ஃபேஸ்புக்கில் தீ

அமெரிக்காவில் பரவியுள்ள நெருப்பு ஃபேஸ்புக் நிறுவனத்தையும் சுட ஆரம்பித்துள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பரை வெள்ளை இனக் காவலர் டெரெக் கைது செய்கிறேன் பேர்வழி என்று கழுத்தில் ஏறி அமர்ந்து கொன்றுவிட, உருவான தீப்பொறியால் போராட்டம், கலவரம், மறியல், சூரையாடல் என்று நாடு அதகளப்பட்டுக் கிடக்கிறது. நாளுக்கு நாள் உக்கிரம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது கருப்பர்களின் நீதிக்கான ஆர்ப்பாட்டம். ஆண்டாண்டு காலமாய்த் தாங்கள் நசுக்கப்படுவது பொறுக்காமல் மீண்டும் வெகுண்டெழுந்துள்ளார்கள் அம்மக்கள்.

மிக மிக முக்கியமானப் பிரச்சனையான இதை அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப் கையாளும் விதமோ சூட்டைத் தணிப்பதற்கு பதிலாக வீரியத்தை அதிகமாக்கி வருகிறது. கையாளும் விதம் என்று சொல்வதைவிட விரலாடும் விதம் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கும் ட்வீட்டுக்கும் அப்படியொரு தொடர்பு. பதவியேற்ற நாளாய், உலக வல்லரசின் அதிபரான ஒருவர், சமூக ஊடகப் போராளி போல் தம்மிஷ்டத்திற்குத் தட்டிவிடும் ட்வீட்டுகளைக் கண்டு அதிர்ந்து, வியப்படைந்து, நம்ப முடியாமல் தவித்த மக்களும் அவருடைய இராஜாங்க அதிகாரிகளும், ‘வேறு வழியில்லை. இதுதான் நமக்கும் அடுத்த நான்காண்டுகளுக்கான விதி’ என்று அதனுடன் வாழப் பழகிவிட்டார்கள்.

மற்றதெல்லாம் தொலையட்டும் என்றாலும் உலக மகா சோதனையான கொரோனா காலத்திலும் அதைத் தொடர்ந்து இப்பொழுது எரிமலை வெடித்து தீயைக் கக்கும் இந்த நேரத்திலும் தொடரும் அவரது சமூக ஊடகப் பதிவுகள் பக்குவம், புத்திசாலித்தனம் போன்ற எதற்கும் தொடர்பில்லாதவை. அமைதிப் போராட்டமாக தொடங்கியுள்ள ஆர்ப்பாட்டத்தில் கருப்பர்களுக்கான சமூக உரிமைக்குப் போராடும் பலரும் நிற வேற்றுமையின்றி கலந்திருக்கின்றனர். அதைப் போலவே, சமூக விரோதிகளும். கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதாரச் சீரழிவால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் சிலர் இந்தப் போராட்டங்களைச் சாக்காக வைத்துக்கொண்டு, எரியும் வீட்டில் முடிந்தவரை கொள்ளையிடுகின்றனர்தாம். அதைப் பார்த்து நீதிக்கான எங்களது போராட்டத்தை சமூக விரோதிகள் இவ்விதம் திசை திருப்பி சீரழிக்கப் பார்க்கிறார்கள் என்று கத்துகிறார்கள் அமைதி வழிப் போராட்டக்காரர்கள்.

ஆனால் டிரம்ப்?

“when the looting starts, the shooting starts” என்று அவர் தட்டிவிட்ட ஒரு வாசகம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதோடு நிற்காமல் Facebook நிறுவனத்திற்குள் ரகளையை ஏற்படுத்திவிட்டது.

1967 ஆம் ஆண்டு மியாமி நகரில் கருப்பர்களின் குடியிருப்புப் பகுதிகளில் பிரச்சினைகள் வெடித்தபோது அந்நகரின் காவல்துறை உயரதிகாரி உச்சரித்த எச்சரிக்கை வாசகத்தைத்தான் அப்படியே கடன் வாங்கி தட்டியிருந்தார் டிரம்ப். அதிபரின் ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டு வாசகங்களுக்கு, தங்கள் நிறுவனத்தின் அதிருப்தியையும் எச்சரிக்கை வாசகங்களையும் அண்மையில் சேர்க்கத் தொடங்கியிருந்த ட்விட்டர், இந்த வாசகம் வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது என்று லேபிள் ஒட்டிவிட்டது. அதிபருக்கு அதில் ஏக கோபம்.

