சர்வதேச அவமானங்களிலிருந்து மீளுமா இந்திய அரசு?

Share this News:

உலக அரங்கில் இந்தியாவுக்கென தனி ஒரு மதிப்பும் மரியாதையும் சுதந்திரம் பெற்ற காலம் முதல் தொடர்ந்து இருந்து வந்துள்ளது மறுக்க முடியாத உண்மை.

இந்தியாவுக்கான முக்கியத்துவத்தினை இதுவரை ஆட்சி செய்த அனைத்து தலைவர்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர். அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடமுண்டு.

வலதுசாரி சங்பரிவார சிந்தனை இஸ்லாமிய வெறுப்பு போன்ற அடிப்படையில் அரசியல் செய்து வந்தாலும் மோடி அவர்கள் வெளியுறவு கொள்கை விஷயத்தில் வெளிப்படையாக அந்த வெறுப்புக்கு மாற்றமாகவே நடந்துள்ளார்.

இதன் விளைவாக மேற்காசிய முஸ்லிம் நாடுகள் அதிலும் குறிப்பாக வளைகுடா முஸ்லிம் நாடுகள் இந்தியாவுடனான நட்பை மேலும் வலுப்படுத்தினர்.

முந்தைய பாஜக ஆட்சியில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு அமீரகத்தில் நடந்தது. அப்போது மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு சிறப்புரையாற்றும் வாய்ப்பையும் வழங்கினர்

இந்த நிலையில் 2019 தேர்தலில் அறுதிபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தவுடன் முதல் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தாத சித்தாந்த ரீதியிலான பாசிச செயல்திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்த துவங்கியது மோடி தலைமையிலான அரசு. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, முஸ்லிம்களை ஒடுக்கும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவு, தேசிய குடியுரிமை பதிவு என முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து வரிசையாக சட்டங்களை கொண்டு வர துவங்கியது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த அப்பட்டமான முஸ்லிம் விரோத போக்கினால் குதூகலமடைந்த பாஜக மற்றும் சங்பரிவார ஆதரவாளர்கள் முஸ்லிம்களை முற்றிலும் இந்தியாவில் அந்நியப்படுத்தும் வேலையினை கனகச்சிதமாக செய்ய துவங்கினர்.

ஆளும் சங்பரிவார பாஜகவின் வலுவான பிரச்சார தளங்களுள் ஒன்று சமூகவலைதளம் ஆகும். பல இலட்சம் அப்பாவிகளுக்கு மிக எளிதாக பொய்யான தகவல்களை மெய்யாக காண்பிக்கும் கலையில் தங்கள் கட்சியினர் கைதேர்ந்தவர்கள் என்பதனை பெருமையுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு பாஜகவினர் கோலோச்சும் களம்.

அப்படியான வலுவான தளத்தில் இனவாத பேச்சுக்கள், சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குதல் போன்ற சிந்தனைகள் அதிகமாக விதைக்கப்பட்டது. உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரொனா தொற்று விஷயத்திலும் சமூகவலைதளம் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக பூசினர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்று ஆங்காங்கே சில இடங்களில் பாமர அப்பாவி மக்களும் முஸ்லிம்களை கண்டாலே பயந்து ஓடும் நிலையினை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் கொரொனாவினால் வீட்டினுள் முடங்கி கிடக்கும் வளைகுடா நாட்டினர் தங்களது நேரங்களை செலவிட சமூக வலைதளங்களை கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்த துவங்கினர். அப்போது தங்களின் நாடுகளில் இருந்து கொண்டே இஸ்லாமிய வெறுப்பு பிரச்ச்சாரத்தை படுவேகமாக செய்து வரும் சில சங்பரிவார வலதுசாரிகளின் கருத்துக்களை கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

முஸ்லிம்களால் நட்த்தப்படும் நிறுவனங்களில் பணி செய்து கொண்டே அல்லது முஸ்லிம்களை பங்குதாரர்களாக வைத்து பணம் சம்பாதித்து கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் தெளித்து கொண்டிருக்கும் சங்பரிவார இயக்கத்தினரின் அத்துமீறிய முஸ்லிம் வெறுப்பை கண்டு அவர்களால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. காரணம் அந்த அளவுக்கு வெறுப்பை உமிழ்ந்து இருந்தது பலரது நச்சு கருத்துக்கள்.

பொதுவாக இந்தியர்கள் என்றால் சாதுவானவர்கள், சாதுர்யமாக வேலைகளை முடிப்பவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமாக நடப்பவர்கள் என்ற நல்லெண்ணம் வளைகுடா முஸ்லிம்களிடம் காலங்காலமாக இருந்து வருகிறது. அதில் அவர்கள் மதம் பார்ப்பதில்லை. எல்லோரையும் ஒரு சேர பார்ப்பார்கள்.

லட்சக் கணக்கான முஸ்லிமல்லாத இந்திய தொழிலாளர்கள் பல்லாண்டு காலமாக வளைகுடா நாடுகளில் பணியாற்றி வந்தாலும் இன்று வரை மத வெறுப்பின் காரணமாக எந்தவிதமான பிரச்சனையும் வளைகுடா அரபு முஸ்லிம்கள் மூலமாக நிகழ்ந்ததில்லை. ஆனால் இவை அனைத்துக்கும் வேட்டு வைக்கும் விதத்தில் அமைந்துவிட்டது சமூக வலைதளங்களில் சங்பரிவார ஆதரவாளர்களின் வெறுப்பு பிரச்சாரம்.

