மீண்டும் மோடி வந்தால் ராஜினாமா செய்வதை தவிற வேறு வழியில்லை - பிரதமர் அலுவலக அதிகாரிகள்!

ஏப்ரல் 16, 2019 1026

மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றால் ராஜினாமா அல்லது பணி இடமாற்றம். இதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்ட நிலையில், இன்னும் 6 கட்டத் தேர்தல் மீதமுள்ளது. மே 23- ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும். ஒருவேளை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால், பிரதமர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் உயர் அதிகாரிகள் பலர், பணி மாற்றம் அல்லது முன்கூட்டியே ராஜினாமா செய்துவிட்டு ஓட்டம் பிடிப்பது என்ற முடிவுடன் இருப்பதாகவும், அந்த அளவுக்கு மோடியின் செயல்பாடுகள் மீது அவர்கள் வெறுப்படைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்றவுடன் நரேந்திர மோடியிடமிருந்த பிடிவாத குணம் ஒன்று வெளிப்பட்டது. அது, என்னவென்றால், மத்திய அமைச்சகங்களின் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளில் குஜராத் கேடர் அதிகாரிகளையே நியமிப்பது மற்றும் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது என்பதுதான். அதாவது, பிரதமர் அலுவலகத்தை ஒரு 'குட்டி குஜராத்' என்று சொல்லும் அளவுக்கு குஜராத்தில், தான் முதலமைச்சராகப் பணியாற்றியபோது தன்னுடன் பணியாற்றிய, தனக்கு விசுவாசமான மற்றும் நம்பிக்கைக்குரிய குஜராத் கேடர் அதிகாரிகளைத் தேடிப்பிடித்து பிரதமர் அலுவலகத்திலும் மத்திய அரசின் இதர அமைச்சகங்களிலும் அமர்த்திக்கொண்டார்.

இவ்வாறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மட்டுமல்லாது, குஜராத் கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் உளவுத்துறை, சி.பி.ஐ போன்ற முக்கியத் துறைகளில் நியமித்து, அவர்களை தனக்குச் சாதகமாக மோடி பயன்படுத்திக்கொண்டார். சர்ச்சைக்குரிய ஐ.பி.எஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். தேசிய உளவு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஏ.கே.பட்னாயக்கும் சி.பி.ஐ இணை இயக்குநராக பிரவின் சின்ஹாவும் நியமிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான மற்றொரு போலீஸ் அதிகாரியான ஒய்.சி.மோடி, தேசிய புலனாய்வு முகமையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அப்படி அமர்த்தப்பட்ட அதிகாரிகள் மீது பல்வேறு சர்ச்சைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் 'விசுவாசம்' என்ற ஒரே ஒரு அளவுகோல் மட்டுமே பார்க்கப்பட்டது. கூடவே பல விதி மீறல்களும். இதுமட்டுமல்லாது காலியாகும் பதவிகளில்கூட பதவி ஓய்வு பெற்றவர் அல்லது பதவி மாறிச் சென்றவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரியை நியமிக்காமல், அவருக்கு அடுத்த நிலையில், அதாவது ஜூனியர் அந்தஸ்திலுள்ள அதிகாரியை, தனக்கு விசுவாசமானவர் என்ற ஒரே காரணத்துக்காக விதிகளை மீறி மோடி நியமித்தார் என்ற சர்ச்சையும் அவ்வப்போது எழுந்தது.

