புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி!

பிப்ரவரி 22, 2019 544

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி மாலை 3 மணியளவில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் வாகனங்களில் சென்றுகொண்டிருந்த சி.பி.ஆர்.எஃப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 44 வீரர்கள் பலியானார்கள்

கடந்த 30 ஆண்டுகளில் இத்தகைய தாக்குதல் காஷ்மீரில் நடந்ததில்லை என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், நாட்டின் பிரதமர் பதறிப் போய் இருப்பார். குறிப்பாக, தனது தேசபக்தியின் அளவு மற்றவர்களைவிட 200 சதவீதம் அதிகம் என பீற்றிக் கொள்ளும் மோடி துடிதுடித்திருப்பார் என அவருக்கு வாக்களித்த மக்கள் நினைத்திருக்கக்கூடும்.

ஆனால் தனது ‘தேசபக்தி’யின் இலட்சணத்தை இப்போது படம் பிடித்து காட்டியிருக்கிறார். புல்வாமா தாக்குதல் நடந்து நாடே அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்த நிலையில், இந்நாட்டின் பிரதமர் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். அரை மணி நேரம், ஒரு மணி நேரமல்ல… கிட்டத்தட்ட அந்த நாள் முழுக்கவும் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்துக்கொண்டே மோடி கிளம்பியிருக்கிறார்.

மோடியின் தேசபக்தியின் இலட்சணத்தை ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சூரஜ்வாலா பத்திரிகையாளர்களிடம் புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகும் மோடி, உத்தரகாண்டில் உள்ள கார்பெட் தேசிய பூங்காவில் படப்பிடிப்பில் இருந்தார் என தெரிவித்தார்.

“கொல்லப்பட்ட வீரர்களுக்கு நாடே அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும்போது, கார்பெட் பூங்காவில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டும், முதலைகளைப் பார்க்க படகுப் பயணம் செய்து கொண்டும் இருந்தார் பிரதமர் மோடி”

“இந்தப் படப்பிடிப்பு மாலை 6.30 மணி வரை நீடித்தது. படப்பிடிப்பு முடிந்து 6.45 மணிக்கு டீயும் நொறுக்கு தீனியும் உண்டார் மோடி. கொடூரமான தாக்குதல் நடந்த நான்கு மணி நேரத்துக்கு பிறகு எந்தவித பதட்டமும் இல்லாமல் தன் பிம்பத்தை கட்டமைக்க படப்பிடிப்பு நடத்திக் கொண்டும், நொறுக்கு தீனி உண்டு கொண்டும் இருந்துள்ளார் பிரதமர்” என்கிறார் சூரஜ்வாலா.

பிப்ரவரி 15-ம் தேதிகூட, ஜான்சியில் தனது அரசியல் வேலையை முடித்துக் கொண்ட பிறகே, உயிரிழந்த ஜவான்களுக்கு அஞ்சலி செலுத்த ஒரு மணி நேரம் தாமதமாக மோடி வந்தார் எனவும் காங்கிரஸ் சுட்டிக் காட்டியது.

ஜான்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, மத்தியில் நிலையான ஆட்சி அமைய பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். புல்மாவா தாக்குதலுக்கு அடுத்த நாளிலேயே பிரச்சார கூட்டங்களில் மும்முரம் காட்டிய பாஜகவை பலரும் விமர்சித்த நிலையில், அக்கட்சியின் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நாட்டின் சூழல் பதற்றமான நிலையில் இருக்கும் இந்த நிலையிலும்கூட தென் கொரியா சென்றிருக்கிறார் மோடி எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

-வினவு

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...