கலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்!

பிப்ரவரி 17, 2019 641

ஊடங்களில் பெரிதாகப் பேசப்படும் சேலம் ஆட்சியர் ரோகிணி சமூக வலைத்தளத்தைப் பொறுத்தவரை ஒரு கோமாளி போலச் சித்தரிக்கப்படுகிறார். அவர் எங்குச் சென்றாலும் தன்னுடன் ஒரு புகைப்படக் கலைஞர், கூடவே நான்கு ஐந்து அதிகாரிகள், வேடிக்கை பார்க்க சில மக்கள் என ஒரு விளம்பர பிரியையாக வலம் வருகிறார்.

இப்படி இருக்கும் ரோகிணி உண்மையில் இந்த விளம்பரத்தோடு நிற்கிறாரா என்று கேட்டால், இல்லை என்பதுதான் உண்மை. உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்ற ஒரு சொலவடை தமிழில் உள்ளது.

மக்களின் பாதுகாவலர் போலத் தன்னை வெளிக்காட்டி கொள்ளும் ரோகிணி, உண்மையில் விஷம் கக்கும் பாம்பு என்பதுதான் நிதர்சனம். சமீபத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டம் நடைபெற்றது அனைவரும் அறிந்த செய்தி. அதில் ஆசிரியர்களுடன் சேர்ந்து சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடிகள் என்று பல அமைப்புகளும் கலந்து கொண்டன.

மற்ற மாவட்டங்களில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கன்வாடி மற்றும் சத்துணவு பிரிவில் இருந்து ஒருவர் கூடக் கலந்து கொள்ளவில்லை. காரணம், ஆட்சியரிடம் இருந்து இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிரட்டல். போராட்டத்தில் கலந்து கொண்டால் வேலையை விட்டு நீக்கப்படுவீர் என்ற வகையில் மிரட்டல் சென்று உள்ளது.

ஆனால் ஆசிரியர்களுக்கு இந்த மிரட்டல் செல்லவில்லை, காரணம் ஆசிரியர்களிடம் இந்த மிரட்டல் செல்லுபடி ஆகாது என்பதும், அதே நேரத்தில் தனக்கு எதிராகத் திரும்பும் என்பதும் ரோகிணிக்கு நன்றாகத் தெரியும். மற்றபடி, அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் உறுதியாக இந்த மிரட்டலுக்குப் பணிவார்கள், காரணம் இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், அது மட்டுமல்லாது இவர்களுக்குக் கொடுக்கப்படும் மிகக் குறைந்த ஊதியம் கூட அவர்களின் குடும்பத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இங்குக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அரசமைப்புச் சட்டம் கொடுக்கும் போராடும் உரிமையை ஒரு மாவட்ட ஆட்சியரால் எளிதாகத் தட்டி பறித்து விட முடியும் என்ற நிலையில்தான் நமது ஜனநாயகம் உள்ளது.


இத்தோடு இந்த விசியம் நின்று விடவில்லை. இன்றைய தினம்வரை அங்கன்வாடி பணியாளர்களுக்கு இந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்கள் கூறிய தகவல்படி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர் அமைப்புகளுக்கும் ஊதியம் கொடுக்கப்படவில்லை.

போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று மிரட்ட தெரிந்த ரோகிணிக்கு, பணியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதியத்தை வாங்கித் தரும் துப்பு இல்லை. அதிகாரத்தில் தாழ்ந்தவனை எட்டி உதைப்பதும், அதிகாரம் மிக்கவனின் காலை நக்கி பிழைப்பதும்தான் ஜனநாயகம்!!

-வினவு

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...