பிரதமராகப் பதவியேற்ற உடனேயே, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக 2006 முதல் 2009-ம் ஆண்டு வரை பதவி வகித்த நிருபேந்திரா மிஸ்ரா என்பவரைப் பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிக்க, மோடி ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தார் (இவர் உ.பி கேடர் அதிகாரி என்றாலும், மோடி விசுவாசி). இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் 1997-ம் ஆண்டு சட்ட விதிப்படி, அதன் தலைவராகப் பதவி வகித்தவர்கள், பணிக்காலம் முடிந்த பின்னர் அல்லது விலகிய பின்னர் மத்திய, மாநில அரசுகளில் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது. ஆனால், அந்த விதியை ரத்து செய்யும் விதமாக, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றி, அதற்கு ஒரே நாளில் அமைச்சரவைக் கூட்டத்தைக்கூட்டி ஒப்புதல் அளித்து, அன்றைய தினமே அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அடுத்த நாளே அச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இத்தனைக்கும் பிரதமரின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு வரக்கூடிய தகுதியில், நிருபேந்திரா மிஸ்ராவைக்காட்டிலும் மும்மடங்கு அதிக தகுதியைக்கொண்ட அதிகாரிகள் பலர் இருந்தும், மிஸ்ராவையே அப்பதவியில் அமர்த்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் மோடி. இதன்மூலம், அப்போது பணியில் இருந்த அதிகாரி எவரும் அந்தப் பதவிக்கு லாயக்கு இல்லை என்பது போன்ற தனது எண்ணத்தை அவர் வெளிப்படுத்திவிட்டார்.

இவரைத் தொடர்ந்து, அஜித் தோவல் என்ற ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் விவேகானந்தா அறக்கட்டளையை நடத்தி வந்தார். மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் மீதான ஊழல் குற்றச்சாட்டைத் தீவிரப்படுத்தி பிரசாரம் செய்தவரான அன்னா ஹசாரே இயக்கத்தை வழி நடத்தியதிலும் முக்கிய பங்காற்றினார். மேலும், மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது அவருக்குப் பல முக்கிய விஷயங்களில் தோவல் ஆலோசனைகள் வழங்கியதாகவும் கூறப்பட்டது.

இதே போன்று கேபினட் செயலாளராகப் பணியாற்றிய பி.கே.சின்ஹாகா என்பவருக்குப் பணி நீட்டிப்பு கொடுத்ததன் மூலம், இரண்டு பேட்ச்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் பணியின் உச்சபட்ச பதவியை அடைய முடியாமல் போனது.

இன்னொரு உதாரணமாக 2017-ம் ஆண்டு, வெளியுறவுத்துறை செயலாளராகப் பணியாற்றிய ஜெய்சங்கருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதைக் குறிப்பிடலாம். இதன் மூலம் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரிகள் வெளியுறவுச் செயலாளர் பதவிக்கு வர முடியாமல் தடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர், ``இதுபோன்ற உயர்ந்த மதிப்புமிக்க பதவிகளெல்லாம் தனக்குப் பிடித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துவிட்டுப் போகலாம்” எனக் காட்டமாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் 8 உயர் அதிகாரிகள் தங்களை வேறு துறைக்கு இடமாற்றம் செய்யக் கோரிக்கை விடுப்பது அல்லது தங்களது பணிக்காலம் முடிவதற்கு முன்னரே ராஜினாமா செய்துவிட்டுச் செல்வது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக, மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். இது விவகாரமான விஷயம் என்பதால் அவர்கள் தங்களுடைய பெயர்களை வெளியிட விரும்பவில்லை. மேலும், இந்தத் தகவலை வெளியிட்ட 3 அதிகாரிகளிலேயே இரண்டு பேர், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுப் பணிக்கோ அல்லது மற்ற துறை பணிகளுக்கோ மாறிச் செல்வது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இது தவிர, மேலும் பல்வேறு துறை அமைச்சகங்களில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் பலரும் பணி மாறும் எண்ணத்தில் இருப்பதாகவும், ஆனால், அந்த எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து தெரியவில்லை என்றும் அந்தத் தகவல் கூறுகிறது.

