தமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

இன்றும், ஆங்கிலத்தில் செல்போன் என்பதற்கு தமிழில் செல்பேசி, அலைபேசி, உடன்பேசி போன்ற காரணப் பெயர்களை சொல்லுகின்றனர்.

‘நாம் எங்கெல்லாம் உலாவுகிறோமோ, அங்கெல்லாம் பேச முடியும்’ என்பதால், இதனை ‘‘உலாப்பேசி’’ என பத்தாண்டுகளுக்கு முன்னரே மொழிப் பெயர்த்து நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலிலேயே எழுதினேன். இதனை விடுதலை நாளிதழில் மதிப்புரையில் குறிப்பிட்டும் பாராட்டியும் எழுதியிருந்தார்கள். இந்த உலாப்பேசி என்ற வார்த்தையை தாராளமாகப் பயன்படுத்தி பழக்கப்படுத்துங்கள்.

இப்படி புதிதாக அர்த்தம் தரக்கூடிய தமிழில் இல்லாத சில சொற்களை வடிவமைத்துள்ளேன். அவைகளையும் பயன்படுத்துங்கள். இதனை வெகுவாகப் பாராட்டிய தமிழ் வெறியர் ஒருவர், ஒரே ஒரு வார்த்தையில் மட்டும் அவரது கொள்கை ரீதியாக முரண்பட்டார். அதனால், ‘தமிழில் இல்லாத வார்த்தைகளை எல்லாம் நீங்கள் புதிதாக உருவாக்கக்கூடாது’ என்றார்.

ஏன் என்றேன்?

தமிழில் இல்லாத வார்த்தை இது. தமிழ் இலக்கணப்படி, இவ்வார்த்தை சரியன்று என்றார். சரி என்று சொல்லி, அந்த வார்த்தையை எதற்காக உருவாக்கினேனோ அதன் கருப்பொருள் விளக்கத்தை எடுத்துரைத்து, ‘இந்தப் பொருளில் என்ன வார்த்தையை தமிழில் வைத்திருக்கிறீர்கள் என்றேன்?’ நான் வந்த வேலையை உங்களுக்கு முடித்து தந்துவிட்டு போகும்போது இறுதியில சொல்கிறேன். ஆனால், ‘நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்’ என்று சொன்னவர், பலமுறை கேட்டும் இன்றுவரை சொல்லவே இல்லை.

இனியும், இறுதிவரை சொல்லப் போவதுமில்லை. ஏனெனில், நான் உருவாக்கிய வார்த்தைக்கு நிகரான அர்த்தமுள்ள வார்த்தை தமிழில் இல்லை என்று உறுதியாகச் சொல்லுவேன். இந்த வார்த்தையை தற்போது நான் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறேன். ஆகையால், அது என்ன வார்த்தை என்பதை நீங்களே யூகிக்கலாம். நான் வெட்டி வேலைகளைச் செய்வதில்லை. சமூகத்திற்கு தேவையான ஆராய்ச்சிகளை மட்டுமே செய்கிறேன். இதில் சட்டம் மட்டுமன்று; எனக்கு நன்றாகத் தெரிந்த எல்லாவற்றிலும் செய்கிறேன். உண்மையை உடைத்துச் சொல்வதைத்தவிர, ‘வேறெதிலும் நான் எதிலும் வெறித்தனங் கொண்டவன் அல்ல’.

அவ்வளவே! இதேபோல, ஒரு வார்த்தையை (உண்மைக்காக உ(ய)ரிய) அதன் கருப்பொருள் மாறுபடும் வகையில், இரண்டு விதமாகப் பிரித்தும் சேர்த்தும் எழுதுவதை அறிந்திருப்பீர்கள். இதையெல்லாம் வெகுசிலர் மாத்திரமே பயன்படுத்துகிறார்கள். இதையெல்லாம் தாராளமாகப் பயன்படுத்திப் பாருங்கள். உங்களின் எழுத்தாற்றல் சிறக்கும்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒவ்வொரு வார்த்தையாக தட்டச்சு செய்வதற்குப் பதிலாக கூகுலில், ஓரிரு எழுத்துக்களை தட்டச்சு செய்தாலோ, அது தொடர்பான வாக்கியங்கள் தானாகவே வரும். ஆகையால் எளிதில் எழுதி முடித்துவிடலாம் என்று, அதன்பால் அடிமைப்பட்டுக் கிடக்கும் 100க்கு 90%
பேரில் சிலர் அறிவில்லாத்தனமாக அறிவுருத்துகிறார்கள். இப்படி அடிமைப்பட்டுக் கிடப்பதில் தமிழ் வெறியர்களும் உண்டு.

மேற்சொன்னவாறு நான் எழுத நினைக்கும் வார்த்தைகள் கூகுலில் கிடைக்குமா?

தமிழனுக்கு தன் தாய்மொழியில் எழுதத் தேவையான வார்த்தைகளை ஆங்கிலேயன்தான் உருவாக்கித் தரவேண்டுமா என்ன? அவன் உருவாக்கி தருவதுதான் அர்த்தமுள்ளதா, அழகானதா?! தனக்குத் தேவையான அர்த்தமுள்ள, அழகான வார்த்தையை வடிவமைக்க என்னைப்போன்ற சராசரி தமிழனுக்கு தகுதியில்லை என தமிழ்வெறியர்கள் நினைக்கிறார்களா??

தமிழ் வெறியகர்ளே சிந்திக்காத இச்சிந்தனைகளைகள் எல்லாம், மிகவும லாபகரமான முறையில் சம்பாதிக்க நினைக்கும் கூகுலின் நிர்வாக இயக்குனருக்கு இருக்குமா என்ன??? இப்படியே போனால், கூகுலில் உள்ள தமிழ் வார்த்தைகளைத் தவிர மற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற தடை உத்தரவு வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை!!

- வாரண்ட் பாலா​

தற்போது வாசிக்கப்படுபவை!