இரண்டே நிமிடத்தில் உலகில் வைரலான தமிழ் மகள்!

செப்டம்பர் 02, 2019 678

இளவேனில். இளவேனில்.. இளவேனில்... என இரண்டே நிமிடத்தில் உலகம் முழுவதும் வைரலான இவர், சோதனைகள் பல கண்டும் துவண்டு போகாமல் அதை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். 20 வயதாகும் இந்த இளம் வீராங்கனை தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஆனாலும், வசித்து வருவது அகமதாபாத்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. இதில் 72 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இந்தத் தொடர் தான் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றும் களமாக அதிகமாகவே சூடு ஏறியது.

பதக்க கனவுகளோடு பங்கேற்ற இந்திய வீரர்களில் இளவேனிலும் ஒருவர். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சாதுரியமாக துப்பாக்கியை கையாண்டு இலக்கை நோக்கி துல்லியமாக பயணித்தார். இதுதான் அவர் பங்கேற்ற முதல் சீனியர் போட்டி என்றாலும் சற்றும் அசரவில்லை. உலக சாம்பியன்கள், ஜாம்பவான்களுடன் இறுதிச்சுற்றுக்கு இவரும் அணிவகுத்து, யாருமே எதிர்பாராத நிலையில் முதல் இடத்தை பிடித்தார். அதுவும் தேசிய விளையாட்டு தினத்தன்று தங்கப்பதக்கத்தை வென்றது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகளில் மூன்றாவது வீராங்கனை இளவேனில். துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமையாகும்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காராமணி குப்பத்தை சேர்ந்த முனைவர்கள் வாலறிவன்-சரோஜா தம்பதிகளின் மகன் இறைவன் ராணுவ வீரன். மகள் இளவேனில் விளையாட்டு வீராங்கனை. தனியார் நிறுவன வேலைக்காக குஜராத் மாநிலத்திற்கு குடிபெயர்ந்தனர். இரண்டு வயது வரை கிராமத்தில் வளர்ந்த இளவேனில், தாய் தந்தையுடன் அகமதாபாத் சென்றதால் அங்கேயே கல்வி வாழ்க்கையை துவக்கினார்.12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்ததால் மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்புக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. இதில் சேர்ந்தால் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு இடையூறு ஏற்படும் என்று உதறித் தள்ளிய இளவேனில், ஆங்கிலம் மொழி பாடத்தை தேர்வு செய்து படித்து வருகிறார்.

படிப்பில் சுட்டியானாலும் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும். உலகமே அதைப்பற்றி பேச வேண்டும் என்பது சிறு வயது முதல் அவரது மனதுக்குள் தீப்பிழம்பாய் கனன்று கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தை விரும்பினாலும் துப்பாக்கி சுடுதலில் வல்லவரான சகோதரனைப் பார்த்து பார்த்து வளர்ந்ததால் துப்பாக்கி சுடுதல் மீதான ஆசை அதிகரித்திருக் கிறது. இதை பெற்றோரிடம் தெரிவித்ததும் பயிற்சியில் சேர்த்து மகளின் விருப்பத்தை நிறைவேற்றினர். பயிற்சி கடுமையாக இருந்தபோதும் மனம் தளரவில்லை. விளையாட்டால் படிப்பிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கடுமையாக உழைத்து ஜப்பான், மலேசியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளுக்கு சென்று போட்டிகளில் பங்கேற்று பரிசு, பதக்கங்கள் குவித்து விளையாட்டு உலகில் சரித்திரம் படைத்து வருகிறார். சீனியர் பிரிவில் தங்கம் வென்றதும் நாடே அவரை உற்று நோக்கியது. இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பிரகாசப் படுத்தியிருக்கிறார். விளையாட்டு வீரர்கள் மட்டுமன்றி முதலமைச்சர் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

