பிரபலமாவது பிரச்சினைக்கு உரியதே!

இத்தலைப்பு 2008 ஆம் ஆண்டில், நான் எழுதி வெளியிட்ட சட்ட அறிவுக்களஞ்சியம் என்னும் நூலில் உள்ள ஒரு தலைப்பாகும்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கிறது. ஆனால்,தன்னார்வலர்களுக்கு இருக்கும் ஆசையோ, நாம் எப்படியாவது பிரபலம் ஆகவேண்டும் என்பதாகும்.

ஆனால், மேற்சொன்ன நூலில் இதனைப் படித்த சிலர், தாங்கள் பிரபலம் ஆகவேண்டும் என்ற எண்ணத்தையே கைவிட்டு விட்டார்கள். இதனைப் படிப்பதற்கு முன்பாக, அப்படியொரு ஆசை இருந்ததாக அவர்களே என்னிடம் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

எல்லோருக்குமே தன்னடக்கம் தேவையென்றாலுங்கூட, தன்னார்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இத்தன்னடக்கம் மிகமிக அதிகமாக இருக்கவேண்டும்.

ஏனெனில், ‘‘நாம் செய்யவேண்டிய கடமையைச் செய்தால், அதற்கு உ(ய)ரிய பலன் தானே நம்மை வந்து சேரும்’’ என்றப் புரிதல் இவர்களுக்கு இருக்கும் காரணத்தினாலேயே, இவர்கள் தன்னார்வலர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். ஆனால், இதனை உணராத தன்னார்வலர்களே அதிகம் என்பதை நான் நன்கறிவேன்.

இவர்களைத்தான் நான் எனது பாணியில் தறுதலைகள் என்பேன். இத்தறுதலைகளில் தற்போது தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களே அதிகம் என்பேன்.

ஏனெனில், முதலில் இவர்களுக்கு அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வே இருப்பதில்லை. சட்ட ஆராய்ச்சியாளர் என்ற முறையில் சட்டங்களின் அடிப்படையை ஆராய்ந்து இன்னென்னச் சட்டங்கள் நியாயந்தான் சட்டம் என்ற வரையறைக்குள் வருகிறது. இன்னென்ன சட்டங்கள் நியாயத்திற்கு உட்பட்டதாக இல்லை என்று எடுத்துச் சொல்லும் எதையும் காதில் வாங்குவதில்லை.

ஆனால், எப்படியாவது எதையாவது செய்து பிரபலமாகிவிட வேண்டுமென நினைப்பவர்கள், இவர்களைப் போலவே தறுதலையான தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பல்வேறு சட்டச் சிக்கல்களில் சிக்குகிறார்கள்.
இதன் மூலம் தாங்கள் வெளி உலகத்திற்கு தெரிந்து விட்டதாகவும் நினைக்கிறார்கள். இது உண்மையாகச் சேரும் பலனன்று; மாறாக, அவர்களுக்கவர்களே துடைத்தெறிய வேண்டிய சகதியாகும்.

ஆனால், உண்மையில் இதுபோன்ற தறுதலைகளால், நம் கடமையைச் செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் கூட, நமக்கேன் வம்பென பயந்துக் கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள்.

நாம் யாரென்பது வெளியுலகத்திற்கு தெரிய வேண்டும் என்பதில்லை. நமது கடமை சமூகத்திற்குச் சென்று சேர்ந்தால் போதும். நமக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.

இதனைத்தான், ‘‘நம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம்! அதிகாரம்!!’’ என்று கடமைமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலின் மையத்தத்துவமாக முன்மொழிந்துள்ளேன்.

- வாரண்ட் பாலா​

தற்போது வாசிக்கப்படுபவை!