இந்தியர்கள் மீது வளைகுடா அரபுகள் கொண்டுள்ள அளப்பரிய பற்றும், மதிப்பும் நல்ல பல முக்கிய வேலைகளை இந்தியர்களுக்கு பெற்று தந்துள்ளது, பல முன்னணி தொழில் நிறுவனங்களில் தொழில் முறை பங்குதாரர்களாகவும் ஆக்கி அழகு பார்க்கவும் உதவியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்துக்கு அச்சாணியாக விளங்குவதில் ஒன்று அந்நிய செலவாணி, இப்படியான அந்நிய செலவாணியில் முக்கிய பங்காற்றுவதும் வளைகுடா நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பொருளாதாரமே. இந்தியாவின் மொத்த அந்நிய செலவாணியில் 60%க்கும் அதிகமாக வளைகுடா நாடுகளே பங்களிப்பு செய்து வருகின்றனர். ஆண்டொன்றுக்கு சுமார் 3 லட்சம் கோடிகள் வளைகுடா நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் வந்து கொண்டிருக்கிறது.

இது நாள் வரை மதம் சார்ந்த விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வளைகுடா அரபுகள் முன்வந்ததே இல்லை எனலாம். அவர்களின் வணக்க வழிபாடுகளையும், தான தர்மங்களையும் பகிரங்கப்படுத்தாமலே செய்து வந்துள்ளனர்.

ஆனால் இந்நிலை மாறி இப்போது வளைகுடா மக்கள் வெகுண்டெழுந்து சங்பரிவாரத்தினரை இனங்கண்டு எதிர்க்க துவங்கியுள்ளனர் எனில் அதற்கு காரணம் சங்பரிவார ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பழித்து அவதூறு பிரச்சாரம் செய்தவை அனைத்தும் தற்போது இனம் காணப்பட்டு வருகின்றன.

இந்த பிரச்சினை குறித்து பேசும் போதே இந்தியர்களில் சிலர் வளைகுடா நாடுகளில் செய்யும் பாரிய தவறுகள் குறித்தும் பேச துவங்கி வளைகுடா அதிகார வர்க்கத்தினையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

சங்பரிவார ஆதரவாளர் என அறியப்பட்ட பிஆர் ஷெட்டி என்பவர் அமீரகத்தை தலைமையகமாக கொண்டு உலகம் முழுவதும் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் பல்லாயிரம் கோடிகளை கடனாக பெற்று அதனை திரும்ப செலுத்தாமலும், கடனை பெற பல தில்லுமுல்லுகளை செய்த காரணத்தினாலும் அமீரக மற்றும் லண்டன் நீதிமன்றங்களில் வழக்குகளை சந்திக்க உள்ளார்.

இந்த சூழ்நிலையில் இவ்விவகாரமும் விஸவரூபம் எடுத்துள்ளது. இதுவும் இந்திய அரசுக்கு கடும் தர்ம சங்கடத்தை தந்துள்ளதாக வெளியுறவு கொள்கை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

வளைகுடா மக்களின் இந்த திடீர் ஆவேச பிரவேசம் இந்தியாவை ஆளும் பாஜகவை திக்குமுக்காட செய்து விட்டது. இப்படி ஒரு பல்முனை தாக்குதலை பாஜக சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஆளும் பாஜக ஆதரவாளர்களின் பழைய , புதிய சமூகவலைதள பதிவுகள் கண்டறியப்பட்டு அவை தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பரப்பப்பட்டு வருவதோடு, அவை வளைகுடாவின் சமூக ஆர்வலர்களின் கவந்த்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதனை அறிந்த பல பாஜகவினர் அவர்களின் பதிவுகளை நீக்க முனைகின்றனர். சிலர் சமூக வலைதளங்களை விட்டே ஓடிவிட்டனர்.

எனினும் அந்த வெறுப்பூட்டும் பதிவுகள் அனைத்தும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன. மேலும் அரபியர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் முகத்திரையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவுகள் மூலம் கிழித்து தொங்க விடுகின்றனர்.

இவற்றை கொஞ்சம் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் இந்திய பிரதமர் மோடி. நிலமை கையை மீறி போவதனை அறிந்து சுதாரித்து கொண்ட மோடி உடனடியாக தனது பிரதமர் அலுவலக அதிகார பூர்வ ட்விட்டர் வழியாக கோவிட்19 விவகாரத்துக்கு மதசாயம் பூசாதீர்கள் என கோரிக்கை விடுத்தார். அதனை வளைகுடாவிலுள்ள சில இந்திய தூதரகங்களும் வழிமொழிந்து இந்தியர்களை கவனத்துடனும் சமூக பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தின.

எனினும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை எதிர்த்து சர்வதேச அளவில் கொண்டு செல்வோம் என்றும் அரபிய சமூக ஆர்வலர்கள் உறுதி பூண்டுள்ளனர். இது இந்திய அரசுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றை தடுத்து நிறுத்த வேண்டுமெனில் இந்திய அரசு மத வெறுப்பு விவகாரங்களை மூட்டை கட்ட வேண்டும். இந்தியாவில் இதற்கு மேலும் முஸ்லிம் வெறுப்பு நிலையை பரவவிடாமல் தடுத்து முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளையும் கிடைக்க செய்வதுடன் நீதியை நிலைநிறுத்துவதுமே ஆகும்.

இது ஒன்றும் இயலாத காரியமும் அல்ல என்பதனால் சர்வதேச அளவின் அவமானப்படுவதனை தடுக்க இந்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மனிதநேயமுள்ள அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பும்.

-ஷா முஹம்மது ஷேக்


Share this News:

Leave a Reply