உலகக் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் பெற்றோரை சந்திக்க, சொந்த ஊரான கடலூர் மாவட்டம் காராமணிக் குப்பம் கிராமத்திற்கு செய்தியாளர்கள் சென்ற போது, கால்நடைத் துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற 84 வயதாகும் தாத்தா உத்திராபதியும், பாட்டி கிருஷ்ணம்மாளும் தங்களது உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகமாக இனிப்புகள் வழங்கி கொண்டிருந்தனர். அந்த சந்தோசத்தில் பங்கெடுத்துக் கொண்ட செய்தியாளர்களிடம் சில நிமிடங்களே உரையாடிய தாத்தாவும் பாட்டியும், “துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்று ஊக்கம் அளித்து வந்தோம். இன்றைக்கு எங்கள் கனவு முழுமையாக நிறைவேறியது. நாங்கள் நினைத்ததை சாதித்த பேத்திக்கு தங்கப் பரிசு கொடுக்க உள்ளோம்” என்றனர்.

“எனது மருமகள் சரோஜா குஜராத் மாநில தனியார் கல்லூரி ஒன்றில் முதல்வராகவும், மகன் வாலறிவனும் தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்து வருவதால் அகமதாபாத்தில் உள்ளதாக கூறியதோடு, ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்” என்று பெருமிதம் கொண்டனர்.

“ஆரம்பத்தில் வேடிக்கையாக கையில் துப்பாக்கியை தூக்கிய இளவேனில், 12 வயதில் முழுநேரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது வீட்டிற்கும் பயிற்சி மையத்திற்கும் 25 கிலோ மீட்டர் தூரம் என்றாலும் அதிகாலை 4 மணிக்கு விழித்துக் கொள்ளும் வழக்கம் கொண்டதால் பயிற்சி துவங்குவதற்கு முன்பாகவே மைதானத்திற்குள் முதல் நபராக நிற்பார். மாலையில் பள்ளி முடிந்ததும் நேராக பயிற்சிக்கு வந்து விடுவார். இரவு 8.30 மணிக்கு தான் பயிற்சியை முடிப்பது வழக்கம். அவரது கடின உழைப்புக்கு 13 வயதிலேயே பதக்கம் கிடைத்தது. அதுவே அவர் வென்ற முதல் தங்கம்” என்கிறார் அவரது பயிற்சியாளர் நேஹா சவான்.

துப்பாக்கி சுடுதலில் தங்கம் என்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஜெர்மனியின் முனிச் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் (ஐஎஸ்எஸ்எப்) சார்பில் நடந்த ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளில், இந்த உலகக் கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன்பும் ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியிலும் தொடர்ச்சியாக மூன்று தங்கம் வென்றுள்ளார். 18 வயதில் 631.4 புள்ளிகள் குவித்து முதல் இடம் பிடித்து மிக இளம் வயதில் சீனியர்கள் பலரது சாதனைகளை முறியடித்து சாதித்துக் காட்டியவர் இளவேனில். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கமும், மலேசியாவில் நடந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் வெண்கலப்பதக்கமும், கேரளா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கமும் வென்று அசத்தினார்.

உலக அளவில் புகழ்பெற்ற நபர்களில் ஒருவராக உள்ள இளவேனில் முதல் இடத்தை நோக்கி வேகமாக பயணித்து கொண்டிருக்கிறார். உலகக் கோப்பையின் முதல் பதக்கத்தை தனது வெற்றிக்கு பெரும் தூணாக நிற்கும் பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது. விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்கள் எந்த பின்புலமும் இல்லாமல் வரும் பொழுது ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டும். மீண்டும் மீண்டும் முயற்சித்தால் இலக்கை நிச்சயம் அடைய முடியும் என்று கூறும் இளவேனில், ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக இன்னும் ஓரிரு மாதங்களில் சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க தயாராகுவதே அடுத்தகட்ட இலக்கு என்று கூறியிருக்கும் அவரது லட்சியம் நிறைவேற வாழ்த்துவோம்!

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...