கேமராவுக்குப் பின்னால் மிரட்டல் - கேமராவுக்கு முன்னால் மோடியின் நாடகம்!

பிப்ரவரி 26, 2019 776

கடந்த ஞாயிற்றுக்கிழமை (24-02-2019) கும்பமேளாவில் கும்பமேளா குப்பைகளை அள்ளிக் கொட்டிய தூய்மை பணியாளர்கள் கால்களைக் கழுவினார். நாலாபுறமும் கேமராக்கள் அதை விதவிதமான கோணங்களில் படம்பிடித்து மோடியின் கைகூலி ஊடகங்கள் மெச்சின.

ஆஸ்கர் விருதுகள் வெளியான நாளில் பிரதமர் மோடிக்கு ஒரு விருது பார்சல் என பகடி செய்தும் ஐந்தாண்டுகளாக கண்டுகொள்ளாத தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவினால் என்ன பயன் என விமர்சித்தும் சமூக ஊடகங்களில் எழுதினர்.

உண்மையில், கும்பமேளாவின் குப்பைகளை, கழிவுகளை சுத்தம் செய்வதற்கென்று அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தைக்கூட கொடுக்காமல் மோசடி செய்துள்ளது அம்மாநிலத்தை ஆளும்யோகி ஆதித்யநாத்தின் அரசு. உச்சகட்டமாக, போராட்டத்தை ஒருங்கிணைத்த தலித் அமைப்பினரை ‘தேசிய பாதுகாப்பு சட்டத்தில்’ கைது செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளது.

ஜனவரியில் கும்பமேளா தொடங்கிய நேரத்திலிருந்து போதிய உபகரணங்கள் வழங்கக் கோரியும் சம்பள உயர்வு கேட்டும் தலித் சஃபாய் மஸ்தூர் சங்காதன் என்ற அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த அன்சு மால்வியா, தினேஷ் ஆகியோர் தூய்மை பணியாளர்களை திரட்டி பல முறை போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து நிர்வாகத்துக்கு பல முறை கடிதங்களும் எழுதியிருக்கின்றனர்.

“எங்களுடைய முக்கியமான கோரிக்கை நாள் சம்பளமான ரூ. 295 -ஐ உயர்த்தி தர வேண்டும் என்பது. போராட்டத்துக்குப் பிறகு, ரூ. 15 உயர்த்தி ரூ. 310 -ஆக தருவதாக சொன்னார்கள். ஆனால், அந்தத் தொகையை தராமல், பழைய சம்பளத்தையே தருகிறார்கள்” என்கிறார் தினேஷ். தங்களுடைய மற்ற கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

“ஜனவரி மாதம், போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தபோது மாவட்ட நிர்வாகம் எங்களை அழைத்து பேசியது. அப்போது, நாங்கள் தேசத்துக்கு கெடுதல் செய்துகொண்டிருக்கிறோம் என்றும் கும்பமேளா நாட்டின் பெருமைக்குரிய விசயம். இந்த நேரத்தில் போராடுவது தேசத்துக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும். என்று கூறினர். இதனால் உங்கள் மீது தேச துரோகம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் போடுவோம் எனவும் மிரட்டினார்கள்” என்கிறார் மால்வியா.

பிப்ரவரி 7-ம் தேதி அலகாபாத் போலீசு தங்கள் இருவரையும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்போதும் தேசத்துக்கு எதிரான நடவடிக்கை காரணமாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட இருப்பதாகவும் ஆதித்யநாத் போலீசு மிரட்டியதாகவும் தெரிவிக்கிறார்.

