புல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்!

பிப்ரவரி 21, 2019 508

ஃபேஸ்புக், ட்விட்டர் என உலக இணைய நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் அதிகளவில் பகிரப்படும் வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பதெனத் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.

மக்களவைத் தேர்தலும் விரைவில் நடக்கவுள்ளதால் அரசியல் ரீதியாக மாற்றங்கள் உண்டாக்க, வெறுப்புணர்வைப் பரப்ப இந்தத் தளங்கள் பயன்படுத்தப்படும் என அஞ்சப்படுகிறது. இதைத் தடுக்கவேண்டும் என அரசு, வலைதளங்கள் என அனைவரின் சார்பிலும் வேலைகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு என்றும் இல்லாத அளவில் இந்தியா முழுவதும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் காட்டுத்தீயெனப் பரவியுள்ளதாக ஃபேஸ்புக் இந்தியாவின் போலிச் செய்திகள் தடுப்புப் பிரிவுக்கு தலைமை வகிக்கும் ட்ருஷர் பரோட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம்தான் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தங்கள் தளத்தில் பதிவிடப்படும் பதிவுகளின் உண்மைத்தன்மையை ஆராயும் நெட்வொர்க்கை விரிவுபடுத்தவுள்ளதாகவும் இதற்காக இந்தியா டுடே உட்பட 5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த அறிவிப்புக்குப் பின் இந்தப் புல்வாமா தாக்குதல் நடந்தது. கடந்த பிப்ரவரி 14 காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் பேருந்து மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அடில் அஹமத், தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருள்களுடன் வந்து மோதினார். இதில் பேருந்து வெடித்துச் சிதறியதில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இது இந்திய மக்களிடையே பெரும் துயரத்தையும், கோபத்தையும் உண்டாக்கியது.

மக்களின் இந்த நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே பல போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் சமூகவலைதளங்களில் பெருமளவில் பரப்பப்பட்டுள்ளது. தாக்குதலின் சிசிடிவி பதிவென சில வீடியோக்கள் வைரலாகப் பரவின. ஆனால், அது உண்மையில் சிரியா மற்றும் இராக்கில் எடுக்கப்பட்ட காட்சிகள்தாம் என்பது பின்பு கண்டறியப்பட்டது. இதுமட்டுமல்லாமல் தாக்குதலை நடத்திய தீவிரவாதி இவர்தான் என்றும் இவர் கைதாகிவிட்டதாகவும் என ஒரு வீடியோ பரவியது. அதுவும் போலியானதுதான்.

இதுபோன்ற செய்திகள் அதிகரித்ததை உணர்ந்த கூகுளும் இந்தியாவிற்கான தனது செய்தித் தளத்தில் `Fact-Check' என்னும் பகுதியைச் சேர்ந்தது. இதில் பிரபல ஊடகங்கள் கண்டறிந்து சொன்ன வைரலான போலிச் செய்திகள் பட்டியலிடப்பட்டன. இதில் பெரும்பாலானவை புல்வாமா தாக்குதல் தொடர்பானதுதான். ஆனால் எதன் காரணமாக இந்தப் பகுதி சேர்க்கப்பட்டது என கூகுள் தெளிவாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தப் போலிச் செய்திகள் எந்த அளவில் பரவின என்றால் சி.ஆர்.பி.எஃப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே இதுதொடர்பான எச்சரிக்கை மக்களுக்கு விடுக்கப்பட்டது. அதில் `சமூகவலைதளங்களில் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்ட இறந்தவர்களின் படங்கள் எனப் போலியான பதிவுகளைச் சிலர் பதிவிட்டுவருகின்றனர். அதை யாரும் நம்பவோ, பகிரவோ வேண்டாம். இதுபோன்ற பதிவுகளைப்பற்றி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மெயில் ஐடிக்கு புகார் அளிக்கவும்' எனக் கூறியிருந்தது.

காங்கிரஸிற்கு எதிராகத்தான் இந்தப் போலிச் செய்தி தாக்குதல் அதிகமாக இருந்ததெனத் தெரிவிக்கின்றனர் இந்தப் போலிச் செய்திகளை கண்டறிந்து சொல்லும் ஊடக நிறுவனங்கள். புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதியுடன் ராகுல் காந்தி இருப்பதாக ஒரு போட்டோ வெளியானது. இதைப் பலரும் பகிரதொடங்க இது போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. பிரியங்கா காந்தி பாகிஸ்தான் ராணுவத்தின் பிரமுகர் ஒருவரைத் தாக்குதலுக்கு முன் சந்தித்ததாக ஒரு செய்தி வைரலானது. அதுவும் போலிதான். பிரியங்காவின் பழைய வீடியோ ஒன்று எடிட் செய்யப்பட்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சிரிப்பதாகப் பகிரப்பட்டது. மேலும் இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி சக இஸ்லாமியர்கள் மீது இந்துக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சில செய்திகளும், போட்டோக்களும் பரவின. அதே நேரம் பா.ஜ.க.வை குறித்த போலிச் செய்திகளும் பரவாமல் இல்லை.

இவை எதுவுமே காரணமில்லாமல் செய்யப்படுபவை அல்ல. மக்களிடையே தவறான தகவல்களைக் கொண்டுசேர்த்து அதன்மூலம் ஆதாயம் பெற அரசியல் பின்புலத்துடனே இவை நடைபெறுகின்றன. எப்படியும் மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற மனநிலையும் சிலருக்கு இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் சூழலில் வெறுப்பரசியலின் வேராக இருப்பது இப்படிப் பரப்பப்படும் போலிச் செய்திகள்தான். நம்மில் பலரும் பரப்பப்படும் செய்திகளின் உண்மைத்தன்மை என்ன என அறிய எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பதே இதற்கு முக்கியக் காரணம். நம் கருத்துக்கோ, நம்பிக்கைக்கோ ஆதரவாக எது வந்தாலும் கண்ணைமூடி வாட்ஸ்அப்பில் ஃபார்வர்டு செய்துவிடுகிறோம். இப்படிப் பகிர்வது உங்கள் கருத்தியலை மேம்படுத்தாது; மாறாக அதைப் பற்றிய தவறான பிம்பத்தையே ஏற்படுத்தும். எனவே ஆதரவோ, எதிர்ப்போ எந்தத் தகவல் வந்தாலும் உண்மை என்ன என்பதைக் கண்டறிவது அவசியம். வள்ளுவர் அன்றே சொன்னதுதான்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இது இன்றைய டிஜிட்டல் உலகுக்கும் பொருந்தும்!

-நன்றி: விகடன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...