முஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்!

நவம்பர் 14, 2019 618

பாபர் மசூதித் தீர்ப்பு, இந்திய முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது.

அஸ்ஸாமில் 40 லட்சம் பேரை நாடற்றவர்களாக மாற்றியிருக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ். அரசு, அதற்கு ஈடான ஒன்றை பாபர் மசூதித் தீர்ப்பின் வழியாக இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாகச் செய்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இப்படியான சூழலில் இந்திய முஸ்லிம்கள் வருத்தங்களைப் பதிவுசெய்த அதேவேளையில், இந்திய அரசியலமைப்பினை மதித்துப் பேரமைதி காத்து நின்றதை, உலகம் உரியவிதத்தில் அணுகி வரவேற்றிருக்கிறது. முஸ்லிம்களின் இந்தத் துயர்மிகுந்த காலத்தில், இந்தியப் பெரும்பான்மைச் சமூகத்தினர் அவர்களின் கரங்களைப் பற்றி ஆறுதல் சொல்லித் துணைநின்றதற்கு, முஸ்லிம் சமூகம் எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது. பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள், சமயப் பெரியோர்கள் உள்ளிட்டு சமூகத்தின் அத்தனைத் தளங்களிலும் வாழும் பெரும்பான்மை மக்கள், இந்தத் தீர்ப்பைக் கண்டு நிம்மதியடைந்தாலும், மகிழ்ச்சியடையவில்லை என்பதே நிதர்சனம்.

"ஒருவேளைத் தீர்ப்பு மாறி வந்திருந்தால், இங்குள்ள முஸ்லிம்களின்மீது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் மிகப்பெரும் கலவரத்தை நிகழ்த்தித் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆனால் தீர்ப்பு வேறு மாதிரி வந்துள்ளதால், அந்த வன்முறையாளர்களுக்கு வழியற்றுப் போய்விட்டது" என்பதாகவே பொதுச் சமூகத்தின் பெரும்பான்மை கருதுகிறது. அந்தக் காரணம்தான் அவர்களை நிம்மதியடையவும் வைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இது ஒருபுறமிருக்க, முஸ்லிம் சமூகம் சிந்தாந்த ரீதியில் நம்பியிருந்தவர்களில் பலர், இந்தத் தீர்ப்பை எந்தவிதக் கூச்சமுமின்றி "வரலாற்றுத் தீர்ப்பு என்றும்; தீர்வுக்கு வந்த அயோத்தியா வழக்கு எனவும்" வரவேற்றதை, வெறுமனே துரோகம் என்கிற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கிவிட முடியாது. அது தந்த வலி, ஆழியின் ஆழங்களைப் போன்ற ரணங்களைக் கொண்டவை. ஆனாலும் அழுத்தமாகச் சொல்கிறேன் : வரலாறு எப்படியும் ஒருநாள் "திருத்தி எழுதப்படும்". இந்தத் துரோகிகளுக்கும் சேர்த்தே.

இந்தத் தருணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டோரை கட்டாயம் தனித்தே கட்டியணைக்க முஸ்லிம்கள் தவறிவிடக்கூடாது. இவர்களைப்போலவே சமூகக் களத்தில் எப்போதும் நீதியின் பக்கம், அறத்தின் பக்கம் நிற்பவர்களான சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் இந்தச் சூழலில், இந்திய முஸ்லிம்களின் கரங்களை ஈரத்துடன் பற்றிக்கொண்டு நின்றனர். அந்தப் பட்டியல் பெரியது என்பதால், அதைத் தனியே பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுகிறேன்.

"ராமர் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று கட்டமைக்கப்பட்ட பொய்யை உடைத்து, மசூதியை இடித்துத்தான் வெறுமனே நம்பிக்கையின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது" என்பதைக் காலம் நிரூபித்திருக்கிறது. இதன்வழியே ஒரு நூற்றாண்டாகத் தொடர்ந்த பழியை முஸ்லிம்கள் துடைத்தெறிந்திருக்கிறார்கள். இவையெல்லாம் முஸ்லிம்களுக்கு கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்தாலும், "இனி இந்தியாவில் நாம்?" என்பது அச்சம் மிகுந்த கேள்வியாகத் தொற்றி நிற்கிறது.

இந்தத் தீர்ப்பை முஸ்லிம்கள் அதிருப்தியோடு ஏற்றுக்கொண்டாலும், இதனைக் கண்டிக்கிற விதத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. இதை வெறுமனே ஒப்பாரிக் கூட்டமாகவே என்னளவில் கருதுகிறேன். "இந்த நாடு உங்களுடையது அல்ல என்றோ, இந்த நாட்டிற்கு நீங்கள் அந்நியமானவர்கள் என்றோ" பேசி வந்தவர்கள், இப்போது அதனைச் சட்டங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நாமோ பழைய நடைமுறையையே மீண்டும் தொடர்கிறோம்.

டிசம்பர் 6 என்பதற்கு மாற்றாக, இனி நவம்பர் 9இல் கூட்டங்களைப் போடுவதுதான் நம்முடைய அரசியலென்றால், ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு இதுவும் திருப்தியளிக்கக்கூடிய எதிர்வினையாகவே அமைந்துவிடும். ஆக்கப்பூர்வங்களுக்கு வழியை உண்டாக்காமல், உணர்வுத்தளங்களில் மீண்டும் முஸ்லிம் இளைஞர்களைத் தள்ளிவிடாதீர்கள். ஏனென்றால் "பாகிஸ்தான் என்கிற நாட்டைப் புறக்கணித்து, நாங்கள் இந்த மண்ணின் மக்கள் என நிரூபித்துக் காட்டியவர்கள் நம் முன்னோர்கள்" என்பதை நினைவூட்டி, "இந்த நாடு எங்களுக்கும் உரித்தானது; இந்த நாட்டில் நாங்களும் ஓர் அங்கம்" என்பதைக் கனீரென்று பறைசாற்றும் காலத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்!

-பழனி ஷஹான்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...