23 ஆம் புலிகேசியும் பிரதமர் மோடியும்!

மார்ச் 03, 2019 610

நம்முடைய அனைத்து ராஜ தந்திரங்களும் தோற்றுவிட்டனவே’ என்றுஇம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் புலம்புவது போல ஆகிவிட்டது பிரதமர் மோடியின் நிலைமை.

கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் இந்திய மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டுயுத்தத்தையே மத்திய பாஜக கூட்டணி அரசுநடத்தியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என அடுத்தடுத்து இவர்கள் வீசிய குண்டுகளால் நாட்டில் பாதிக்கப்படாத வீடுகளே இல்லை. இதனால், மக்கள் கடும் அதிருப்தியில்உள்ளனர். கடந்த தேர்தலில் வர்ணம் அடிக்கப்பட்ட ‘வளர்ச்சி நாயகன் மோடி’ என்ற வாசகங்கள் நிறம் இழந்து பல் இளிக்கின்றன.‘ஏழைத்தாயின் மகன்’ என்ற படமும் ஓடவில்லை. ‘டீ விற்றவன் நாடாளக் கூடாதா?’ என்று அடிக்கடி பேசிய பஞ்ச் டயலாக் ஓவர்மேக் அப் காரணமாக எடுபடவில்லை. மறுபுறத்தில் இவரது துவக்க கால கூட்டாளியான பிரவீன் தொகாடியா மோடி ஒருபோதும் டீ விற்றதே இல்லை என்று கூறியதும், வசூலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கடைசியில், பாகுபலி போல அவர்கள் வெகுவாக நம்பிய படம் பயங்கரவாத எதிர்ப்பு. புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், கார்கில் போர் படக் கதையை தழுவி, மீண்டும் ஒரு பிரம்மாண்டமான படமாக எடுக்கலாம் என்று நினைத்தார்கள்.

புல்வாமாதாக்குதலில் இவ்வளவு பாதுகாப்பு குறைபாடுகள் ஏன் என்ற கேள்விக்கும் உளவுத்துறையின் தோல்விக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதில் இல்லை.பாஜக அரசு மீதான விமர்சனங்களை நாட்டுக்கு எதிரானது போலவும், ராணுவத்திற்கு எதிரானது போலவும், திசை திருப்ப மோடியும், அருண் ஜெட்லி , அமித்ஷா போன்றவர்களும் முயற்சி செய்து பரிதாபமாக தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்மீது உள்ள கோபத்தை நாட்டின் பாதுகாப்பின் மீது காட்டாதீர்கள், பாதுகாப்பு படையினரை கொச்சைப் படுத்தாதீர்கள் என குமரியில் பேசிவிட்டு போயிருக்கிறார் பிரதமர் மோடி. நம் நாட்டு ராணுவவீரர்கள் மீதும் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும்தியாகத்தின் மீதும் நாட்டு மக்கள் அனைவரும் உயர்ந்த மரியாதை வைத்துள்ளனர். அவர்கள் மீது யாருக்கும் வெறுப்பு இல்லை. அவர்களைதங்களது சொந்த வீட்டுப் பிள்ளையாகவே இந்தியர்கள் அனைவரும் கருதுகிறார்கள். இந்திய மக்கள் வெறுப்பது மோடி ஆட்சியைத்தான், ராணுவத்தினரை ஓய்வூதியப் பிரச்சனையில் வஞ்சித்தது யார்? என்பதை நாடு நன்கு அறியும். எனவே, மோடிக்கு எதிரான விமர்சனங்கள் மூலம் அவர்கள், நாட்டை எதிர்க்கிறார்கள் என்று அவரே கூறிக் கொள்வது அபத்தமானது. கரக்காட்டக்காரன் படத்தில் ‘நாதஸ் திருந்திவிட்டான்’ என்று ஒருவர்கூற, யார் இப்படிச் சொன்னார்கள் என்று கேட்டதற்கு, ‘நாதஸே சொன்னான்’ என்று கூறி கதையாகத்தான், என்னை எதிர்ப்பவர்கள் நாட்டை எதிர்க்கிறார்கள் என்று மோடி கூறுவதும் உள்ளது. மோடி என்கிற தனிமனிதன் மட்டுமே நாடு அல்ல. இன்னும் சொல்லப்போனால், மோடியை எதிர்ப்பவர்கள் நாட்டுக்கு ஆதரவானர்கள் என்பதுதான் உண்மை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானங்கள் குண்டு வீசியது குறித்து பொய்யான தகவல்களை பரப்பியது பாஜக மற்றும் அவர்களுக்கு வெண் சாமரம் வீசும் ஊடகங்களும்தான். பயங்கரவாத முகாமில் பலி எண்ணிக்கை 400 -500 என இஷ்டத்திற்கு அள்ளிவிட்டார்கள். நமது மதிப்புமிக்க தளபதிகள் பலி எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல் இல்லை என்று தர்ம சங்கடத்தோடு மறுக்க வேண்டிள நிலையை ஏற்படுத்தியது பாஜகதான். இப்போது, சந்தடி சாக்கில்,தன்னுடைய அரசின் ஊழல் நடவடிக்கையை நியாயப்படுத்தராணுவத்தின் நடவடிக்கையை இழிவான முறையில் இழுக்கிறார் பிரதமர் மோடி. ரபேல் விமானபேர ஊழல் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அம்பானிக்கு ஆதரவாக ஒப்பந்தத்தை திருத்தி ஒரு நாட்டின் பிரதமரே இடைத்தரகர் போல செயல்பட்டதும், உச்ச நீதிமன்றத்திற்கே தவறான தகவல்களை அளித்ததும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தப் பின்னணில், இந்தியாவிடம் ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால், இன்னும் நிறைய சாதித்திருக்கலாம் என அழகாக ஊழலையும் நாட்டின்பாதுகாப்பையும் முடிச்சுப் போடுகிறார் மோடி.இப்போது நடந்த தாக்குதலில் கூட, மிராஜ்ரக போர் விமானங்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளன. கார்கில் போரைத் தொடர்ந்து இந்த விமானங்களை கூடுதலான எண்ணிக்கையில் அன்றைய பாஜக அரசுதான் வாங்கியது.