பிரதமர் அலுவலகத்தைப் பொறுத்தவரை சுமார் 25 மூத்த அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். நிர்வாக விஷயங்களில் மோடி நடந்து கொள்ளும் விதம், வழக்கமான அரசு நிர்வாக முறைகள் அல்லது கொள்கைகளுக்கு மாறாக, தான் விரும்பியபடிதான் செயல்பட வேண்டும் என அதிகாரிகளைப் பெருமளவில் கட்டுப்படுத்துவது, பிரதமர் மட்டும் அல்லாது சில மத்திய அமைச்சர்கள் மற்றும் அவர்கள் ஆலோசகர்களின் தலையீடு, அதிகமான நேரம் பணியாற்றச் சொல்வது, விடுமுறை தினங்களில்கூட பணிக்கு வரச் சொல்வது எனப் பல விஷயங்கள் அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

``அதிகாரிகளுடன் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு ஒரு கூட்டுணர்வோ, இயல்பான உணர்வோ இல்லை. மேலும் எந்த ஒரு விஷயத்தையும் மேல்மட்ட அளவிலேயே முடிவு செய்யும் அணுகுமுறை, தூய்மை இந்தியா திட்ட பிரசார தொடக்கத்தின்போது அதிகாரிகளை அவர்களது இடத்தை அவர்களே தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது போன்றவையெல்லாம் பிரதமருக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரிக்கச் செய்துவிட்டது" என்கிறார் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர்.

இந்த நிலையில், அதிகாரிகளின் இந்த அதிருப்தி குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா உள்ளிட்டோருக்கும் தெரிய வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இது தொடர்பாக 2 அமைச்சர்களுடன் நடந்த ரகசிய கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "நம் அதிகாரிகளில் பலருக்கு இன்னும் இடதுசாரி தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

ஆனால், பிரதமர் அலுவலகம் உட்பட பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றும் உயரதிகாரிகள் பலரும் இந்தியாவின் உயர்தரமான பல்கலைக்கழகங்கள் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயின்றவர்கள். மேலும், இந்திய நிர்வாக சேவை ( Indian Administrative Service - IAS) பணிக்கு வருவது என்பது உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று. 2018-ம் ஆண்டில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்றவர்களில் 4,500 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில்தான் தேர்வு பெற்றுள்ளனர். அந்த அளவுக்குத் திறமையுடன் இந்தப் பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு ஆளும் பா.ஜ.க-வின் வலதுசாரி இந்துத்துவ கொள்கைகளும் அரசு நிர்வாகத்தில் பிரதமர் மோடி கடைப்பிடிக்கும் முரட்டுத்தனமான அணுகுமுறையும் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

இவையெல்லாவற்றையும்விட இன்னொரு முக்கியமான பிரச்னை, அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலையீடு. இந்தத் தலையீடு அதிகாரிகள் மட்டத்தில் மிக அதிகமாகவே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கியில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மோடி விசுவாசியான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்கிறார்கள் அதிகாரிகள். அதேபோன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமல் போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்களை அமல்படுத்தும்போது தங்களுடன் மோடி கலந்தாலோசிக்கவில்லை என்றும், ஒருவேளை வேறு சில விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தாலும் நாங்கள் கூறும் மாற்று கருத்துகளைக் காது கொடுத்து கேட்பதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், மத்திய அரசின் அமைச்சகங்களில் குறைந்தது 10 இணைச் செயலர் பதவிகளில் தனியார் துறையில் பணியாற்றும் நிபுணர்களைக் கொண்டு வர மோடி திட்டமிட்டதையும் அதிகாரிகள் விரும்பவில்லை.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் தரப்பிலோ, ``பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்ற சர்ச்சையான நடவடிக்கைகளை அமல்படுத்தும் விஷயத்தில் போதுமான திறமையுடைய மற்றும் தொழில் நேர்த்தி கொண்ட அதிகாரிகள் மோடியிடம் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த கடுமையாக நடந்துகொள்ளும் திறமையான நிர்வாக அதிகாரிகள்தான் தேவையே தவிர, பொதுவியலாளர்கள் (generalists) தேவையில்லை" என்கிறார் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கிளை அமைப்பான 'ஸ்வதேஷி ஜாக்ரன் மன்ச்'சின் இணை நிறுவனரான அஷ்வினி மகாஜன்.

இந்தக் கொந்தளிப்பான சூழ்நிலைகளுக்கிடையே, தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் இந்த அதிகாரிகள்!

-விகடன் 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...