண்டு நிபுணர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

தேசிய புள்ளிவிவர ஆணையத்தில் அரசு சாரா உறுப்பினர்களாக பணிபுரிந்த பி.சி. மோகனன், ஜே.வி. மீனாட்சி ஆகியோர் திங்கள்கிழமை தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

“இந்த ஆணையம் செயலற்றதாக உள்ளதை உணர்ந்தோம்” என்கிறார் புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த மோகனன். புள்ளிவிவர நிபுணராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் இவர். ஜே.வி. மீனாட்சி, டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பேராசிரியராக பணியாற்றியவர்.

அதிகாரிகளின் ராஜினாமா பின்னணி என்ன?

2017-18 ஆண்டிற்கான தேசிய மாதிரி புள்ளிவிவர அலுவலகம் (National Sample Survey Office) எடுத்த வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த புள்ளிவிவரத்தை வெளியிடாமல் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் நிறுத்தி வைத்தது. மோடி அரசின் மோசடி வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பதாலேயே இந்த புள்ளிவிவரத்தை வெளியிடாமல் தடுத்து வைத்தது அமைச்சகம். இந்த விவகாரம் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தேசிய மாதிரி புள்ளிவிவர அலுவலகத்தை கண்காணிக்கும் தேசிய புள்ளிவிவர ஆணைய உறுப்பினர்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியது.

நவம்பர் 2016-ம் ஆண்டு நள்ளிரவில் மோடி என்கிற ‘ஜனநாயக’ சர்வாதிகாரியால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இலட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். இந்த விவரம் 2017-18-ம் ஆண்டு புள்ளிவிவரத்தில் வெளிப்பட்டுவிடும் என பயந்த மோடி அரசு, புள்ளிவிவரத்தை வெளியிடவில்லை. அமைச்சக அதிகாரிகள் தரப்பிலிருந்தே இந்த விசயம் வெளியே கசிந்துள்ளது.

புனையப்பட்ட புள்ளிவிவரங்கள்

அதுபோல, நவம்பர் 2018-ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கணக்கிடப்படும் முறை குறித்து புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் நிதி ஆயோக் மூலமாக வெளியிட்டது. இதில் முந்தைய ஆண்டுகளில் ஜி.டி.பி. எப்படி கணக்கிடப்பட்டது என்பது குறித்தும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், தேசிய புள்ளிவிவர ஆணையம் இந்த கணக்கீடுகளை அங்கீகரிக்கவில்லை. தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் ஆலோசனைக்குழு இதை அங்கீகரித்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஜிடிபி விவரங்கள் தலைகீழாக கணக்கிடப்பட்டதாகச் சொன்னது நிதி ஆயோக் வெளியிட்ட விவரம். இந்திய பொருளாதாரம் 2014 மார்ச் 31-ம் தேதி வரை சராசரியாக 6.67 சதவீதமாக மட்டுமே வளர்ந்தது என்றும் மோடி ஆட்சியில் அதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் 7.35 சதவீதமாக அதிகரித்தது என்றும் அந்த வெளியீடு கூறியது.

புதிய புள்ளிவிவரத்தை அல்லது ஆய்வை தொடங்கும் முன் மத்திய அமைச்சர் தேசிய புள்ளிவிவர ஆணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பது விதிமுறை. அந்த விதிமுறையை மீறுவதோடு, ஆணையத்தையே புறக்கணித்து எதேச்சதிகாரமாக மத்திய அரசு செயல்படுகிறது என்பதே ராஜினாமா செய்த அதிகாரிகளின் குற்றச்சாட்டு.

“ஒன்று, இரண்டு விசயமல்ல, ஏராளமான விசயங்களில் மத்திய அமைச்சகம் இந்த ஆணையத்தை புறக்கணித்தது” என்கிறார் மோகனன். இவர்கள் இருவருடைய பதவிக்காலமும் 2020 ஜூன் வரை இருக்கிற நிலையில் தற்போது ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

அறிவியல்ரீதியிலான அணுகுமுறையை இல்லாமல் தனக்குத் தேவையானதை உருவாக்கி மக்கள் முன் வைக்க விரும்புகிறது மோடி அரசு. அதற்கு துணைபோகாத அதிகாரிகளையும் அவர்கள் வகிக்கும் பதவிகளையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக, தனக்கு ஜால்ரா அடிக்கும் அதிகாரிகளை வைத்து கட்டுக்கதைகளை புனைந்து கொண்டிருக்கிறது இந்த அரசு.

- வினவு

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...