90 வயது உழைப்பாளி!

மே 02, 2019 674

90 வயது முதியவர் கங்காதரன் தன் தள்ளாத வயதிலும் சொந்த உழைப்பில் வாழ்ந்து வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ளது பீமன் தோப்பு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன். 90 வயதான இவர் கடந்த 75 ஆண்டுகளாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார். திருவள்ளூர் ராஜாஜி சாலை கலைச்சங்கம் மைதானம் அருகில் சாலையின் ஓரத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய வேலையைச் செய்து வருகிறார் கங்காதரன்.

மனைவி (உயிருடன் இருக்கிறார்) மகன், மகள் என்று அனைவராலும் கைவிடப் பட்ட இவர் தற்போது தனியாளாக வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நான் மூன்று வேளையும் ஹோட்டலில்தான் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லும்போது அவரின் குரல் உடைகிறது. மகனோ மகளோ தன்னைப் பார்த்துக்கொள்ளவில்லை. ஒற்றை ஆளாக தான் மட்டும் ஒரு வீட்டில் வசிப்பதாகக் கண்களை கசக்கியவாறு கலங்குகிறார் கங்காதரன்.

`தொழில் எப்படி இருக்கிறது?' என்று கேட்டதற்கு, `நாளொன்றுக்கு 50 ரூபாயில் இருந்து 70 ரூபாய் வரைக்கும் வருமானம் வருவதே பெரிய சிரமமாகத்தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு 70 ரூபாய் கிடைத்துவிட்டால், அது எனது மூன்று வேளைச் சாப்பாட்டிற்கும், பஸ் கட்டணத்திற்கும் சரியாகப் போய்விடுகிறது. அனல் பறக்கும் வெயிலில் குடையும் இல்லாமல் தண்ணீர் பாட்டிலும் இல்லாமல் தன்னிடம் யாராவது செருப்பு தைக்க வரமாட்டார்களா என்று பார்க்கிறார். அந்த சோகம் தோய்ந்த முகத்தில் வறுமையின் வலி தெரிகிறது.

அந்த வழியாகப் போகும் பொதுமக்களில் ஒரு சிலர் சில்லறை காசுகளையும் கொடுத்துவிட்டு போகிறார்கள். ஆனால், அவர் யாரிடத்திலும் கை நீட்டி காசு கேட்பதில்லை. அவரிடம் செருப்பு தைக்க வருபவர்களுக்கு மட்டும் தனது வேலையை ஒழுங்குபடுத்திக் கொடுத்துவிட்டு, அவர்கள் கொடுக்கும் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறார். கறாராக கட்டணம் ஏதும் கேட்பதில்லை. பொதுமக்கள் கொடுக்கும் பணத்தை செருப்புத் தைக்க கட்டணமாகப் பெற்றுக்கொள்கிறார். முதியோர் உதவித்தொகையும், தான் அணிந்துகொள்ள ஒரு கண் கண்ணாடி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கலங்கிய கண்களோடு கூறினார் கங்காதரன்.

நன்றி: விகடன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...