கோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக்குமூலம்

பிப்ரவரி 18, 2019 670

புதுடெல்லி (18 பிப் 2019): புல்மாவாவில் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவே கொந்தளிப்பில் இருக்கும்போது விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த சாமியார் பிராச்சி, கோத்ரா சம்பவத்தை போல பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டலாம் என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோவில் பிரதமருக்கு கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் பிராச்சி, “பிரதமர் அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்” என்கிறார். விசுவ இந்து பரிசத்தின் ‘யுவ வாஹினி’ பெண்கள் படையை தலைமையேற்று நடத்திவரும் பிராச்சி, உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளராக களம் கண்டவர்.

“ராவல்பிண்டி மற்றும் கராச்சியை எரித்தால்தான் தீவிரவாதம் முடிவுக்கு வரும்” என்றும் அந்த வீடியோவில் பிரதமருக்கு ‘யோசனை’ சொல்கிறார் பிராச்சி.

2002 -ல் குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்று குவித்தது இந்துத்துவ கும்பல். அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த விசுவ இந்து பரிசத் அமைப்பினர் 60 பேர் கோத்ரா ரயில் பெட்டிக்குள் வைத்து எரிக்கப்பட்டனர். இதை செய்தது முசுலீம்கள் எனக் கூறி, பெரும் கலவரத்தில் ஈடுபட்டது இந்துத்துவ கும்பல்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து ஃபிரண்ட்லைன் இதழில் காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா, “தடயவியல் ஆய்வு கோத்ரா ரயிலுக்கு உள்ளே இருந்துதான் தீ பற்ற வைக்கப்பட்டது என்பதைச் சொன்னது. 60 லிட்டர் பெட்ரோலும், விசுவ இந்து பரிசத் அமைப்பினர் இருந்த பெட்டிக்குள் ஒரு முசுலீமால் நுழையவே முடியாது. தங்களுடைய சுய லாபத்திற்காக தங்களுடைய சொந்த அமைப்பினரை கொல்லத் துணிந்தவர்கள் அந்த அமைப்பின் தலைவர்கள். என்னை நம்புங்கள்; எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும்” என்று பேட்டியளித்திருந்தார்.

தடயவியல் ஆய்வு, எந்தவித எரியும் திரவமும் வெளியே இருந்து உள்ளே ஊற்றப்பட்டதற்கான தடயம் இல்லை எனக் கூறியது.

அந்த வழக்கில் சில முசுலீம்கள் மீது வழக்கு பதியப்பட்டு, தீர்ப்பு வந்துவிட்டது. தொடக்கம் முதலே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், இந்துத்துவ காவிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என பலரும் சொல்லிவரும் நிலையில், நீதிமன்றம் பல்வேறு சாட்சியங்களை புறம்தள்ளிய நிலையில், சாமியார் பிராச்சி இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலைகளை அவர்களே ஒப்புக் கொண்டாலும் ஜனநாயகத்தில் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி படுகொலையாளர்கள் சுதந்திரமாக உலவ முடிகிறது. குஜராத்தில் நான்காயிரத்துக்கும் அதிகமான முசுலீம்களை இனப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-வினவு

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...