இப்போது ரபேல் விமான பேரத்தை அம்பானிக்குஆதரவாக முடித்துள்ளதால், மிராஜ் ரக விமானங்களை குறை கூறுகிறார் மோடி. போர் விமான தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லாத, அம்பானிநிறுவனத்திடம் அலாக்காக தூக்கி தருவதால், தேசத்தின் எதிர்கால பாதுகாப்பு குறித்துஅச்சம் எழுகிறது. மோடி தனது ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களையும் ராணுவத்திற்கு எதிரானதாக மடை மாற்றம் செய்ய முயலும் பஞ்ச தந்திரம் அறுந்து தொங்குகிறது. ஒருபுறத்தில் போர், போர் என்று கத்திக் கொண்டே, மறுபுறத்தில் உள்நாட்டு விமான நிலைய பராமரிப்பை அதானி நிறுவனங்களுக்கு அள்ளி வழங்கிய அம்பானி- அதானி பாணி தேச பக்திதான் மோடி வகையறாவுக்கு உள்ளது. ராணுவத்தினரின் தாக்குதலால், கர்நாடகத்தில் பாஜகவுக்கு 22 தொகுதி உறுதிஎன்று உளறுவாயர் எடியூரப்பா வெளிப்படையாக கூறியதைத்தான் பாஜகவினர் மனதுக்குள் கணக்குப்போட்டு வைத்திருந்தனர். தன் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக போராடிய அபினந்தன் படத்தைக் கூட தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதன் மூலம்ராணுவத்தினரை இழிவுபடுத்துவது பாஜகவினர்தான். 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்குச் சொந்தமானதாக இருக்கும் என்று மோடி அடிக்கடி கூறுகிறார். அது நிச்சயம் நடக்கும். ஆனால், அந்தஇந்தியா எந்தவிதமான மத பயங்கரவாதத்திற்கும் இடமில்லாத, அனைத்து இந்தியர்களுக்குமான இந்தியாவாக இருக்கும்.

- மதுக்கூர் இராமலிங்கம்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...