அதிபர் ட்விட்டரில் பதிந்தவை ஃபேஸ்புக்கிலும் பதிவாகும். அங்குதான் ஃபேஸ்புக் மாறுபட்டது. மார்க்கின் கவனத்திற்கு இந்தப் பதிவு உடனே கொண்டு செல்லப்பட்டது. அதே நாள் – கடந்த வெள்ளிக்கிழமை – டிரம்ப் மார்க்குடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். ‘அதிருப்தியையும் அவ்வாசகம் எந்தளவு பாதகமானது என்பதையும் அவரிடம் தெரிவித்துவிட்டேன்’ என்று கூறியுள்ள மார்க் அந்தப் பதிவை நீக்கத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.

ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்கள் மத்தியிலேயே இது பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. அதிபரின் நியாயமற்ற வன்முறைப் பேச்சுக்கு தமது கொள்கைகளை மீறி ஃபேஸ்புக் சமரசம் செய்து கொள்கிறது என்று ஆத்திரமும் எதிர்ப்பும் தெரிவித்த ஊழியர்கள் பலர் திங்களன்று வேலை வெளிநடப்பு செய்துள்ளனர். அனைவரும் வீட்டிலிருந்து பணி புரியும் இன்றைய சூழலில் நாங்கள் இன்று பணி புரியவில்லை. போராட்டத்தில் ஆதரவாகக் கலந்துகொள்கிறோம் என்று அறிவித்து விட்டனர்.

அதைத் தொடர்ந்து ஜுன் 2, செவ்வாய்க்கிழமை தமது 22,000 ஊழியர்களை ஆன்லைன் மீட்டிங்கில் சந்தித்தார் மார்க். பல ஊழியர்கள் ஃபேஸ்புக்கின் நிலைப்பாடு குறித்து தங்களது கருத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு விட்டு தமது முடிவில் மாற்றமில்லை என்று சொல்லிவிட்டார் அவர். விளைவாக, சில ஊழியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துவிட்டு அவற்றை சமூக ஊடகங்களிலும் அறிவித்து விட்டார்கள்.

இப்பொழுது அதில் பற்றிக்கொண்டு பறக்கிறது சர்ச்சை.

இதனிடையே திங்களன்று மாலை, மனித உரிமை தொடர்பான மாநாடுகளுக்குத் தலைமை வகிக்கும் வனிதா குப்தா, இது தொடர்பாக மார்க்கிடமும் பேஸ்புக்கின் உயரதிகாரிகளிடமும் ஒரு மணி நேரம் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதில் எதுவும் பலனில்லை. ‘மார்க் புரிந்து கொள்ளவே இல்லை. டிரம்பின் பதிவுகளுக்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுப்பது மியான்மரிலும் பிலிப்பைன்ஸிலும் அந்நாட்டு இராணுவமும் அரசும் ஃபேஸ்புக்கில் தவறான தகவல்களைப் பரப்பி வன்முறையைப் பரப்பியபோது அதற்கு அச்சமயம் ஃபேஸ்புக் துணை போனதற்கு ஒப்பான செயல் இது’ என்று பெரும் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவும் தீ இப்பொழுது அதன் தலையாய நிறுவனம் ஒன்றினுள் புகுந்துவிட்டது. அடுத்த அது அதிகப்படியான விளைவுகளை ஏற்படுத்துமா, அல்லது அந்நிறுவனம் அதைச் சமாளித்து, தமது கொள்கைகளைச் மாற்றியமைத்து, இத்தகு வன்முறைப் பதிவுகளைத் தடுத்து நிறுத்துமா என்பது கேள்விக்குறி. தற்சமயம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்குள் அனல் என்பது மட்டும் உண்மை.

-நூருத்தீன்

ஹாட் நியூஸ்:

குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக – கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஆமதாபாத் (05 டிச 2022): பாஜக தற்போது ஆண்டு வரும் மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், குஜராத்திலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இமாச்சல் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக...

வரும் 8 ஆம் தேதி கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் வரும் 8ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல்...

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவ வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை (08 டிச 2022): சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதளல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு...