புற்று நோய் பாதிப்பு - பெற்றோர்கள் இல்லை- சாதித்த மாற்றுத் திறனாளி வாலிபர்!

செப்டம்பர் 09, 2019 450

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக, தனது ஒரு காலை இழந்த இளைஞர் ஒருவர், இலங்கை தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கை கிழக்கு மாகாணம் - காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்தான் அனீக். 2018ஆம் ஆண்டு இவர் தனது இடது காலை இழந்தார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம், புற்றுநோயாக மாறியதால் அவரது காலை அகற்ற வேண்டியதாயிற்று.

தனது 10 வயதில் தாயையும், 16 வயதில் தந்தையையும் இழந்த அனீக், தற்போது மாமாவோடு (தாயின் தம்பி) வசித்து வருகின்றார். இவருக்கு 14 வயதில் ஒரு தம்பியும் இருக்கிறார்.

மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி, கடந்த 05 மற்றும் 06ஆம் தேதிகளில் கொழும்புவிலுள்ள சுகததாஸ மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அனீக் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் கலந்து கொண்டு, இந்த மூன்றிலும் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கங்களை தட்டிச்சென்றார்.

தேசிய பராலிம்பிக் குழு ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் 190-க்கும் மேற்பட்ட தடகள போட்டிகள் இடம்பெற்றன.

இவற்றில் சுமார் 800 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 18 வயதுக்குக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் அனீக் கலந்துகொண்டார்.

வாழ்க்கையில் சோதனைகளையும் கடினமான நெருக்கடிகளையும் சமாளித்து கொண்டே, இந்த சாதனையைப் புரிந்துள்ள அனீக் கூறியதாவது:

"நான் பாவித்துக் கொண்டிருந்த மாற்றுக் கால் ஒரு தடவை உடைந்து விட்டது. அதனையடுத்து மருத்துவர் ஒருவரை காத்தான்குடியில் சந்தித்தேன். அப்போதுதான் விளையாட்டில் எனக்குள்ள ஆர்வம் பற்றி அவர் அறிந்து கொண்டார். அதனையடுத்து தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை, அந்த மருத்துவர்தான் உரிய தரப்பினருடன் பேசி பெற்றுத் தந்தார்," என்றார் அனீக்.

விளையாட்டு மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக, விளையாட்டுப் பயிற்சிகளில் அனீக் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார். அவருக்கென்று பயிற்சியாளர்கள் எவருமில்லை. சுயமாகவே பயிற்சி செய்து, இந்த வெற்றிகளை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கென்று 'பிளேட் ஃபுட்' (Blade foot) எனும் மாற்றுக் கால்கள் உள்ளன. அதன் விலை சுமார் 15 லட்சம் இலங்கை ரூபாய். எனது பொருளாதார நிலையில் அந்த வகை காலை என்னால் வாங்க முடியாது. எனவே, நான் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் சாதாரண காலினைக் கொண்டுதான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றேன். 'பிளேட் ஃபுட்' இருந்தால், எனது ஓட்ட வேகத்தையும், நீளம் தாண்டுதல் தூரத்தினையும் இன்னும் அதிகரிக்க முடியும்," என்றும் அனீக் கூறினார்.

துபாயில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச பரா மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டிகளாகவும், தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத் திறமைகளோடு, தனது கல்வியிலும் அனீக் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். வரக்காபொல பிரதேசத்திலுள்ள தனியார் பாடசாலையொன்றில், ஆங்கில மொழி மூலம் இவர் உயர்கல்வி கற்று வருகின்றார்.

'எனக்கு ஏற்பட்ட எந்தவோர் இழப்பும், எனது திறமைகளுக்குத் தடையாக அமைந்து விடவில்லை' என்று சொல்வது போல், தனக்குக் கிடைத்த மூன்று தங்கப் பதக்கங்களையும் கழுத்தில் அணிந்து கொண்டு, புன்னகைத்து நிற்கிறார் அனீக்.

நன்றி: பிபிசி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...