பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ள உளவுத்துறை!

மார்ச் 28, 2019 1166

வரும் நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட் குறித்து பாஜகவுக்கு தமிழக உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உளவுத்துறை... ஐ.பி எனப்படும் அமைப்பானது அரசின் ஓர் அச்சாணியாக இருப்பது. உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையிலேயே அரசின் முடிவுகள் பெரும்பாலும் எடுக்கப்படும். உளவுத்துறையை அரசின் முதுகெலும்பு என்றுகூடச் சொல்லலாம். அதுவும் தேர்தல் நேரத்தில் உளவுத்துறையின் ஒவ்வொரு அறிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும். இந்த நிலையில் தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்குச் சென்ற உளவுத்துறையின் ஓர் அறிக்கை, மத்திய பி.ஜே.பி அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றன. தி.மு.க தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிரணியில் களத்தில் நிற்கின்றன. இந்த இரு கூட்டணியைத் தவிர, டி.டி.வி.தினகரன் தலைமையில் ஓர் அணியும் மக்கள் நீதி மய்யம் தனித்தும் தேர்தல் களத்தை எதிர்கொள்கின்றன. வேட்பாளர்களின் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து, தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க அணியைவிட தி.மு.க அணியே முந்திக்கொண்டு உள்ளது பரவலாகத் தெரியவருகிறது.
புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் எப்படியும் 20 தொகுதிகளுக்கு மேல் வென்றுவிட வேண்டும்; 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10 தொகுதிகளுக்கு மேல் வென்றுவிட வேண்டும் என்று அ.தி.மு.க தரப்பு துடித்துக் கொண்டிருக்கிறது. மேலும், மத்தியில் பி.ஜே.பி மீண்டும் ஆட்சி அமைக்குமா, அமைக்காதா என்கிற சந்தேகம் அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கே உள்ள நிலையில், அ.தி.மு.க-வுக்கும் அந்தச் சந்தேகம் இருக்கிறது. கடந்த தேர்தலில் வீசிய மோடி அலை இந்த முறை இல்லை. பி.ஜே.பி-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் கணிசமான வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் பி.ஜே.பி கூட்டணி உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலிருந்து 20 தொகுதிகளுக்கும் மேல் தங்கள் அணிக்குக் கிடைக்க வேண்டும் என்று பி.ஜே.பி எதிர்பார்க்கிறது. அதற்காகவே தமிழகத்தில் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடவும் பி.ஜே.பி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

கரன்சி விஷயத்தில் அ.தி.மு.க தரப்பு ஒருபுறமும் பி.ஜே.பி தரப்பு மறுபுறமும் தேர்தல் களத்தில் இறக்கத் தயாராக இருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மத்திய உளவுத்துறையான ஐ.பி-யிடம் தேர்தல் நிலவரம் குறித்து, கடந்த வாரம் ரிப்போர்ட் கேட்டுள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் ஐ.பி அமைப்பானது, வர்மா என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் செயல்படுகிறது. மேலும், தமிழகத்தில் ஐ.பி அமைப்பில் முக்கியப் பொறுப்பில் பலரும் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகளாக உள்ளார்கள். மத்திய அரசு ரிப்போர்ட் கேட்டதும், தமிழக ஐ.பி அதிகாரிகள் தீவிரமாக விசாரணையில் இறங்கினார்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு யாருக்கு போன்ற பல்வேறு தகவல்களைத் திரட்டி சென்னையில் உள்ள ஐ.பி அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்கள். அந்த ரிப்போர்ட்டை அலசிப் பார்த்தபோது, தி.மு.க கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. மீண்டும் ஐ.பி. அதிகாரிகள் மற்றொரு ரிப்போர்ட்டை கீழ்நிலை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்கள். அந்த ரிப்போர்ட் அ.தி.மு.க அணிக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளார்கள். இதற்குக் களத்தில் இருந்த அதிகாரிகள், 'நிலைமை அவ்வாறு இல்லை. அ.தி.மு.க அணி 10 தொகுதிகளைப் பிடிப்பதே இப்போது உள்ள நிலையில் சந்தேகம். இறுதிக்கட்டத்தில் இந்த நிலை கொஞ்சம் மாறி அ.தி.மு.க அணிக்குச் சாதமாக இருக்கலாம்’ என்று சொல்லியுள்ளார்கள். ஆனால், மேல்மட்டத்தில் இந்த ரிப்போர்ட்டைக் கொடுத்தால், நமக்குச் சிக்கலாகும். நாம் நல்லமுறையில் அனுப்பிவிடுவோம். தேர்தல் வந்த பிறகு, பார்த்துக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் பேசி முடித்துள்ளார்களாம்.

அந்த அடிப்படையில், `தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான அணி 24 முதல் 28 இடங்கள்வரை வெற்றிபெறும்’ என்று ஒரு ரிப்போர்ட்டை ரெடிசெய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்கள். அந்த ரிப்போர்ட் பி.ஜே.பி தரப்புக்குத் தெரிந்து உற்சாகமாகிவிட்டார்களாம். ஆனால், தமிழக நிலவரம் குறித்து வந்த ஐ.பி ரிப்போர்ட்டைப் பார்த்த தென்மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி நிர்வாகிகள் “கள நிலவரம் தெரியாமல் நீங்கள் இந்த ரிப்போர்ட்டைப் பார்க்க வேண்டாம். பி.ஜே.பி-யை உள்ளடக்கிய அ.தி.மு.க அணி 24 சீட்களை எல்லாம் வெல்வது உறுதியில்லை. நீங்கள் ஐ.பி-யிடம் சொல்லி மீண்டும் சரியான ரிப்போர்ட் கேளுங்கள்” என்று சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது பி.ஜே.பி தலைமை. இந்த ரிப்போர்ட் விவகாரம் குறித்து ஐ.பி அதிகாரிகளிடம் கேட்டால், “நாங்கள் உண்மையான கள நிலவரத்தைச் சொன்னால் எங்கள் மீது கோபத்தைக் காட்டுவார்கள். எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய தேர்தல் பணியில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது. அரசுக்கு ஆதரவாக இப்போது ரிப்போர்ட் கொடுத்துவிட்டு, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பணத்தால் நிலைமை மாறிவிட்டது என்று சொல்லிவிட்டுப்போகிறோம்” என்கிறார்கள் கூலாக.

நன்றி: விகடன்

 

 

bjp shocking due to ib report 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...