இவர்களின் கைதை கேள்விப்பட்டு நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் காவல் நிலையங்களுக்கு முன் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த போலீசு அவர்கள் இருவரையும் வழக்கு ஏதும் போடாமல் ஆறு மணி நேரத்துக்குப் பிறகு விடுவித்திருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் மட்டுமல்லாது பீகார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கும்பமேளா கழிவுகளை சுத்தம் செய்ய ஏஜெண்டுகள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலருக்கு தாங்கள் கழிவறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்கிற விவரம் தெரியப்படுத்தப்படவில்லை. “கழிப்பறைகளை கழுவ வேண்டும் என்று என்னிடம் ஏஜெண்ட் சொல்லவில்லை. என் கணவரிடம் ஆற்றில் விழும் பூக்களை எடுத்துப்போடும் வேலை எனக் கூறிக்கொண்டு என்னை அழைத்து வந்தார். ஆரம்ப நாட்களில் அழுதேன்… இந்த வேலையை நான் இதுவரை செய்யதில்லை” என இயலாமையுடன் சொல்கிறார் ஐம்பது வயதான குரியா.

“ஆயிரக்கணக்கான பணியாளர்களை, அதிக சம்பளம் தருவதாகக் கூறி ஏஜெண்டுகள் கிராமங்களிலிருந்து அழைத்து வந்துவிடுகிறார்கள். இங்கே வந்த பிறகுதான் அவர்களுக்கு நிலைமை தெரிகிறது. கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் 10-20 சதவீதத்தை ஏஜெண்டுகளுக்கு கமிசனாக தரவேண்டும். கும்பமேளா மூன்று மாதங்கள் நடக்கும் என்பதால் அவர்களால் திரும்பிப் போகவும் முடியாது” என்கிறார் தூய்மை பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த தினேஷ்.

கும்பமேளா கழிவுகளை சுத்தம் செய்ய 14 ஆயிரம் தூய்மை பணியாளர்கள், தின சம்பள அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இந்த சங்கம்.

“குறைவான சம்பளம் மட்டுமில்லாமல், எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக சில நேரங்களில் 14 மணி நேரம், பணியாளர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஓவர் டைம் பணிக்கு சம்பளமும் கிடையாது” என்கிறார் தினேஷ்.

தூய்மை பணியாளர்களில் 1% மட்டுமே பூட்ஸ், மாஸ்க், கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களை நிர்வாகம் வழங்கியிருக்கிறது என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். மூன்று மாத காலம் என்பதால் குடும்பத்தோடு வந்துள்ள இவர்களுக்கு சொதசொதப்பான சேரும் சகதியும் மிக்க இடங்களில்தான் டெண்ட் அமைத்து தந்திருக்கிறார்கள்.

கும்பமேளாவில் அமைக்கப்பட்டுள்ள 1,24,000 கழிப்பறைகளில் உள்ள கழிவுகளை எந்திரங்கள் கொண்டு டேங்கில் இணைக்கும் பணிகளைச் செய்தாலும் சில சமயங்கள் அதிகப்படியான மக்கள் பெருக்கம் காரணமாக அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு அதை சரிசெய்யும் போது மலம், சிறுநீர் தூய்மை பணியாளர்கள் மீது படுகிறது எனவும் இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

“இப்போது கிட்டத்தட்ட மேளா முடியும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், எங்களுடைய கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக தூய்மை பணியாளர்களின் கால்களை மோடி கழுவுகிறார். ஒரு பிரதமர் இப்படியான நாடகத்தை நடத்துவது வேதனை அளிக்கிறது. எங்களுடைய கால்களை கழுவதால் எங்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?” என கேட்கிறார் தினேஷ்.

கும்பமேளாவின் பொறுப்பாளராக உள்ள அதிகாரி, ஹைகிளாஸ் வசதிகளை தூய்மை பணியாளர்களுக்கு செய்து கொடுத்திருப்பதாக சொல்கிறார். தூய்மை பணியாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்துவதோடு, அதனால்தான் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போட இருந்ததாகவும் சொல்கிறார்.

சம்பள உயர்வு கேட்டு போராடியவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்திவிட்டு, இன்னொரு பக்கம் கேமராக்கள் முன்பு அவர்களுடைய கால்களை கழுவும் நாடகம் மிகத் தெளிவாக அரங்கேறியிருக்கிறது.

-வினவு

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...